இன்று (பெப்ரவரி 21) அனைத்துலகத் தாய் மொழி நாள் (International Mother Language Day (IMLD)) என உலகளவில் கொண்டாடப்படுகின்றது. எமது தாய்மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது எல்லோரிற்கும் தெரிந்ததே, ஆனால் எமது மொழி அவ்வாறு ஏன் பெயர் பெற்றது? என்பது பலரிற்கும் தெரிந்திருக்காது.
கார்ல்டுவெல் (Robert Caldwell) என்ற அறிஞரே முதன் முதலில் தமிழ் மொழிப் பெயரிற்கான காரணத்தை பொது வெளியில் முன்வைத்தவர். அவர் ‘திராவிட’ என்ற சொல்லே தமிழாகியது என்ற வாதத்தினை முன்வைத்திருந்தார். பின்னர் அக் கருத்துத் தவறானது என்றும், மறுபுறமாக தமிழ் என்ற சொல்லிற்கான திசைச்சொல்லே (Exonym) திராவிடம் என்றும் பாவாணர் முதற்கொண்டு பல அறிஞர்கள் நிறுவியுள்ளார்கள்.
எனவே ‘தமிழ்’ என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதனை ஆராய வேண்டியுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியானது பழந் தமிழ்ப் பெயர்களிற்குக் கூடப் பொருந்தும். தமிழ் என்பதற்கான பொருளினை நிகண்டில் பார்த்தால் இனிமை / நீர்மை என்று காணப்படுகின்றது. இதனையும் கவனத்திற்கொண்டு எமது மொழிக்கான பெயர்க் காரணத்தினை ஆராய்வோம்.
தமிழ் மொழிக்கான பெயர்க் காரணத்தினை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வகைகளில் கூறியிருக்கின்றார்கள். தம் மொழியே தமிழானது என்றொரு கருத்துண்டு.
தம் + மொழி = தம்மொழி -> தமிழி -> தமிழ்.
அதாவது, எவ்வாறு ‘தம் + ஆய் = தாய்’ , ‘தம் + ஐயன் = தமையன்’ ஆகினவோ, அவ்வாறு தமது (தம்) மொழி தமிழாகியது என்பது ஒரு கருத்தாகும். ‘மொழிதல்’ என்றால் சொல்லுதல் / பேசுதல் எனப் பொருள்படும். அந்த வகையில் தமது மொழிக்கு இட்ட பெயர் தமிழ் என்பது இக் கருத்தாகும். அதே போன்று தம்+இல் (குடி) = தமில் > தமிழ் ஆனது என்று இன்னொரு கருத்துமுண்டு.
இவ்வாறு பல கருத்துகளிலிருந்தாலும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறியதொரு கருத்தே ஏற்புடையதாக எனக்குத் தோன்றுகின்றது. அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது. “ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது “அம்மு, அம்மு” என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது. அமிழ்து என்ற சொல் தோன்றியதைப் பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். என்ன? தமிழ், தமிழ் ஓசை வருகின்றதா. அதுதான் “தமிழ்” என்ற சொல் தோன்றிய வரலாறு”.
அவரது கூற்றுச் சரியானதா எனப் பார்ப்போம். அமிழ்தல் என்றால் உள்ளிறங்குதல் என்பது பொருளாகும் {எ.கா: இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78)}. நாம் இன்றும் பேச்சு வழக்கில் கூட ‘கடலில் அமிழ்ந்து போனான்’ என்கின்றோம் அல்லவா!. அவ்வாறுதான் ‘அமிழ்தல்’ என்பது உள்ளிறங்குதல் என்ற பொருள் பெறும். இவ்வாறு உள்ளிறங்கி சுவையீட்டுவதால் தாய்ப்பாலானது அமிழ்து (அமிழ்தம்) எனப்படும்.
அம்+இழ் = அமிழ் (அம்மாவிலிருந்து மலர்வது).
