த்திரப் பிரதேசம் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலையாக மாற்றப்பட்டிருப்பதை, அம்மாநில முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது அம்மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் கும்பல் அடுத்தடுத்து ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலில் தளபதிகளாகச் செயல்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீதும்; இத்தாக்குதலை நடத்துவதற்காக உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காலிகள் மீதும் இதுநாள் வரையில் ஒரு முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

அதேசமயம், உ.பி.யிலோ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முசுலிம்கள் மீதும், அப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஜனநாயக சக்திகள் மீதும் அடுத்தடுத்துப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, அவர்கள் அனைவரையும் தேசத் துரோகிகளாக, அரசின் எதிரிகளாகப் பொது வெளியில் சித்தரிக்கும் ஆள்காட்டி வேலையைச் செய்து முடித்திருக்கிறது, யோகி ஆதித்யநாத் அரசு.

உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களின் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர். சிறுவர்கள் உள்ளிட்டு 1,640 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் மீதும் 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. 27 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இக்கிரிமினல் வழக்குகள் உ.பி. போலீசால் புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பது முதற்கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகிவிட்டது. எனினும், இந்து மதவெறி பாசிஸ்டான யோகி ஆதித்யநாத்தின் பழி தீர்க்கும் வெறியோ சற்றும் அடங்கிவிடவில்லை.

உ.பி. தலைநகர் லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்துவிட்டவர்களுள் 57 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய தட்டிகளை லக்னோ நகரின் 100 இடங்களில் நிறுவி, அவர்கள் அனைவரையும் அரசின் எதிரிகளாக அடையாளப்படுத்தி அவமதிக்கும் சட்டவிரோதமான, கீழ்த்தரமான தாக்குதலை ஏவியிருக்கிறது, ஆதித்யநாத் அரசு.

இந்த ஆட்காட்டி வேலையின் தொடர்ச்சியாக, அந்த 57 பேரும் ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் இறங்கி அரசு மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் அனைவரும் 1.56 கோடி ரூபாய் நட்ட ஈடும், அத்தொகையின் மீது 10 சதவீத வசூல் கட்டணத்தையும் சேர்த்து, மொத்தத் தொகையையும் உடனடியாகக் கட்டக் கோரும் நீதிமன்றத் தாக்கீதையும் அனுப்பி வைத்திருக்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி விளம்பரத் தட்டிப் பிரச்சாரத்தைத் தானே முன்வந்து, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து, விடுமுறை தினமான ஞாயிறு என்றும் பாராமல் விசாரித்தது. அவ்வமர்வு இந்த ஆட்காட்டி நடவடிக்கையை, “அரசியல் சாசனப் பிரிவு 21 மற்றும் தனி மனித உரிமைக்கு எதிரானது எனச் சுட்டிக் காட்டியதோடு, அரசின் நிறச் சார்பை (colourable exercise) வெளிக்காட்டுகிறது” என்றும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தச் சுவரொட்டிகளை உடனே அகற்ற வேண்டுமென்றும், அகற்றப்பட்டது குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

உ.பி. மாநில இந்து மதவெறி அரசோ ஆட்காட்டி விளம்பரத் தட்டிகளை அகற்றுவதற்குப் பதிலாக,  அவற்றை அகற்றச் சொன்ன உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ததோடு, அந்த 57 பேர் மீதும் குண்டர் சட்டத்தை ஏவித் தனது பாசிச குரூரப் புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது.

இந்த 57 பேர் மீதான வழக்குகள் முடிவடையாத நிலையில், அவர்களுள் ஒருவர்கூட இன்னும் எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையில் அவர்களின் புகைப்படங்களையும் முகவரிகளையும் சுவரொட்டியில் அச்சிட்டு வெளியிட்டது அடிப்படையிலேயே சட்டவிரோதமானது என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

ஆனால், இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வோ, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருப்பதால், அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்கப் பரிந்துரை செய்து தீர்ப்பளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டுவிட்டது.

உ.பி. அரசின் இந்த ஆட்காட்டி நடவடிக்கையை அரசியல் சாசனப் பிரிவு 21-க்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய பிறகும்கூட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கைச் சட்டரீதியாக ஆராய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருப்பது இந்து மதவெறிக் கும்பலுக்குக் காட்டப்பட்ட சலுகை தவிர வேறில்லை.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !

இந்தச் சலுகையை அளித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவர் நீதிபதி யு.யு.லலித் என்பது குறிப்பிடத்தக்கது. யு.யு. லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தபோது, சோராபுதின் போலி மோதல் கொலை வழக்கில் அமித் ஷாவின் சார்பாக வழக்காடி வந்தார். அதற்குச் சன்மானமாக, நரேந்தர மோடி மே 2014-இல் பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே யு.யு. லலித்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை அளித்தார் என்பது சமீபத்திய வரலாறு.

உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கப் பரிந்துரைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வசூலிப்பதற்கு ஏற்றவாறு போடப்பட்ட அரசு உத்தரவைச் சட்டமாக இயற்றிக் கொண்டுவிட்டது, யோகி ஆதித்யநாத் அரசு.

***

“லக்னோ நகரில் வன்முறையைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்ட இந்த 57 பேரும் செல்வாக்குமிக்க நபர்கள்; இவர்கள் தமது செல்வாக்கைக் கொண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவார்கள்” என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதாடியது, உ.பி. அரசு. ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது.

இந்த 57 பேரில், லக்னோ-ஹஸன்கஞ்ச் பகுதியில் வசித்துவரும் இருபது வயதான கல்லூரி மாணவன் ஒசாமா சித்திக்கும் ஒருவன். சித்திக்கும் அதே பகுதியில் வசித்துவரும் வேறு பன்னிரெண்டு பேரும் 21.76 இலட்ச ரூபாய் நட்ட ஈடாகத் தர வேண்டுமென தாக்கீது அனுப்பியிருக்கிறது, உ.பி அரசு.

சித்திக்கை கலவரம் நடந்த பகுதியில் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறுகிறது, போலீசு. ஆனால், மதியம் இரண்டு மணி வரை வீட்டில் இருந்த சித்திக், தனக்குத் தேவையான எழுது பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்தபோது போலீசார் அவனைப் பிடித்துக் கைது செய்துவிட்டதாகக் கூறுகிறார், சித்திக்கின் தாய்.

“தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் தள்ளியுள்ள பகுதிக்குக் கலவரம் நடந்த சமயத்தில் வர வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு சித்திக் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, நீதிமன்றம். அதேசமயம், சித்திக் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்கோ, வன்முறையில் இறங்கியதற்கோ எந்தவிதமான நேரடியான ஆதாரம், சாட்சியங்களை போலீசும் அளிக்கவில்லை. எனினும், நட்ட ஈடு கேட்டு சித்திக்கிற்கு நீதிமன்ற நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.

சித்திக்கின் தந்தைக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையெதுவும் கிடையாது. அவர்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வாடகைப் பணம்தான் குடும்ப வருமானம். “இப்படிப்பட்ட நிலையில் எங்களால் எப்படி நட்ட ஈடைச் செலுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், சித்திக்கின் தாய்.

உ.பி. அரசால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 25 பேரின் வழக்குரைஞரான ஆஷ்மா இஜ்ஜத், “தனது கட்சிக்காரர்கள் பெரும்பாலோர் தினக் கூலிகள். சிலரோ வேலையில்லாத பரம ஏழைகள். இந்த 25 பேரில் ஒருவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாசீம் சையத் சிறிய உணவகமொன்றில் உணவு பரிமாறும் தினக் கூலி. கலீம் என்பவர் ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்திவரும் ஏழைத் தொழிலாளி. நட்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டவர்களுள் இருவர் சிறுவர்கள்” எனப் பட்டியில் இடுகிறார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் முகம்மது ஆனஸ், வணிகவியல் பட்டப்படிப்புப் படித்துவரும் மாணவன். சம்பவ நாளன்று தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்று வழக்குப் போட்டதாகக் கூறுகிறார், ஆனஸ்.

உ.பி. அரசால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகம்மது தாரிக், கல்லூரி மாணவன். “தனது தந்தைக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றிருந்த தன்னை போலீசு பிடித்துச் சென்றதாகவும், அப்பொழுது ஆர்ப்பாட்டம் தொடங்கியிருக்கவேயில்லை” என்றும் கூறுகிறார், தாரிக்.

லக்னோவின் பரிவர்தன் சௌக் என்ற பகுதியில் இருந்து மட்டும் 15 இளைஞர்களை, அவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது பிடித்துச் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. அரசு. இவர்கள் அனைவருமே அந்தப் பகுதிகளில் உள்ள சிறு உணவகங்களில் வேலை செய்து வரும் தினக்கூலிகள். இவர்களுள் ஒரு சிலர் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசுலிம்கள் என்பதைச் சாக்காகக் கொண்டு, அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த ‘ஊடுருவிகள்’ எனக் குற்றஞ்சுமத்தி, தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது, உ.பி. போலிசு.

