நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 05

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள் (தொடர்ச்சி…)

« முந்தைய பாகம்

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது.

இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ’சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனை யோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.

அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு :- அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வந்தியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.

இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும். தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு.

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள் முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள், நாட்டார் கட்டளையை எதிர்த்தனர்! சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.

அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும்.

அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள். இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).

பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் – சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ, செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிடமாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி.

இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5-ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்). இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைக் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.

இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்