தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை -இறுதிப்  பாகம்
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
தெய்வம் பற்றிய கதைப் பாடல்கள்

னி கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப் பாடல்களும். அம்மானைகளும் அடங்கும். வில்லுப் பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.

பெண் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்கள். அவற்றுள் வேதக் கடவுளரை நீக்கிவிட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன, இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.

தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே, பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்துகொள்ளாத தேவியர், இவற்றை பயத்தோடு தான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக் கூடியவை என்று நம்பினார்கள்.

படிக்க :

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்

‘யஷி’ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் – பண்பாட்டுக் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்து பல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப் பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகி விட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின் போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒரு நாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ, அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே.

சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாங்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும், சுடலை மாடனுக்கு ஊர்தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம். அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.

இவையாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக் கடவுளரில் சிவன், நாராயணன் முதலியோரைப் பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும் அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ்நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.

பௌத்த சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியனவையாயின. ஆனால் அவை உருமாறி, இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றிவிட்டு பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக்கூற்றை மெய்பிக்கும் சான்று.

சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்குப் பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.

பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவது போல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.

சமூக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் இவைபற்றி உழைக்கும் மக்களின் கருத்துக்களின் வரலாறு முழுவதையும் நாட்டுக் கதைப் பாடல் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.

இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன

1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?
2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?
3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?
4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?
5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.

(முற்றும்)
« முந்தைய பாகம்
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க