பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.

0

மெரிக்காவைச் சேர்ந்த தடயவியல் நிறுவனம், டிசம்பர் 13 அன்று பீமா-கொரேகான் வழக்கில் பாதிரியார் ஸ்டான் சுவாமியை கைது செய்ய காரணமாக காட்டப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தும் அவரது கணினியின் ஹார்டு டிரைவில் ஹேக்கிங் செய்து பொருத்தப்பட்டதாக கூறியுள்ளது.

பீமா-கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களில் ரோனா வில்சன், வரவர ராவ், ஹனி பாபு ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மூவருக்கு சொந்தமான கணினிகளில் போலியான ஆதாரங்களை பூனே போலீசுத்துறை உள்நுழைத்ததாக கடந்த 2022 ஜூன் மாதம் அமெரிக்காவில் இயங்கும் சைபர் செக்யூரிடி நிறுவனம் கூறியுள்ளதாக வயர்டு இணையதளம் செய்தி வெளியிட்டது.

அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டான் சுவாமி. சிறையில் மருத்துவ சிகிச்சை முறையாக வழங்கப்படாமல் அரசு அவர் மீது தொடர்ந்து ஒடுக்குமுறைகளை ஏவிவந்தது. இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை 2021-ல் அவர் மரணமடைந்தார். தற்போது டிசம்பர் 13 அன்று ஸ்டான் சுவாமியின் கணினியிலும் போலியான ஆதாரங்கள் உள்நுழைக்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிறுவனம் கூறியுள்ளது.

படிக்க: ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!

அமெரிக்காவின் Massachusetts-ஐ தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான Arsenal Consulting என்ற நிறுவனம், சுவாமியின் கணினியின் மின்னணு நகலை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஒரு ஹேக்கர் அவரது கணினியில் ஊடுருவி ஆதாரங்களை பதிவிட்டதாக கூறுயுள்ளது என்று The Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.

“சுவாமிக்கு சொந்தமான கணினியின் ஹார்டு டிரைவில் 50-க்கும் மேற்பட்ட போலி கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் அவருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளுக்கு இடையேயான தொடர்பை இருப்பதாக புனையப்பட்ட ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் அடங்கும்” என்று அறிக்கை கூறியது.  சுவாமி மீது சோதனை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஜூன் 5, 2019 அன்று அவரது கணினியில் இந்த ஹேக்கிங் குற்றம் நடந்துள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

0-0-0

சுவாமியின் கணினியின் மின்னணு நகலை அவரது வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அர்செனல் நிறுவனம் ஆய்வு செய்த பின்னர் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது மடிகணினி, கடவுச்சொல் மற்றும் லாகின் ஆகியவற்றின் தகவல்களை திருடும், ரிமோட் கண்ட்ரோல் திறன் கொண்ட NetWire என்ற மால்வேர் மூலம் கடந்த 2014 அக்டோபரில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.

அதாவது, “ஜூன் 11, 2019 இரவு, சுவாமியின் கணினி போலீசுத் துறையினரால் கைப்பற்றப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஹேக்கர் அவரது செயல்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளார்” என்று அறிக்கை கூறியது.

இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து நிபுணர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் பீமா கோரேகான் வழக்கில் அவர் முதன்முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக செயற்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் ஒடுக்கும் இந்த காவி-கார்ப்பரேட் மோடி அரசு, பீமா கோரேகான் வழக்கில் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க