கடந்த 2018 ஆம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகானில் சாதி ரீதியான வன்முறையைத் தூண்டியதாக போலீசால் புனையப்பட்ட பொய் வழக்கில், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சோமா சென்னும் ஒருவர்.
முன்னாள் நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியரான சோமா சென் 2018 ஆம் ஆண்டு ஜூன் 6 – ஆம் தேதி பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சோமா சென் அவர்கள் மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்பதற்கு எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
“சோமா சென்னுக்கு எதிரான பல்வேறு சாட்சிகளை நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இருந்து, சோமா சென் எந்தவிதமான பயங்கரவாதச் செயலையும் செய்ய முயற்சிக்கவில்லை” என்று நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர்வு கூறியது.
படிக்க: ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
பயங்கரவாதச் செயல்களுக்காக சோமா சென் நிதியுதவி அளித்தாகவோ, அதற்காகப் பணம் பெற்றதாகவோ தேசியப் புலனாய்வு அமைப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. பொதுவாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43D(5) – இன் படி பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுக்க வேண்டும். ஆனால் சோமா சென்னின் வழக்கில் இந்த நிபந்தனை பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
சோமா சென் “புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் இணைய பெண்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை செய்துள்ளார்” என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்ல;. தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இல் சோமா சென் உறுப்பினராக இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
சோமா சென் “சிபிஐ (மாவோயிஸ்ட்) இன் தீவிர உறுப்பினர்; அரசை வன்முறையில் கவிழ்க்க, குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் சதி செய்தார்” என்று தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டியது.
கடந்த மார்ச் 15 அன்று, நீதிமன்றத்தில் சோமா சென் இனி காவலில் இருக்க தேவையில்லை என்று தேசிய புலனாய்வு முகமை கூறியது. சென்னின் வயது முதிர்வு, உடல் நலக் குறைவு மற்றும் வழக்கு விசாரணை தாமதம் ஆகிய காரணங்களால் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்
பீமா கோரேகான் பொய் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஆறாவது நபராக சோமா சென் இருக்கிறார். கௌதம் நவ்லாகா, மகேஷ் ராவுத் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், ஹனி பாபு, சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர் மற்றும் ஜோதி ஜக்தாப் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி மருத்துவ உதவிகள் வழங்கப்படாமல் ஜூலை 2021 இல் சிறையிலேயே பாசிச மோடி அரசால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசை விமர்சனம் செய்ததாலும், அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாலும் சோமா சென் உள்ளிட்ட 16 செயற்பாட்டாளர்களும் பாசிச மோடி அரசால் வேட்டையாடப்படுகின்றனர். எனவே, ஜனநாயக சக்திகள் அனைவரும் அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube