பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …

கைபேசியைப் பயன்படுத்த இயலாமல் உங்களால் ஒரேயொரு நாளைக் கழித்துவிட முடியுமா? இணைய தளங்கள், முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்த முடியாமல் இன்றைய இளைஞர்களால் ஒரு நிமிட நேரத்தைக் கடந்துவிட முடியுமா? தகவல் தொடர்புக்கும் பொழுதுபோக்கிற்கும் மட்டுமின்றி, கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் வியாபாரத்திற்கும்கூட கைபேசியும் இணைய தள இணைப்பும் இன்றியமையாச் சாதனங்களாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு, இந்த நவீன சாதனங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாகவே இருக்கும். ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கோ இந்தக் கொடுங்கனவுதான் அன்றாடம் முகங்கொடுக்க வேண்டிய நிஜம்.

ஜம்மு காஷ்மீரில் இந்த அடிப்படையான நவீன தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கடந்த ஆண்டு ஆகஸ்டில், அரசியல் சாசனப் பிரிவு 370 முடமாக்குவதற்கு ஒரு நாள் முன்பாக விதிக்கப்பட்ட தடை, ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவருகிறது.

நெருக்கடி நிலை காலத்தில்கூடத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு  கொள்ளும் உரிமை ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இந்து சாம்ராட் மோடியோ தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் காஷ்மீரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை முடக்கியது; மாநிலத் தகுதியைப் பறித்து, ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து, அவற்றைத் தனித்தனி ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது ஆகியவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்ததும் காஷ்மீரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும்.

“ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியாமலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாமலும், தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும்விட அதிகபட்ச தண்டனை இருந்துவிட முடியுமா?” எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எகத்தாளமாகப் பேசியிருப்பதே இத்தண்டனையின் அத்தாட்சி.

காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசினும் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தும் இந்த “தண்டனையை” ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 160 நாட்கள் கழித்து, ஜனவரி 10 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பும்கூட காஷ்மீர் மக்களின் முதுகில் குத்துவதாகவே அமைந்துவிட்டது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இரத்தினச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், “குரைக்கிற நாய் கடிக்காது” என்ற பழமொழியைத்தான் உவமானமாகக் கூற முடியும்.

130 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், குடிமக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, நடமாடும் உரிமை குறித்துப் பல்வேறு விளக்கங்களும், அவற்றைத் தடை செய்வது குறித்துப் பல்வேறு எச்சரிக்கைளும் தரப்பட்டிருப்பினும், இறுதியாக, தொலைத்தொடர்பு சேவையை காஷ்மீரிகளுக்குத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி – ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துவிட்டனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

“இணையதளம் வாயிலாகக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) (ஏ) மற்றும் (ஜி) ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை போன்ற அடிப்படை உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (2) மற்றும் (6) ஆகியவற்றுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது கள நிலவரத்துக்கும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

“இணைய தள சேவைகளை நியாயமான காரணங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மட்டுமின்றி, கால வரம்பின்றியும் தடை செய்ய முடியாது.”

“144 தடையுத்தரவை நியாயமான கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், சட்டம்  ஒழுங்கிற்கு வரவிருந்த அபாயத்தைத் தடுப்பதற்குமே ஜம்மு காஷ்மீரில் 144 கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு அளித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது மற்றும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக 144 தடையுத்தரவைப் பிறப்பிக்க முடியாது.”

படிக்க:
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

”தேசப் பாதுகாப்பு என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டாலும்கூட எதிர்ப்புக்கு ஏற்ற நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டுமெயொழிய, அதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக் கூடாது.”

“ஒரு மாநிலத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசு தடையுத்தரவுகளைப் பிறப்பித்தால், அந்த உத்தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எதிர்த்துப் பொதுமக்கள் வழக்குத் தொடர முடியும்.”

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் வரையறைகள், விளக்கங்கள். குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்யும்போது அது குறித்த ஆணையைத் தக்க காரணங்களோடு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த மோடி அரசு, “அவ்வாறு வெளியிட வேண்டுமென்று சட்டத்தில் கூறப்படவில்லையென்றும், வெளியிடாமல் இருப்பதற்கு அரசிற்குத் தனியுரிமை உள்ளதென்றும்” வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இணைய தள சேவையைத் தீவிரவாதிகளும் பயன்படுத்துவார்கள் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டாலும், எதார்த்தமான சூழ்நிலைக்கு ஏற்ப குறைந்தபட்ச கட்டுப்பாடுகளைத்தான் விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு குறைந்தபட்ச கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்தும் காரணிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தடைவிதித்துப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கும்படி விரிவான, விளக்கமான அரசாணை வெளியிடப்பட்டதாகவோ, பொறுப்பான அதிகாரிகள் வாரம் ஒருமுறை கூடி அத்தடையை நீட்டிப்பதா, வேண்டாமா எனப் பரிசீலித்து முடிவெடுத்ததாகவோ எவ்விதமான ஆதாரங்களும் விசாரணையில் சமர்ப்பிக்கப்படவில்லை. எதார்த்தமான சூழ்நிலைகளுக்கு ஏற்றபடிதான் இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் மைய அரசு நிரூபிக்கவில்லை. மோடி அரசின் நோக்கமென்பது தொலைத்தொடர்பு சேவைகளைக் காலவரையின்றி ரத்து செய்து காஷ்மீரிகளைத் தண்டிக்க வேண்டும் என்பது தவிர வேறல்ல என்பதை இதன் வழியாக யாரும் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டே காஷ்மீரிகளின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாரதூரமான தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்திருக்க முடியும்.