இவ் வேளையில் சமற்கிரதத்திலும் ‘அம்மிருத்’ என்றொரு சொல் உண்டு. அது மிருத்தியு (இறப்பு) என்பதன் எதிர்ச்சொல்லாகும் (அ+மிருத்தியு = இறப்பற்ற ). ‘அம்மிருத்’ என்ற சொல்லே அமிர்தம் ஆகி, அமிழ்தம் ஆயிற்று என்று வடமொழித் தாங்கலாளர்கள் கதை விடுவார்கள். அது முற்றிலும் தவறு. இரண்டும் வெவ்வேறான வேர்ச் சொல் விளக்கங்கள் கொண்டவை. ஒலிப்பதிலுள்ள சிறு ஒற்றுமை, இரண்டையும் ஒன்றாக்காது (தமிழில் ‘அமிர்தம்’ என எழுதாதீர்கள், அமிழ்து அமிழ்தம் எனத் தமிழ்ச்சொல்லையும், பாற்கடல் கடைந்தபோது வந்த அறிவிற்கொவ்வா வடமொழிச் சொல்லை ‘அம்மிருத்’ எனவும் எழுதுங்கள்).
படிக்க :
♦ சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !
♦ இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
மீண்டும் அமிழ்து என்ற சொல்லிற்கு வந்தால், தாய்ப் பாலினையே அமிழ்து என அழைப்போம் என்று மேலே பார்த்தோம். தேவைகருதிப் பிறபொருளிலும் அமிழ்து என்ற சொல் இடம்பெறும் (எ.கா: ‘அமிழ்தம் = மழை’ என குறளில் வரும்). இப்போது ‘அமிழ்து’ என்ற சொல்லினை இடைவிடாமல் மீண்டும் மீண்டும் விரைவாகச் சொல்லிப் பார்ப்போம்.
அமிழ்து, அமிழ்து, அமிழ்து >>>தமிழ்,தமிழ், தமிழ்.
இதுவே ‘தமிழ்’ என்ற சொல் பிறந்த கதையாகும். இவ் விளக்கத்திலுள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால்; மேலுள்ள ஏனைய தமிழ் மொழிப் பெயர் விளக்கங்களும், இந்த விளக்கத்துடன் பொருந்திப் போகின்றது. அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ் (அம்+இழ் = அமிழ்), ஆகின்றதோ, அவ்வாறு தம்மிலிருந்து மலர்வது தமிழ் (தம்+இழ் = தமிழ்) எனப்படும். அதே போன்று தமிழிற்கு நிகண்டு கூறும் பொருளான இனிமை / நீர்மை என்பதும் அமிழ்து (தாய்ப்பால்) என்பதுடன் பொருந்திப் போகின்றது. இவற்றினைக் கருத்திற்கொண்டே ஐயா இளங்குமரனாரின் தமிழ் மொழிக்கான பெயர் விளக்கம் ஏற்புடையது என்கின்றேன். பாவேந்தர் பாரதிதாசனின் பின்வரும் பாடலைப் பாருங்கள்.
“தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!”
மேலுள்ள பாடலில் “தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்று கூறியது மட்டுமன்றி, “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றும் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளதனைக் காணுங்கள். இப் பாடலானது அமிழ்து என்ற சொல்தான் தமிழ் என்றானது என்ற எமது நிலைப்பாட்டினை மேலும் வலுப்படுத்தும்.
தமிழ் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என மேலே பார்த்தோம். இப்போது எப்போது முதல் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்று எனப் பார்ப்போம். மொழிதல் என்ற சொல்லின் பொருளே பேசுதல் என்பதே, எனவே மொழியானது பேச்சு வழக்கிலேயே முதலில் தோன்றும். இந்த வகையில் ‘தமிழ்’ என்ற சொல்லும் பேச்சு வழக்கிலேயே முதலில் தோன்றியிருக்கும். இந்த செய்முறை ஒரு படிமலர்ச்சி முறையிலேயே இடம்பெற்றிருக்கும். அதாவது குழந்தை முதன்முதலில் பால் குடிக்கும்போது ஏற்பட்ட ‘அம்’ / ‘அம்மு’ என்ற ஒலியானது, அமிழ்து ஆகிப் பின்பு தமிழாகிய செயற்பாடனது ஒரு நீண்டகாலத்தில் படிமுறை, படிமுறையாக ஏற்பட்டிருக்கும். இங்கு பேச்சு வழக்கிற்குச் சான்றுகளைக் காட்டமுடியாது, என்பதனால் எழுத்து வடிவிற்கே நேரில் வருவோம். தமிழ் என்ற சொல் தமிழில் இன்று கிடைக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றது.
“தமிழென் கிளவியு மதனோ ரற்றே” : (புள்ளி மயங்கியல் 90).
