பிப்ரவரி 24, இந்தியத் தலைநகரின் ஒருபகுதி கலவரக்காரர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தது…

டெல்லியிலிருந்து வீடு திரும்பாத தன் கணவரின் நிலை குறித்து பயத்தாலும், பதட்டத்தாலும், தவித்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி..

திடீரென ருக்க்ஷனா பனோவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்த அழைப்பு ஒரு கணம் அவரை எரிச்சலுறச் செய்தது. அவர் எதிர்பார்த்த அழைப்பு இதுவல்ல. ஒருவழியாக அழைப்பொலியின் இறுதிக் கட்டத்தில் பதிலளித்தவருக்கு எதிரில் ஒலித்த அந்தக் குரல், இத்தனை நேரமாய் கலவரமடைந்த இதயம் கேட்க நினைத்த குரல். அது அவர்தான், அவருடைய கணவர் ஃபிரோஸின் குரலேதான். அவரைத் தாக்கிய கும்பலிடமிருந்து தப்பித்து பாதுகாப்பாக இருப்பதாக ருக்க்ஷனாவிற்கு  நம்பிக்கை அளித்து அழைப்பை துண்டித்தார்.

ருக்க்ஷனா பனோ தனது குழந்தைகளுடன்.

நிம்மதிப் பெருமூச்சுவிட்டவாறே, பதட்டத்திலிருந்த தனது குடும்பத்தினரை அமைதிப்படுத்தினார் ருக்க்ஷனா. ஆனால், அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இதுதான் அவரது கணவருடனான இறுதிப் பேச்சாக இருக்குமென்று.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பின் முகமாக இருந்த டெல்லியின் ஷாஹின்பாக்கை பின்பற்றி நாடே எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24 அன்று மதிய வேளையில் காவிகளின் வன்முறை வெடித்தது. கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன.  20 -க்கும் மேற்பட்டோர் கும்பல், இரும்பு ராடுகளாலும், தடிகளாலும் நீளமான வாள்களுடன் “ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” முஸ்லீம்களை கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டே பலரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொண்டிருந்தார்கள். மசூதிகளின் மாடங்கள் தகர்க்கப்பட்டு காவிகளின் கொடிகள் பறந்தது, இரவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வீதிகளில் வெட்டப்படும் பிணங்களாக ஓடிக் கொண்டிருந்தார்கள். பயந்து வீடுகளை பூட்டிக் கொண்டவர்களின் கதவுகளை பெரிய கட்டைகளாலும் இரும்பு ராடுகளாலும் தகர்த்து அவர்களை  வீதிகளில் வீசியெறிந்து கம்பிகளாலும் கட்டைகளாலும் தாக்கினர்.

அன்று குஜராத் டெல்லியில் இருந்தது.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்

நாடெங்கும் அனைவரின் மனதையும், பற்றியெரிந்த டெல்லியின் சாம்பல் மட்டுமே கவ்வியிருந்தது. கலவரம் தொடங்கியபோது பலரும் நாட்டின் தலைநகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் காசியாபாத்தின் லோனியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஃபிரோஸ் அகமது. அவரை  வழியிலேயே  ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது, அவரது அடையாள அட்டைகளை காட்டும்படி மிரட்டினார்கள். அவர் ஒரு “முஸ்லீம்” என்று தெரிந்தவுடன் ஃபிரோஸை கடுமையாகத் தாக்கத் துவங்கியது அந்த கும்பல். தேசத்தின் தலைநகரில் இஸ்லாமியன் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார்.

அவரது கால்கள் உடைக்கப்பட்டது, கைகள் உடைந்து நொறுங்கியது ஒருவழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பித்து புஷ்தா சாலையின் கரவால் நகர் ஷாஹீத் பகத் சிங் காலனிவரை  உடைந்த கால்களால் ரத்தம் ஒழுகும் உடலின் மிச்ச உயிரையும் காப்பற்றிகொள்ள தன்னைத் தானே இழுத்துச் சென்றார் அவர்.

கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்க அங்கு நின்ற ஆட்டோவில் பதுங்கிகொண்டவரை அருகில் இருந்த தௌசீஃப் ஆலமின் (Tauseef Alam) குடும்பத்தினர் மீட்டு தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்தபோதுதான் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே அவருக்கு பிறந்தது. உடனே, கலவரத்தின் அச்சத்தால் பயந்துகொண்டிருக்கும் கர்ப்பிணி மனைவியான ருக்க்ஷனாவிற்கு, தான்  உயிரோடு இருப்பதாகவும் ஆபத்திலிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறி அவரை தேற்றினார். ருக்க்ஷனாவிற்கு அவரிடமிருந்து வந்த இறுதியான அழைப்பு இதுதான் அதன் பிறகு அவரது குரலை அவர் கேட்கவேயில்லை.

அச்சத்தால் ஒடுங்கியிருந்த ருக்க்ஷனாவின் குடும்பத்திற்கு ஃபிரோஸின் அழைப்பு அவர் தப்பித்துவிட்டார் உயிரோடு இருக்கிறார் என்றளவில் மட்டுமே தெரியும். அவரது நரம்புகள் அறுபட்டு வழியும் உதிரத்தையோ, கை கால்களின் எலும்புகள் இரும்பு ராடுகளால் அடித்து உடைக்கப்பட்டதோ தெரியாது. தங்களின் அன்புக்குரிய தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்றே அந்த நான்கு குழந்தைகளும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

படிக்க:
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை  முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.

