காராட்டிர மாநிலம் பீமா கொரேகானின் சாதியரீதியாக வன்முறையைத் தூண்டியதாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6, ஐந்து செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

ஓராண்டு கடந்த பின்னும், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஓய்வுபெற்ற பேராசிரியர் சோமா சென், கவிஞரும் பதிப்பாளருமான சுதிர் தவாலே, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மகேஷ் ராவத் மற்றும் ரோமா வில்சன்  ஆகியோர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் செயல்பாட்டாளர்கள் ஐவர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதன் பின்பே, புனே போலீசு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இப்போது ஓராண்டு முடிந்திருக்கிற நிலையில், ஐவரின் பிணை மனுவும் விசாரிக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது.

ஐவரின் குடும்பத்தினரும் நீதிமன்ற விசாரணையில் தொடர்ந்து காலதாமதம் செய்வதையும் இந்த வழக்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

படிக்க:
♦ பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

“என்னுடைய சகோதரர் உள்பட மற்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக போலீசு இதுவரை எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்கிறார் மகேஷ் ராவத்தின் சகோதரி மனோலி ராவத்.

மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் இருந்த பார்ப்பன பேஷ்வாக்களை பிரிட்டீஷ் படையில் இருந்த மகர் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மகாராட்டிரத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கொரேகானின் வீழ்த்தினர். இந்த வெற்றியின் 200 -வது ஆண்டு நினைவுகூறலின்போது ஜனவரி 1, 2018-ம் ஆண்டு ஆதிக்கச் சாதிவெறியினரும் இந்துத்துவக் கும்பலும் இணைந்து வன்முறை நிகழ்த்தியது.

மிலிந்த் எகபோடே மற்றும் சம்பாஜி பீடே

இந்த வன்முறையை தூண்டியது பார்ப்பன இந்துத்துவ அமைப்புகளில் இருந்த மிலிந்த் எகபோடே, சம்பாஜி பீடே ஆகியோர் என ஆதரங்களோடு புகார் சொல்லப்பட்ட நிலையில், பேருக்கு அவர்களைக் கைது செய்து, பிணையில் உடனே விடுவித்தது அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு.

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு மேல், இந்த வழக்கு விசாரணை முற்றிலும் மாறுபட்ட நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பீமா கொரேகான் நிகழ்வுக்கு முன்பாக தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த எல்கர் பரிசத் நிகழ்வில் பல தலித் செயல்பாட்டாளர்கள் வன்முறையை தூண்டும்விதமாக பேசியதே வன்முறைக்குக் காரணம் என மாராட்டிய போலீசு துப்பு துலக்கத்தொடங்கியது.

ஏப்ரல் மாதத்திலிருந்து 10 செயல்பாட்டாளர்களை குறிவைத்து கைது நடவடிக்கைகளில் இறங்கிய புனே போலீசு, ஜுன் 6-ம் தேதி மேற்கண்ட ஐவரை கைது செய்தது. கட்லிங், சென் மற்றும் ராவத் ஆகியோரை நாக்பூரில் வைத்தும், தவலே மும்பையில் வைத்தும், வில்சன் டெல்லியில் வைத்தும் கைதுக்கு ஆளாகினர். ஆகஸ்டு 28-ம் தேதி, மேலும் ஐந்து செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா, வெர்னோம் கோன்சால்வேஸ், வரவர ராவ், கௌதம் நவ்லாகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறை பீமா கொரேகானில் வன்முறையை ‘தூண்டிய’ செயல்பாட்டாளர்களின் திட்டத்தை நீட்டித்து போலீசு கட்டுக்கதைகளை பரப்பியது. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும் பாசிச எதிர்ப்பு முன்னணியை நிறுவி மோடி அரசை தூக்கி எறியவும் மாவோயிஸ்டுகள் திட்டமிடுவதாகவும் போலீசு சொன்னது. மோடியை கொல்லும் திட்டம் தயராகிவருவதாகவும்கூட சொன்னது. கைதான செயல்பாட்டாளர்கள் ‘நகர்ப்புற நக்சலைட்டுகள்’ என்றும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து போலீசு தரப்பு சொன்னது.

(இடமிருந்து) சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னன் கான்சல்வாஸ், அருண் ஃபெரைரா, கௌதம் நவ்லகா

இந்தக் கைதுகள் நடந்து ஓராண்டு ஆன பின்பும், மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறது போலீசு தரப்பு. தனது பழிவாங்கும் நடவடிக்கையை நீட்டித்துக்கொண்டும் உள்ளது. ஐவரும் கைதாகி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அவர்களுக்கு பிணை விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் அவர்களுடைய குடும்பத்தார்.

பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக கைதானவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி. அந்த அமைப்பு விடுத்துள்ள செய்தியில், “கைதானவர்கள் நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறுகிறது அரசு.  ஆனால், கைதான செயல்பாட்டாளர்கள் பணியாற்றிய சமூகங்களில் அவர்கள், தைரியத்துக்காகவும் ஏழைகள் மற்றும் தலித், பழங்குடிகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றியதற்காகவும் போற்றப்படுகிறார்கள். தேசத்துக்கு எதிரானவர்கள், என்பதைக்காட்டிலும் அவர்கள் நாட்டின் கதாநாயகர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் மனித உரிமைக்கான செயல்பாட்டை தடம் மாற்றிவிடும் எனவும் அம்னெஸ்டி கவலை தெரிவித்துள்ளது. “நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய மக்களின் கதாநாயகர்களை தாக்குவது இந்தியாவின் விருப்பம் அல்ல என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என அறைகூவல் விடுத்திருக்கும் அம்னெஸ்டி “உலகம் உங்களை உற்று நோக்குகிறது என்பதை பிரதமருக்கு சொல்லுங்கள்” என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

பீமா கொரேகான் தொடர்பில் கைதான செயல்பாட்டாளர்களை விடுவிக்கக்கோரும் இந்த பிரச்சாரத்தில் நீங்களும் இணையலாம்…

URGENT: Demand The Release Of The Bhima Koregaon 9 Now!


கலைமதி
நன்றி : ஸ்க்ரால், நியூஸ் மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க