உ.பி. அரசால் குற்றவாளியென அடையாளப்படுத்தப்பட்டிருப்பவர்களுள் முன்னாள் ஐ.பி.எஸ். போலீசு அதிகாரியும் அம்பேத்கர் இயக்கமொன்றை நடத்தி வருபவருமான எஸ்.ஆர்.தாராபுரியும் ஒருவர். உ.பி. மாநிலமெங்கும் குடியுரிமைச் சட்டத் திருத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19-ஆம் தேதிக்கு முன்பே அவரை வீட்டுக் காவலில் அடைத்துவிட்டது உ.பி. போலீசு. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாளன்று அவர் தனது முகநூலில், “அரசியல் சாசனத்தைக் காப்போம்” எனப் பதிவிட்டதால், மறுநாள் காலையில் தாராபுரியைக் கைது செய்த போலீசு, தனது குற்றப்பத்திரிக்கையில் டிசம்பர் 20 அன்று இரவு ஏழு மணிக்கு தாராபுரியைப் பொது இடத்தில் வைத்துக் கைது செய்ததாகப் புளுகியிருந்தது. நீதிமன்றமும் இந்தப் புளுகை மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டு, தாராபுரியைச் சிறைக்கு அனுப்பியதோடு, அவர் அரசுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென்றும் தாக்கீது அனுப்பியிருக்கிறது.

ரிஹாய் மஞ்ச் என்ற பெயரில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் மூத்த வழக்குரைஞரான முகம்மது ஷோயிப்பும் தாராபுரியைப் போலவே, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உ.பி. போலீசின் போலி மோதல் கொலைகளைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் முகம்மது ஷோயிப்பைப் பழிதீர்த்துக் கொள்ளக் காத்திருந்த உ.பி. அரசு இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியதோடு, சுவரொட்டியில் புகைப்படமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியிருக்கிறது.

உ.பி. மாநிலத்தில் மிகப் பிரபலமான ஷியா மத போதகர் கல்ரே சாதிக்கின் மகனான கல்பே சிப்தைன் நூரியும் அவரது நண்பருமான மௌலானா சாயிப் அப்பாஸும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற டிசம்பர் 19 அன்று இமாம்பதா என்ற பகுதியில் முசுலிம்கள் மத்தியில் அமைதியாக இருக்கும்படி பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்கள் முசுலிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததையே சாட்சியமாகக் காட்டி, கலவரத்தைத் தூண்டிய சதிகாரர்கள் என அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுத்திருக்கிறது, உ.பி. போலீசு.

உ.பி போலீசால் கைது செய்யப்பட்ட ஏழை முசுலிம்களின் வாக்குமூலத்தை மட்டுமல்ல, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி, மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரும் சமூகச் செயல்பாட்டளுருமான சதாஃப் ஜாபர் ஆகியோரும் தம்மை போலீசார் கெடுமதி நோக்கத்தோடு வழக்கில் இணைத்திருப்பதாக அளித்த வாக்குமூலங்களையும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதி காது கொடுத்துக் கேட்கவில்லை. மாறாக, “10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 57 பேர் மீது மட்டுமே நட்ட ஈடு கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருப்பது, உ.பி. போலீசின் திறமையின்மையைக் காட்டுவதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அரசனை விஞ்சிய விசுவாசி போலும் அந்நீதிபதி!

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

சுவரொட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 57 பேரில் 52 பேர் முசுலிம்கள் என்பது தற்செயலானது அல்ல. யோகி ஆதித்யநாத் அரசு தனது முசுலிம் வெறுப்பு-காழ்ப்புணர்ச்சியை இந்நடவடிக்கையின் மூலம் மிகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருப்பதோடு, யார் போராடினாலும் அவர்களுக்கும் இதே கதிதான் எனப் பீதியூட்டவும் இந்நடவடிக்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. உ.பி மாநில அமைச்சரும், அவ்வரசின் பத்திரிகை தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங், “யோகி அரசுக்கு எதிராகப் போராடத் துணிபவர்களை இப்படி விளம்பரப்படுத்தி அவமானப்படுத்துவது தடுப்பு நடவடிக்கையைப் போன்றதாகும்” எனக் கூறி, இச்சட்டவிரோதச் செயலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தியிருக்கிறார்.

அவ்விளம்பரத் தட்டியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 57 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை உ.பி. அரசு அத்தட்டிகளில் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர்களைத் தேசத்தின், அரசின் எதிரிகளாக காட்டியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்படும் அபாயகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான இன அழித்தொழிப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக, யூதர்களை இழிவான வெறுக்கத்தக்க குடிமக்களாகவும், இட்லரைத் தேவதூதனைப் போன்றும் சித்தரிக்கும் சுவரொட்டி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும், உ.பி.யில் அச்சட்டத்திற்கு எதிராகப் போராடத் துணிந்த முசுலிம்களை, ஜனநாயக சக்திகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்தச் சுவரொட்டிப் பிரச்சாரமும் நாடு இட்லரின் பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

– குப்பன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க