இங்கு தொல்காப்பியத்தின் காலம் தொடர்பாகச் சில வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. பொதுக் கருத்தாக தொல்காப்பியக் காலம் BCE 500 எனக் கணிக்கப்படுகின்றது. தொல்காப்பியருக்குச் சமகாலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் என்பவரும் ‘தமிழ்’ என்ற சொல்லினை கையாண்டுள்ளார்.
படிக்க :
♦ RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
♦ மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !
“ வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து”
(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
சங்க இலக்கியங்களிலும் தமிழ் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
“வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே.” : (அகம்.31)
இப் பாடலைப் (அகம்.31) பாடியவர் மாமூலனார் எனும் புலவராவார். மாமூலனார் நந்தர்களையும் மெளரியர்களையும் பற்றிப் பாடுவதால், இவர் பொ.ஆ. மு. 320 க்கு (BCE320) முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது . இப் பாடல் நீங்கலாக மேலும் பல சங்ககாலப் பாடல்களில் ‘தமிழ்’ என்ற சொல் காணக்கிடைக்கின்றது .
“தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை” : {அகநானூறு 227-18}
“நளி இரு முந்நீர் ஏணி ஆக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்” { புறநானூறு 35}
இவ்வாறு ‘தமிழ்’ என்ற சொல் இடம்பெறும் சங்ககாலப் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இலக்கியச் சான்றுகளைப் பார்த்தோம். இப்போது கல்வெட்டுச் சான்றைப் பார்ப்போம். அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) என்பது புவனேசுவரம் (ஒரிசா) அருகே உதயகிரி, அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொது ஆண்டிற்கு முந்திய இரண்டாம் நூற்றாண்டில் (BCE 2nd cent) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக் கல்வெட்டின் 11 வது வரியில் கூறப்பட்டுள்ளவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவம் வருமாறு.
“……And the market-town(?) Pithumda founded by the Ava king he ploughs down with a plough of asses; and (he) thoyoughy breaks up the confederacy of the T(r)amira (Dramira) countries of one hundred and thirteen years ( or 1300 years), which has been a source of danger to (his) Country (Janapada)…….”
இங்கு காணப்படும் பிராகிருத மொழிச் சொல் “திராமிர சங்காத்தம்” (T(r)amira (Dramira) என்பதாகும். “திராமிர சங்காத்தம்” என்பது தமிழர் கூட்டணி (தமிழ் மூவேந்தர்) என்பதன் பிராகிரதச் சொல் வடிவமாகும் [தமிழை ஆங்கிலத்தில் ரமில்=Tamil என அழைப்பது போன்று]. மேலே வரும் கல்வெட்டு வாக்கியத்தில் “113” ஆண்டுகளா / “1300”ஆண்டுகளா என்ற குழப்பம் அறிஞர்களிடையே உண்டு. 113 ஆண்டுகள் எனக்கொண்டால், தமிழர் கூட்டணியின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பின்நோக்கிச் செல்லும் {BCE 3rd cent}. மாறாக, 1300 ஆண்டுகள் எனில், தமிழர் கூட்டணியின் காலம் BCE 15th cent என ஆகும். இதுவே தமிழ் என்றசொல்லின் திசைச்சொல்லிற்கான காலத்தால் முந்திய கல்வெட்டுச் சான்றாகும்.
இவ்வாறு எழுத்து மூலமான சான்றுகளினடிப்படையில் எமது மொழியானது சங்ககாலத்திலேயே ‘தமிழ்’ என்ற பெயர் பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. ஆனால், பேச்சு வழக்கில் அதற்கு முந்தியே அப் பெயர் பெற்றிருக்கும். பாரதியார் நாடு குறித்துப் பாடிய பாடலொன்று, இங்கு எமக்கு தமிழ் மொழி குறித்து மிகப் பொருத்தமாக அமைகின்றது.
“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்”
பொருள் – முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய்.
