♦ கொரோனாவை கட்டுப்படுத்துவதைவிட பேராசிரியர். ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகாவை சிறையிலடைப்பதில் தீவிரம் காட்டும் மோடி அரசு!
♦ ஊபா (UAPA) உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய் !
***
வரும் ஏப்ரல் – 14ந் தேதி மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலாதப்பர், எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்டவர்கள் கோரினர். அதனை நிராகரித்தது மட்டுமின்றி, இவர்கள் இருவரையும் சிறையிலடைப்பதிலும் தீவிரம் காட்டுகின்றது உச்சநீதிமன்றம்.
பாசிச ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள அவர்களது கைதுக்கு முந்தைய பிணை (pre-arrest bail) மனுக்களை கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று போலீசாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. அதனை பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி என நீட்டித்தது. உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி ஒரு பொய்வழக்கு போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து விசாரணையை மேற்கொள்ளாமலேயே, பிணை மறுக்கப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர்.
2018-ஆம் ஆண்டின் பீமா கோரேகான் நிகழ்வைத் தொடர்ந்து, “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டு சதி” என்ற பெயரில் புனையப்பட்ட பொய்வழக்கில் ஏற்கெனவே சுதா பரத்வாஜ், வெர்னன் கொன்சால்வேஸ், அருண் பெரேரா, தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 9 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பொய் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விருவரும் இப்போது பாசிச ஊபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்படுகின்றனர்.
படிக்க:
♦ செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
மகாராஷ்டிராவின் புனே நகரப் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான முதல் தகவல் அறிக்கை, அதைத் தள்ளுபடி செய்யக்கோரி ஆனந்த் தெல்தும்டே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நிராகரிப்பு, பிணைபெறும் பொருட்டு உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம், அதை மீறி புனே போலீசாரின் கைது நடவடிக்கை, அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் தெல்தும்டே தாக்கல் செய்த கைதுக்கு முந்தைய பிணை மனுவினை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.
இப்பாசிச ஊபா சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை எவ்விதக் காரணமும் இன்றி தனிமைச் சிறையில் அடைத்து வதைக்க முடியும். வாரண்டு இல்லாமல் போலீசார் வீட்டைச் சோதனையிட்டுப் பொருட்களைக் கைப்பற்ற முடியும். தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கமளிப்பதன் மூலம் அனைத்து அரசியல், பொருளாதார, தொழிற்சங்க போராட்டங்களையும் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து ஒடுக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலோ, ஒருவரைக் கைது செய்ய முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒருவேளை பிணை கிடைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியுமில்லை.
இக்கொடிய ஊபா சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒருசில ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால், ஊபா சட்டத்தின் கீழ் போலீசார் ஒரு அப்பாவிக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும். இக்கொடிய பாசிச சட்டத்தின் கீழ்தான் ஆனந்த் தெல்தும்டேவும் கௌதம் நவ்லகாவும் இப்போது சிறையிடப்படுகின்றனர்.
படிக்க:
♦ புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ ஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …
“பயங்கரவாத நக்சல்பாரிகளின் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள்”, “பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்” என்பதுவரை பல கதைகளை போலீசு சொல்லிக் கொண்டிருக்கிறது. இதன்படி, முனைவர் ஆனந்த் தெல்தும்டேவின் கணினியைச் சோதனையிட்டதில் இதற்கு ஆதாரமாகச் சில கடிதங்கள் கிடைத்துள்ளதாகப் போலீசு கூறுகிறது. பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். பொது வெளிக்கு வந்துவிட்ட இந்தக் கடிதங்களை ஏராளமானோர் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். மோதல் மேலாண்மை நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர்கூட, இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார். ஆனாலும், வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை.
பிணை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அருண் மிஸ்ரா, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷா ஆகியோர் சார்பில் பேசிய நீதிபதி மிஸ்ரா, “நாங்கள் மார்ச் 16-லிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதிவரை இவ்விருவருக்கும் 3 வார கால அவகாசம் அளிக்கிறோம். அதன் பிறகு அவர்கள் சரணடைய வேண்டும். கைது செய்யப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டு, கடந்த ஜனவரி 2018 முதலாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளை இவர்கள் மகிழ்வுடன் அனுபவித்துள்ளனர்” என்கிறார்.
