ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!

ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

0

டந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை ஆர்வலர் தந்தை ஸ்டான் சுவாமி மும்பையில் நீதிமன்றக் காவலில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட 16-வது (கடைசி) நபர் சுவாமி ஆவார். அவர், காவலில் இருந்தபோது கடுமையான நோய்களினால் அவதிப்பட்டார். கோவிட்-19க்கு சோதனை செய்த பிறகு சுவாமி காலமானார். அவருக்கு போதிய மருத்துவ உதவிகள் அரசால் அனுமதிக்கப்படவில்லை என்று அவரது சக கைதிகளும் வழக்கறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓராண்டுக்குப் பிறகு, அரசின் அக்கறையின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது 11 சக கைதிகள் சுவாமி மறைந்த நாளில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அரசியல் ஆர்வலரும், வித்ரோஹி இதழின் ஆசிரியருமான சுதிர் தவாலே தனது வழக்கறிஞர்களுக்கு தங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கான காரணத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


படிக்க : தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்


“ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த நாளில், தந்தை ஸ்டான் சுவாமி கொல்லப்பட்டார். சிறையில் அதே நிலைமை தொடர்கிறது” என்று தவாலே எழுதுகிறார்.

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

தவாலேயுடன் சிறையில் அடைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருப்பவர்களில், வழக்கறிஞர்கள் சுரேந்திர காட்லிங், அருண் ஃபெரீரா. உரிமை ஆர்வலர்கள் மகேஷ் ரவுத், ரோனா வில்சன், வெர்னான் கோன்சால்வ்ஸ், சாகர் கோர்கே மற்றும் ரமேஷ் கைச்சோர்; கல்வியாளர்கள் ஹனி பாபு மற்றும் ஆனந்த் டெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவலகா ஆகியோர் அடங்குவர்.

ஜூன் 6, 2018 அன்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர்களில் ஒருவரான தவாலே, சிறையில் இருந்து பல கடிதங்களை எழுதியுள்ளார்.

மும்பையின் புறநகரில் உள்ள தலோஜா மத்திய சிறையில் சுவாமி கழித்த இறுதி நாட்களை நினைவுகூர்ந்து தவாலே எழுதுகிறார். “சிறையில் இருந்தபோது தந்தை சுவாமி சிறிய விஷயங்களுக்காக போராட வேண்டியிருந்தது. ஒரு எளிய வாக்கிங் ஸ்டிக்கை போன்ற எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

சுவாமி கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, ​​”மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதற்குப் பதிலாக, சிறை அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்” என்று தவாலே குற்றம் சாட்டினார்.

அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் மனுவைத் தொடர்ந்து சுவாமி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு, பல வாரங்கள் சுயநினைவின்றி இருந்த அவர், ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார்.


படிக்க : ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !


சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதால்தான் சுவாமியின் உடல்நிலை மோசமடைந்தது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தேசாய் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அப்போதைய தலோஜா சிறை கண்காணிப்பாளர் கவுஸ்துப் குர்லேகர் மற்றும் சிறை மருத்துவர் சுனில் காலே ஆகியோர் சுவாமிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்கவில்லை என்று நீதிமன்றத்தி குற்றம் சாட்டப்பட்டது.

குர்லேக்கருக்கு எதிராக பல கைதிகளும் இதேபோன்ற புகார்களை அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், எல்கர் பரிஷத் வழக்கில் பதிவு செய்யப்பட்ட கைதிகள், குர்லேகர் தங்கள் கடிதங்களை “தணிக்கை” செய்ததாகவும், தங்கள் கடிதங்களை ஸ்கேன் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்கள்.

ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும். சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முற்போக்காளர்களின் போராட்டத்தை ஆதரிப்பதும், நாட்டின் அனைத்து முற்போக்காளர்களையும் பாசிச அரசிடம் இருந்து பாதுகாக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை!

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க