முடிவாக, மேற்கூறிய தமிழ்மொழிக்கான பெயர்க் காரணத்தினைக் கொண்டு பார்க்கையில் (அமிழ்து – தாய்ப்பால் – தமிழ்), தாய்மொழி என அழைப்பதற்குப் பொருத்தமான மொழியாக ‘தமிழ்’ மொழியினை விட எந்த மொழி அமையும்? இத்தகைய ஒரு சிறப்பான மொழியினை எமது அடுத்தடுத்த தலைமுறைகளிற்கும் கடத்துவோம் என இன்றைய தாய்மொழி நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
வி.இ. குகநாதன்
ஒரு மொழியை பேசக்கூடிய இனக்குழுவை சேர்ந்த, வெளியுலகம் அறியாத, பலர் பத்தாம்பசலித்தனம் காரணமாக தங்கள் மொழியை மட்டும் உயர்வாக நினைப்பார்கள். இது ஒருவகையான tribal mentality. குகநாதன் என்னும் இந்த கோமாளியும் மேற்படி ஆள் தான். அமிழ்து கிமிழ்து என பிளந்துகட்டி பிதற்றி உள்ளார். ஆந்திராவில் “தெலுங்கு தேட்ட கன்னட கஸ்தூரி அரவமு அர்தவானமு” என ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என இந்த தமிழ் கோமாளிகள் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். உலக தாய் மொழி தினமே வங்க மக்களின் மொழி உணர்வால் வந்தது. வெறும் அறுநூறு ஆண்டுகள் இலக்கிய மரபு கொண்ட வங்க மொழி நொபெல் பரிசு வாங்கி உள்ளது பழம் பெருமை பேசுவதில் என்ன இருக்கிறது?
`தமிழ்` பற்றிப் பேசும் போதெல்லாம் காண்டாகிறீர்களே சாமி. வழக்கொழிந்த ஆரிய மொழிப் பற்றா? . `அமிழ்து` என்ற விளக்கம் குறித்த இரா.இளங்குமரனார் ஐயாவின் உரை காணோளி வடிவிலுள்ளது. சென்று பாருங்கள். ஆரியத்தை வீழ்த்துவோம். தமிழ் காப்போம்.
நம்மைப் பற்றி நாம் எவ்வளவு நினைக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் நம்மைப்பற்றி நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியம். இந்த தமிழ் கோமாளிகளின் பிதற்றலால் தமிழ் மொழிக்கு வெளியுலகில் இயல்பாக கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காமல் போகிறது..
“ஆரியம்போல்_உலகவழக்கழிந்_தொழிந்து_சிதையாவுன்_சீரிளமைத்_திறம்வியந்து_செயன்மறந்து_வாழ்த்துதுமே.”.
சமஸ்கிரதத்தைப் பற்றி பிறர் நினைப்பது என்ன தெரியுமா?
செத்த மொழி.
ஒட்டுண்ணி.
பார்ப்பான் மணியாட்டிப் பிழைக்கும் மொழி.
சாமி போன்றோர் வயிறுவளர்க்கும் மொழி.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சமஸ்கிருத மொழிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. இந்த நாட்டில் தற்போது பேசப்படக்கூடிய பெரும்பாலான மொழிகளுக்கு சமஸ்கிருதம்தான் தாய் எனக் கூறுகின்றனர். திராவிட மொழிகளிலேயே சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம். அதற்கு இருக்கும் செல்வாக்கு தமிழ் மொழிக்கு நிச்சயம் இல்லை. கேரள மாநிலத்தில் மட்டும் தமிழ்மொழிக்கு கொஞ்சம் செல்வாக்கு உண்டு. அதனால் சமஸ்கிருத மொழியை செத்த மொழி பித்த மொழி என்றெல்லாம் பேசுவதால் தமிழ் மொழிக்கு எந்த பலனும் இல்லை. இங்கிருக்கும் தமிழ் அறிஞர்கள் பெரும்பாலும் கோமாளி பெருமான்களாக இருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு மிக முக்கியம் .இன்றைக்கு தமிழ் மொழி இந்தியாவில் இருக்கும் 30 மாநிலங்களில் ஒரு மாநிலத்தின் மொழி மட்டுமே. அந்த மாநில அரசாங்கத்தின் ஆட்சி மொழி மட்டுமே. இந்த அரசியல் சூழ்நிலை அடிப்படையில்தான் தமிழ்மொழி வளர்ச்சி குறித்து யோசிக்க வேண்டும்.
சமற்கிரதத்தில் வரும் ஒரு நாளிதழ், மாத இதழ் ஏதாவது உண்டா? செத்த மொழிக்கு ஏன் ஒப்பனை? ஏனைய மொழிகளை எல்லாம் சிதைத்துவிட்டது சமற்கிரதம். தமிழ் மட்டுமே தப்பியுள்ளது. விழித்தெழுவோம். சமற்கிரத ஒட்டுண்ணியினை சாகடிப்போம்.