தான் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுவதையும், அதன்மூலம் தான் விரும்பி செய்து வரும் மனித உரிமைப்பனியை, எழுத்துப் பணியை செய்ய முடியாமல் போய்விடுமே என்பதை எண்ணி முனைவர் ஆனந்த் தெல்தும்டே பல நாட்கள் உறங்க முடியாத நிலையில் உள்ளார் என்று அவரது மகள்களான ராஷ்மியும் ப்ராச்சியும் எழுதியுள்ள பகிரங்கக் கடிதமே, இந்த வேதனையை உணர்த்துகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, அவர் ஒன்றரை ஆண்டுக் காலத்தை மகிழ்வுடன் அனுபவித்துள்ளார் என்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?
“இது தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல; மாறாக, நாட்டுக்கு எதிரான செயல். இதனாலேயே கைது செய்ய விசாரணையை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. இந்திய சட்டத்துறையின் பாசிச வக்கிரத்துக்கு இதைவிட வேறென்ற சான்று வேண்டும்?
மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு மிகக் கொடிய பாசிச ஊபா சட்டத்தை மோடி அரசு ஏவி விடுவதையும், அதற்கு அடிபணிந்து இந்திய அரசியல், நீதி, சட்டம் உள்ளிட்ட கட்டமைப்பே பாசிசக் காட்டாட்சிக்குப் பாதையமைத்துக் கொடுப்பதையும் நிரூபித்துக் காட்டுவதற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?
மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் நிலமற்ற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவரான முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்; பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் – என பல துறைகளில் உயர்ந்த பொறுப்புகளிலும், காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழக(IIT)த்தின் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது கோவா நிர்வாகவியல் கழகத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், பெருந்தரவு பரிசீலனைத் துறையின் தலைவராகவும் உள்ளார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி(CPDR)யின் பொதுச் செயலாளராகவும், கல்வி பெறும் உரிமைக்கான அனைத்திந்திய அரங்கத்தின் (AIFRTE) தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
கௌதம் நவ்லகா, பத்திரிகையாளரும் ஜனநாயக உரிமை – மனித உரிமைப் போராளியுமாவார். டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைக்கான மக்கள் கழகத்தில் (PUDR) முன்னிணியாளராக இயங்கிவரும் இவர், எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழின் ஆசிரியர் குழுவின் ஆலாசகராகவும் இயங்குகிறார்.
பார்ப்பன பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கி முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் “நகர்ப்புற நக்சல்கள்” என்று முத்திரை குத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.
தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைப்பது என்று இந்து மதவெறி பாசிச கும்பல் செயல்படுகிறது. அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரையும், எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட வரவரராவையும், சுதா பரத்வாஜ் போன்ற பெண் வழக்குரைஞர்களையும், உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியை விட்டு அகல முடியாத தோழர் சாய்பாபாவையும் ஊபா சட்டத்தில் சிறையிலிட்டு வதைப்பதற்கும், சித்திரவதை செய்து கொல்வதற்கும் பெரிய அளவில் வேறுபாடு ஏதுமில்லை.
இது வெறும் மனித உரிமை மீறல் விவகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல் ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கை மாற்றியமைத்து பாசிசத்தைத் திணிக்கும் நடவடிக்கையை முன்னறிவிப்பதாகும். கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆகப் பெரும்பான்மையான அறிவுத்துறையினர் மாறியிருக்கும் இன்றைய சூழலில், ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் இப்பாசிசத் தாக்குதலுக்கு எதிராக வாய்மூடிக் கிடக்கும் சூழலில், தம் வாழ்நாளை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ள இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, நமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் காட்டும் வேகத்தைவிட இவர்களை கைது செய்து சிறையிடைப்பதில் காட்டும் வேகம்தான் மோடி அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அதிகமாக உள்ளது. நாடும், மக்களும் பாசிச இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுவரும் சூழலில், மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, கௌதம் நவ்லகா மற்றும் பிற மனித உரிமைப் போராளிகளின் விடுதலைக்காக உரத்த குரலெழுப்புவோம்! மிகக் கொடிய ஊபா உள்ளிட்ட பாசிசச் சட்டங்களுக்கு எதிராகவும், மோடி கும்பலின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகவும் போராடுவோம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.