ஆனால், நீதிபதிகளோ, இந்த இயற்கை நீதிக்கு மாறாகவும், தீர்ப்பில் தாங்கள் அளித்த விளக்கங்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டு, இத்தடையை மறுஆய்வு செய்யும் பொறுப்பை மோடி அரசிடமே ஒப்படைத்தனர். இந்த உத்தரவுப்படி மோடி அரசு நடத்திய மறு ஆய்வோ தடை விலக்கல் என்ற நாடகத்தை அரங்கேற்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போட்டுவிட்டது.

இந்நாடகத்தின்படி, ஜம்மு காஷ்மீர் முழுவதும் “ப்ரீ பெய்டு” செல்லிடப் பேசி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு பகுதியிலுள்ள பத்து மாவட்டங்களிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு மாவட்டப் பகுதிகளிலும் “போஸ்டு பெய்டு” சேவையைப் பயன்படுத்துவோருக்கு மட்டும் 2ஜி இணைய தள சேவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளத்தாக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் இந்தளவிற்குக்கூட இணைய தள சேவை அனுமதிக்கப்படவில்லை. சிறீநகரில் வசிப்பவர்கள் இணைய தள வசதியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள ஜம்முவுக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் 2-ஜி இணைய தள சேவை என்பதே காலாவதியாகிப் போன ஒன்று. மேலும், இந்த சேவை அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் அனைத்து இணைய தளங்களுக்கும் சென்றுவிட முடியாது. மோடி அரசு அனுமதித்திருக்கும் இணைய தளங்களை மட்டுமே பார்வையிட முடியும், பயன்படுத்திக் கொள்ள முடியும். அனுமதிக்கப்பட்ட இந்த இணைய தளங்களில் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் எதுவும் கிடையாது. முகநூல், டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. அரசின் சேவைகளை வழங்கும் தளங்கள் மற்றும் மோடி அரசைத் துதிபாடும் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே பார்வையிட முடியும்.

தொலைத்தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அநீதியானது என்றால், இந்தத் தடை விலக்கமோ வக்கிரமானது. மேலும், இந்தத் தடை விலக்கமும் வாரம் ஒருமுறை அரசு அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்பதால், எந்த நேரத்திலும் தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் முற்றிலுமாகத் தடைசெய்யும் வாய்ப்பு இருப்பதையும் மறுத்துவிட முடியாது.

இன்று இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலுமே அடக்குமுறைகளை ஏவிவிடும் அரசுகளுக்கு எதிராகக் கருத்துக்களைப் பரப்பிப் பொதுமக்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களைப் போராட்டக்களத்துக்குக் கொண்டு சேர்ப்பதிலும் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன. அப்படிபட்டதொரு நிலைமை ஜம்மு காஷ்மீரில் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே தொலைத்தொடர்பு சேவைகளைத் தடை செய்திருக்கிறது, மோடி அரசு. உண்மையில், இப்பார்ப்பன பாசிசக் கும்பல் தீவிரவாதிகளைக் கண்டு அச்சப்படுவதைக் காட்டிலும், 370-ஐ முடமாக்கியதற்கு எதிராக மக்கள் திரள் போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்றுதான் கடும் அச்சம் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்ற வட இந்திய நகரங்களில்கூட இணைய தள சேவையைத் தற்காலிகமாகத் தடை செய்யும் அடக்குமுறையை அரசுகள் கையில் எடுத்துவருகின்றன. இந்த நிலையில்தான் பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற விதத்தில் சந்தர்ப்பவாதமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி, ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிப்பது ஆகிய வழக்குகளைத் தொடர்ந்து பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் புத்தாண்டு பரிசுதான் இத்தீர்ப்பு.

நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது இந்திய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்வாழும் உரிமையைக்கூட ரத்து செய்து தீர்ப்பை அளித்த இழிபுகழ் கொண்டது இந்திய உச்ச நீதிமன்றம். தற்பொழுது, இந்து மதவெறி பாசிசக் கும்பலின் அரசியல் அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொடுக்கும் காலாட்படையாக அந்நீதிமன்றம் சேவையாற்றிவருவதைப் பார்க்கிறோம்.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க