Good one. Let the Tamil haters cry.
இங்க வி.இ.குகநாதன் எழுதியுள்ள தமிழ் இலக்கியம் போன்ற சிலாகித்துக்கொள்ள எதாவது ஒன்று தெலுகு , கன்னடத்தில் உண்டா? வளமற்ற மொழியான தெலுகு கன்னட பேசுபவர்கள் ….சிலாகிக்க ஒன்றும் இல்ல ….வங்க மொழிக்கு நோபல் கிடைக்கவில்லை …தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய /மொழிபெயர்த்த பாடலுக்குதான் நோபல் கிடைத்தது …
“வளமற்ற மொழியான தெலுகு கன்னட பேசுபவர்கள் ….சிலாகிக்க ஒன்றும் இல்ல ”
இது கிணற்றுத்தவைளை அல்லது குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் மனப்பாண்மை. மேற்கண்ட மொழிகளில் சங்க இலக்கியம் மாதிரி மிகவும் பழமைவாய்ந்த இலக்கியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றிலும் பழைய இலக்கியங்கள் உண்டு. தமிழுக்கு இல்லாத மற்ற பெருமைகள் அவற்றுக்கு உண்டு. நாவல் சிறுகதை புதுக்கவிதை ஆகிய நவீன இலக்கிய வடிவங்களில் கன்னமும் மலையாளமும் தமிழை விட சிறந்து விளங்குகின்றன. இன்று விமானத்தில் பறப்பவனிடம் என் தாத்தா பத்து யானைகளின்மேல் பயணம் போனார் என பெருமை பேசுவதால் என்ன பலன்? இங்கு இருக்கும் தமிழ் அறிஞர் கோமாளிகள் கூட்டம் அதைதான் செய்து மற்ற மொழிகளை துச்சமாக நினைக்கிறார்கள். ஆனால் இன்று தெலுங்கு, கன்னடம் ஆகியன எப்படி மாநில மொழிகளோ அது போல் தமிழும் ஒரு மாநில மொழி. வெட்டி பந்தாவுக்கு குறைச்சல் இல்லை.
அருமையான விளக்கம். சிறந்த எடுத்துக்காட்டுகள். என்ன! மற்றைய மொழிப் பற்றாளர்கள் கொஞ்சம் பொறாமை கொள்வார்கள். சிலர் கருத்துகள் பகுதியிலேயே ஒப்பாரி வைக்கின்றார்கள்.
தமிழ் வாழுகின்ற மிக தொன்மையான மொழி என்பதில் இருவேறு கருத்து இல்லை. இந்தக் கட்டுரையாளர் தமிழ் பெயர்க் காரணம் பற்றிப் பேசுகிறார். அது சரியா தவறா என பேசுவதை விடுத்து தமிழை இழிவுபடுத்திப் போடுவது எதற்காக. மட்டுறுக்காமல் போடுவார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் போடலாமா? உங்களைப் போன்றவர்களுக்கு எமது தமிழறிஞர்கள் ஏற்கனவே பதில் கூறியுள்ளனர். சமஸ்கிறிதம் தாய் மொழி என்றால் தமிழ் தந்தை மொழி. அதுமட்டுமல்ல இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்களில் சுமார் 70% தமிழ் கல்வெட்டுக்கள்தான். அப்படியேதும் சமஸ்கிறிதத்திற்கு இல்லை. அசோகரின் கல்வெட்டுக்கள் பாலி மொழி என்ற மக்கள் மொழியில்தான் உள்ளன. தமிழுக்கு அடுத்து அதிக கல்வெட்டுக்கள் இதற்குதான் உண்டு. சம்ஸ்கிறிதம் எழுத்து வடிவம் பெற்றது கிபி2ம் நூற்றாண்டுக்குப் பின்தான். ஆனால் கீழடி ஆய்வு மூலம் கிமு 5ம் நூற்றாண்டிலேயே மக்களின் எழுத்து மொழியாக தமிழ் இருந்துள்ளது தெரிய வருகிறது. இது பெருமையில்லையா? பெரியசாமி என்னதான் தொண்டை கிழியக் கத்தி கூப்பாடு போட்டாலும் உலக அரங்கில் தமிழின் பெருமையை சிறுமைப்படுத்திவிட முடியாது.