கலவரம் தொடங்கிய மறுநாள் பிப்ரவரி 25 அன்று, வீடு வீடாக இஸ்லாமியர்களைத் தேடித் தேடி  கொன்றுகுவித்து வந்த கலவரக்காரர்களின் கும்பல் ஆலமின் வீட்டிற்குள் நுழைந்தது. அவரது வீட்டை கொள்ளையடித்து பொருட்களை அடித்து உடைத்துக்கொண்டிருந்த கும்பல் வீட்டின் படுக்கையின் பின்னால் உயிருக்கு அஞ்சிப் பதுங்கிகிடந்த ஃபிரோஸை பார்த்துவிட்டது.

அவ்வளவுதான் அச்சத்தால் மிரண்டுபோயிருந்த ஃபிரோஸின் உடைந்த காலைப் பிடித்து ஈவிரக்கமின்றி தர தரவென்று இழுத்து  வீதியின் வெளியே வீசியெறிந்த அந்த கும்பல் அவரை பைப்புகள், இரும்பு ராடுகளாலும் அடித்து நொறுக்கி ஆட்டோவில் வீசி தீ வைத்து எரித்துக் கொன்றது. ஆலமின் குடும்பத்திற்கு முன்னால் எல்லாம் கணநேரத்தில் நடந்து முடிந்தன.

அந்தக் கலவரத்தில் ஃபிரோஸ் கொல்லப்படுவதற்கு ஒரு இஸ்லாமியனாக இருந்ததே போதுமானதாக இருந்தது அந்த கும்பலுக்கு.

இப்பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்க்காலில் இருந்து சில பிணங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

கலவரத்தில் சிக்கிய கணவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாத கர்ப்பிணி ருக்க்ஷனாவிற்கு  ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த துயரச் சம்பவம் ஆலமின் மூலம் தெரிய வந்ததது.

ஃபிரோஸ் கொல்லப்பட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவர்கள், ஃபிரோஸின் உடலையாவது பார்த்துவிடத் துடித்தனர். டெல்லியின் எல்லா மருத்துவமனைகளின் பிணவறைகளிலும் ஒவ்வொரு நாளும் தேடி அலைந்தார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ ஆலமின் வீட்டில் இருந்த ஃபிரோஸின் காலணி மட்டும்தான்.

பாதி எரிந்த நிலையில் அவர்களது தந்தையின் உடல் புஷ்டா சாலைக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டபோது அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனம் எத்தகைய வேதனையை சுமந்திருக்கும்… அப்போது காவிகளின் வன்முறை வெறி ஃபிரோஸ் உள்பட 53 பேரை கொன்றிருந்தது.

வாழ்க்கை அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, தனது கணவனை இழந்து  குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து வருகிறார் அந்த கர்ப்பிணித்தாய். தந்தையை இழந்து தவிக்கும் அவரின் குழந்தைகள் தினமும் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

14 வயதேயான டினா, தானும் கலவரத்தில் தந்தையோடு இருந்திருக்க வேண்டுமென்று கூறியழுகிறாள். அந்தச் சிறுமியின் துயரத்தை எவ்வாறு வார்த்தைகளில் அடக்குவது ?

இந்த வழக்கில் ஃபிரோஸைக் கொன்ற கொலைகார கும்பலை போலிசுக்கு அடையாளம் காட்டியும் அவர்கள் வீதிகளில் சுதந்திரமாக சுற்றிவருகிறார்கள். கொலையை கண்ணால் கண்ட நேரடி சாட்சியங்கள் இருந்தும் போலிசு எந்தவித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.

மூன்று நாட்களாக நடந்தேறிய வன்முறையில் இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தெருக்களில் விரட்டி விரட்டி கொன்றபோது போலிசு வேடிக்கை பாரத்ததை நாடே பார்த்திருந்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களின் சதித்திட்டம்தான்  இந்த கலவரம் என்று கூசாமல் பொய் சொல்கிறது டெல்லி போலிசு.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க-வின் தலைவர்கள் கபில் மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் போராடிய இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக மதமோதலை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் மீது வழக்கு பதிய டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகளோ இடமாற்றம் செய்யப்பட்டார்கள். வடகிழக்கு டெல்லியின் இஸ்லாமிய இளைஞர்களை கலவரக்காரர்கள் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டர்கள். உரிமைகளுக்காகப் போராடிய ஜாமிய மிலியா, டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்களையோ ஆர்.எஸ்.எஸ்  குண்டர்களோடு சேர்ந்தே  தாக்குதல் நடத்தியது போலிசு. கர்ப்பிணி மாணவியான சஃபூரா சரக்காரை பயங்கரவாதி என சிறையில் தள்ளியது போலிசும் நீதித்துறையும்.

அரசின் அனைத்து அங்கங்களிலும் மிச்சமிருக்கும் ஜனநாயகத்தின் ரத்தம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு பாசிசத்தின் ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.

குஜராத் இந்துத்துவ சோதனைச்சாலையின் நுழைவு வாயில், இந்தமுறை நாட்டின் தலைநகரிலேயே  திறந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கக் காத்திருக்கிறது.

நாம் என்ன செய்யப்போகிறோம்..?


பாலன்

செய்தி ஆதாரம் : த வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க