ண்மையில் படித்த இரண்டு செய்திகளை முதலில் சொல்லியாக வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேதி உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, ‘உலகில் மாசுப் பெருக்கத்துக்கான பெருங்காரணங்களில் ஒன்றாகிவிட்டது’ என்று குற்றம் சாட்டியிருந்தது. மற்றொருபுறத்தில், தமிழக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர், ‘இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது நிலங்கள் ஏற்புடையதாக இல்லை; இயற்கை உரங்களைக் கொண்டு நிலத்தை மீண்டும் நாம் செம்மையாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 1960-களின் தொடக்கப் பகுதியில் நான் சிறுவனாக இருந்தபோது நெடுஞ்சாலை ஓரத்து நன்செய் வயல்களில் ‘நவீன உர நிரூபண வயல்’ என்றெழுதி நடப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வந்தன. உயிரியல் தெழில்நுட்பத்தை எதிர்த்து வேளாண் அறிஞர் வந்தனா சிவா அண்மையில் எழுதிய புத்தகமும் என் நினைவுக்கு வந்தது.

நாற்பதாண்டுக் காலத்தில் இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே இதற்குப் பொருள்? ‘உள்ளது சிறத்தல்’ எனும் உயிரியல் கோட்பாட்டில் ‘காலம்’ பெற்றுள்ள இடத்தை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமோ? ‘இயற்கையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு’ என்று பாடிய சுந்தரரும் திரு.வி.க.வும் இப்போது பெரியாரைப் போல நமது மறுவாசிப்புக்கு உரியவர்களாகி விட்டார்கள்.

பயிர்த்துறையில் நடந்த மாற்றங்கள், பண்பாட்டுத் துறையிலும் நடந்தேறியுள்ளன. வேதி உரங்கள் ‘விஞ்ஞானப் போர்வையில் உருவாக்கிய எதிர்விளைவுகளை, பண்பாட்டுத் தளத்தில் தகவல் தொடர்புச் சாதனங்கள், பன்னாட்டு மூலதன உதவியுடன் உருவாக்கிவிட்டன. 14 செ.மீ. திரைப்பெட்டி, கிரிக்கெட் என்னும் இரண்டு நோய்கள் நம்முடைய ‘கொழுந்து’களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. “வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமாறுபோல” என்பது வைணவ உரை நயம். வேர்களைப் பற்றிய ஞானமில்லாமல், கல்வியில்லாமல், கொழுந்துகளைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்!’

… வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானதுதான்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தான் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும், என் தேடல் மனிதனை நோக்கியே. (நூலின் முன்னுரையிலிருந்து, பக்கம் 9,10)

… ‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம். இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் அமைதி. விரிவான ஆராய்ச்சி என்ற ஒளிவெள்ளத்திலே முழுக் காட்சியும் விளக்கம் பெறவேண்டும் என்ற பொருளும் இந்த உருவகத்திலிருந்து பெறப்படும்.

படிக்க:
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!
காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

‘தமிழ்’ என்பது முதல் கட்டுரையாக அமைந்திருப்பது தற்செயலானதன்று. தமிழ்ப் பண்பாட்டின் உருவாக்கம் பற்றிய புரிதல் நூல் நெடுகவும் இழையோடுகின்றது. புறச்சமயங்களாகத் திரித்துக் காட்டப்படும் சமண, பௌத்த மதங்கள் தமிழ்ப் பண்பாட்டைச் சமைத்ததில் ஆற்றிய பங்கு அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. சைவ, வைணவம் பற்றிப் பேசும் அதே வேளையில், சிறு தெய்வங்கள் பற்றியும், இப்பெருஞ் சமயங்கள் நாட்டார் சமயக் கூறுகளை எவ்வாறு கைவயப்படுத்திக்கொண்டன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன. தொ.பரமசிவன் கட்டமைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இசுலாமும் கிறித்தவமும் பிரிக்க முடியாத வகையிலேயே பிணைந்துள்ளன. சாதியைச் சமூகத்தின் முக்கிய அலகாக இனங்காணும் அதே வேளையில், சாதிக் கட்டுமானமும் கருத்தியலும், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அடிப்படை என்ற ஓர்மையும் ஐயத்திற்கிடமில்லாமல் வெளிப்படுகிறது. ‘கீழோர்’ மரபுகளைக் கணக்கிலெடுக்காமல் தமிழ்ப் பண்பாடு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றது. மொத்தத்தில், அடிப்படை வாதங்களுக்கு எதிரான ஜனநாயகக் கூறுகளோடுதான் தொ.ப. முன்வைக்கும் தமிழ்ப் பண்பாடு விளங்குகின்றது. நுவலப்படுகின்ற பொருள்களின் சமகாலப் பொருத்தப்பாட்டையும் ஆங்காங்கே சுட்டிக்காட்ட, தொ.ப. தவறவில்லை.

பொருண்மைப் பண்பாடு (material culture) எனப்படும் துறையில் தமிழியல் ஆய்வாளர்களின் கவனம் போதுமான அளவு குவியவில்லை. மிக அடிப்படை நிலையில், தொல்லியலாளர் மட்டுமே அக்கறை கொள்வதாக அமைந்துவிட்ட இத்துறையில் உரல், உலக்கை, உணவு, உடை என்று முதற்படிகளை இந்நூல் எடுத்துவைத்துள்ளது. தாம் புழங்கும் சமூகம் பற்றி வாயில்லாப் பொருள்களுக்குச் சொல்வதற்கு நிறைய உண்டு. தொ.ப. அவற்றுக்குச் செவிமடுக்கத் தொடங்கினார்.

எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடன்றி, அதன் மீது எய்யப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தப்படும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை இந்நூல் காட்டுவதாகவே நான் கொள்கின்றேன். (ஆ.இரா.வேங்கடாசலபதியின் அணிந்துரையிலிருந்து, பக்கம் 15,16)

நூல் : அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் : தொ.பரமசிவன்

வெளியீடு : காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001.

பக்கங்கள்: 136
விலை: ரூ. 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

3 மறுமொழிகள்

 1. வினவு தோழர்களுக்கு,
  தோழர் மதிமாறன் பேராசிரியர் தொ.பரமசிவம் குறித்து தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவர் என கடுமையாக விமர்சித்திருக்கிறாரே..!
  வினவில் இது குறித்தான கட்டுரையை எதிர்பார்க்கிறோம்..
  மதிமாறனின் காணொளியை youtubeல் “அப்போ பெரியாரை பாசிஸ்ட்ன்னு சொல்லலாமே” என்ற தலைப்பில் தேடிப்பார்க்கவும்

  • சிறுதெய்வ வழிபாடு என்று ஜாதிய வழிபாட்டை ஆதரிக்கிறார் தொ.பரமசிவம்
   பாரதியஜனதா பார்ட்டி என்று பாரதியாரை விமர்சித்து தோழர் வே.மதிமாறன் எதிய புத்தகத்தை விமர்சிக்க நடந்த கூட்டத்தில் தோழர்
   மதிமாறனை பாசிஸ்ட் என்று கடுமையாக விமர்சித்துள்ளது
   பார்ப்பனர்களுக்கு ஆதரவாக மாறிய குரலாகத்தான் பார்க்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க