உத்தரப்பிரதேசம்: கன்வர் யாத்திரைக்காக சூறையாடப்பட்ட 17,000 மரங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 9, 2024 வரை மூன்று மாவட்டங்களிலும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது 33,776 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

த்தரப்பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரைக்கான பாதை அமைக்கும் பணிக்காக 17,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த யாத்திரைக்காக காஜியாபாத்தில் உள்ள முராத்நகர் மற்றும் முசாபர்நகரில் உள்ள புர்காஜி இடையே பாதையை அமைக்க உத்தரப்பிரதேச யோகி அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இப்பாதை அமைக்கும் பணிக்காக காசியாபாத், மீரட் மற்றும் முசாபர்நகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 17,600 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) பசுமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தமாக 33,776 மரங்களை வெட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், கன்வர் யாத்திரைக்கான பாதையை அமைக்கும் திட்டத்திற்காக மூன்று மாவட்டங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 722 மரங்களை வெட்ட யோகி அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனையடுத்து இவ்விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் வழக்கை விசாரிக்க நால்வர் அடங்கிய நீதிமன்ற கூட்டுக் குழுவை அமைத்தது. இந்த கூட்டுக் குழுவானது சமீபத்தில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இவ்வறிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 9, 2024 வரை மூன்று மாவட்டங்களிலும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது 33,776 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தின் மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1976 விதிகளின்படி, வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாலை அமைப்பதற்காக வெட்டப்படும் செடிகள், மரங்கள், புதர்கள் போன்றவை, 33,766 மரங்களில் கணக்கிடப்படவில்லை, அவை சட்டத்தின்கீழ் மரத்தின் வரையறைக்குள் வருமா என்பதையும் அரசு தெளிவுபடுத்துமாறு உத்தரவில் தெரிவித்துள்ளது.


படிக்க:ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்


கன்வர் வழித்தடத்தை அமைக்கும்போது வெட்டப்படும் மரங்களின் சரியான எண்ணிக்கையை விவரித்து, சுற்றுச்சூழல் கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இருந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, இந்துமுனைவாக்க நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் அரசிடம், அதனை ‘முறைப்படி’ செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெஞ்சி கேட்கிறது.

கங்கை நதிக்கரையையொட்டிய வழிபாட்டு தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, நீரை எடுத்து வந்து, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவிலுக்கு வழிபாடு செய்யும் மத வழக்கமே கன்வர் யாத்திரையாகும். இந்த யாத்திரை உத்தரப்பிரதேசம், டெல்லி, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. இதனை தங்களது இந்துமுனைவாக்க நோக்கத்திற்காக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் இந்த ஆண்டு பல இடங்களில் இஸ்லாமியர்கள் மீது இந்துமதவெறி தாக்குதல்களை அரங்கேற்றியது.

இதில் ரௌடி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கன்வர் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம், உத்தரப்பிரதேச அரசு அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு இந்து மதத்தை சேர்ந்த மக்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உத்தரப்பிரதேச அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் யாத்திரையின் ஊடாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்நிலையில்தான், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, புனித தலங்கள் என்ற பெயரில் தனது காவி-கார்ப்பரேட் நோக்கத்திற்காக உத்தராகண்டின் ஜோஷிமத் நகரை பா.ஜ.க. கும்பல் பலியிட்டு வருகிறது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் காவி கும்பல் தனது பாசிச நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியுள்ளது, இன்னும் பல ஆயிரம் மரங்களை வெட்ட திட்டமிட்டுள்ளது. மதவெறி, இனவெறி, சாதிவெறிப்பிடித்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலானது இயல்பிலேயே சுற்றுசூழலுக்கும் இயற்கைக்கும் விரோதமானது என்பதை இச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க