Sunday, June 13, 2021
முகப்பு செய்தி இந்தியா செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே - கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

-

PP Letter headபத்திரிக்கை செய்தி

நாள்: 04-04-2020

ந்தியாவின் மிக முக்கியமான அறிஞர்களில் ஒருவரான ஆனந்த் தெல்டும்டே, முன்னணி மனித உரிமைப் போராளியும் பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து 06-04-2020க்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஜனவரி 1-ஆம் தேதி மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் 200ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற வன்முறைக்கு எந்த தொடர்பற்ற இந்த இருவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தடை செய்யப்பட்ட எந்த அமைப்பிலும் உறுப்பினர்களாக இல்லாத நிலையில், வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசு வாதத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு பிணை மறுத்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் அநீதியானது; கடும் கண்டனத்திற்குரியது.

ஆனந்த் தெல்டும்டே

ஆனந்த் தெல்தும்டே இந்தியாவின் முதல் நிலை நிர்வாக வல்லுனர்கள் 20 பேரில் ஒருவர். மிகப்பெரிய அரசு பெட்ரோலிய நிறுவனமான பி.பி.சி.ல். -இன் செயல் இயக்குனராகவும், பெட்ரோல் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். ஐ.ஐ.டி அகமதாபாத், காரக்பூர் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய சாதனைகளை செய்தவர். பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இவரது ஆய்வுகள் பாடமாக உள்ளன. அம்பேத்கர் பேத்தியின் கணவர் என்பது கூடுதல் சிறப்பு. 27 ஆய்வு நூல்களை எழுதியவர்.

அதேபோல் கௌதம் நவ்லகா தீவிர மனித உரிமைப் போராளி. புகழ்பெற்ற ஆய்வு வார ஏடான எக்கனாமிக் அண் பொலிடிக்கல் வீக்லியின் ஆலோசகராகப் பணியாற்றியவர். பழங்குடி மக்களுக்காகவும், காஷ்மீர் மக்களின் உரிமைக்காகவும் போராடி வரும் மனித உரிமைப் போராளி.

படிக்க:
பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இத்தகையவர்கள் தான் கலவரத்திற்குக் காரணமென்றும், மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்களென்றும் நகைப்புக்குரிய வகையில் பொய் வழக்கைப் போட்டு தண்டிக்கத் துடிக்கிறது மோடி அரசு. இதே குற்றச்சாட்டில் பேராசிரியர் கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்ணன் கன்சால்வேஸ், அருண் பெரிபெரா விழா போன்ற வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என பத்து பேரை 18 மாதமாக பிணை மறுத்து துன்புறுத்தி வருகிறது.

கொடுமையிலும் கொடுமையாக, 90% ஊனமுற்று சக்கர நாற்காலியில் நடமாடும் பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி ஆறு ஆண்டுகளாக ஈவிரக்கமற்ற முறையில் துன்புறுத்தி வருகிறது. ஐ.நா.-வின் மனித உரிமை ஆணைய வல்லுனர்கள் பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிணை மறுக்கிறது உச்சநீதிமன்றம். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 15 நோய்களோடு துன்புறும் அவருக்கு உரிய மருத்துவம் மறுக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம் ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் என்பது மட்டுமல்ல, மோடி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத, பாசிச நடவடிக்கைகளைத் துணிந்து அம்பலப்படுத்துவதும் தான்.

ஆறு பேரைக் கொன்ற மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் எந்த தயக்கமும் காட்டவில்லை. விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்படும்போது சிறையில் நவீன வசதிகள் செய்து தருவதை உத்தரவாதப்படுத்த நீதிமன்றம் கூச்ச படவில்லை.

எந்தக் கலவரத்திற்கு மேற்கண்ட அறிஞர்கள் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறதோ அந்தக் கலவரத்தைத் தூண்டி பங்கேற்ற தலித் மக்களை கொடூரமாகத் தாக்கிய இந்து தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஏக்போட்டே, பிண்டே ஆகியோருக்கு உடனே பிணை வழங்கப்படுகிறது.

இந்திய நீதிமன்றங்கள் மொத்தமும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதைத்தான் நடப்புகள் தெளிவுபடுத்துகின்றன. போலீசு இராணுவம் போல நீதிமன்றங்களும் ஒரு அடக்குமுறை நிறுவனம்தான் என்ற மார்க்சிய கருத்தை இந்திய நீதிமன்றங்கள் வெளிப்படையாக நிரூபித்து வருகின்றன. வரலாறு முழுவதும் ஆளும் வர்க்கமும், பாசிஸ்டுகளும் முதலில் தனக்கு எதிராக சிந்திப்பவர்களைத் தான் குறிவைத்து ஓடுகிறது. அதைத்தான் மோடி அரசு நிறைவேற்றுகிறது.

படிக்க:
முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை !
♦ பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?

ஆனந்த் தெல்டும்டே, கௌதம் நவ்லகா மற்றும் பிறர் மீது மோடி அரசும் நீதிமன்றமும் நடத்தும் தாக்குதல் ஒடுக்கப்பட்டோர், உழைக்கும் மக்கள் அனைவர் மீதான தாக்குதல். உழைக்கும் மக்களின் நியாயத்தையும் உரிமையையும் நீதிமன்றங்கள் தானாக அங்கீகரித்ததில்லை. போராட்டங்கள் தான் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது மொத்த தொழிலாளி வர்க்கத்தின் கடமை. கொடிய, ஜனநாயக விரோதமான உபா சட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டியதும் உடனடித் தேவை.

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
தகவல்:
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு, தொடர்புக்கு : 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க