ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே, சிறை அதிகாரிகளால் துன்புறுத்துவதாக கூறி, மே 21 முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மே 20 தேதியிட்ட கடிதத்தை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு அனுப்பியுள்ளார் கோரகே. “ஆரம்பத்தில் இருந்தே பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறை நிர்வாகம் துன்புறுத்தி வருகிறது என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் எனக்கும், என்னுடன் சிறையில் இருப்பவர்களுக்கும் சித்திரவதை கூடமாக சிறைச்சாலை மாறிவிட்டது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கோராகே.
தற்போதைய அவரது உண்ணாவிரத போராட்டத்தில் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
ஒன்று, எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அதிகாரிகள் “வேண்டுமென்றே அலட்சியம்” காட்டுவதாக கோரகே குற்றம் சாட்டினார். முதுகுவலி, மூட்டுவலி, தோல் அலர்ஜி போன்ற பல நோய்களால் நான் அவதிப்பட்டு வந்தாலும், சிறை மருத்துவ அதிகாரிகளால் எனக்கு சிகிச்சை அளிப்பது வேண்டுமென்றெ மறுக்கப்படுகிறது.
என்னுடன் சிறையில் இருக்கும் கௌதம் நவ்லகா, ரமேஷ் கெய்ச்சோர், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சுரேந்திர காட்லிங், ஆனந்த் டெல்தும்டே மற்றும் ஹனி பாபு ஆகியோரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டுள்ளது” என்று கோராகே பாட்டீலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க :
♦ தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
♦ ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !
இரண்டு, “எங்களுக்கு வரும் ஒவ்வொரு கடிதமும் ஏற்கனவே திறக்கப்பட்டு, அது எம்மை அடையும் நேரத்தில் மூடப்படாமல் இருக்கும். புத்தகங்கள், அதனுடன் உள்ள காகிதங்கள் மற்றும் முத்திரைகள் திருடப்பட்டிருக்கும். இதேபோல், வெளியில் அனுப்பப்படும் கடிதம் எங்கள் முன் சீல் செய்யப்படுவதற்குப் பதிலாக ஸ்கேனிங்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது“ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மூன்று, “சிறை விதிகளின்படி, ஒவ்வொரு கைதியும் 135 லிட்டர் தண்ணீரைப் பெற வேண்டும், ஆனால் அக்கறையற்ற தலோஜா மத்திய சிறை நிர்வாகம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வாளி, அதாவது 15 லிட்டர் தண்ணீரை மட்டுமே வழங்குகிறது. கைதிகள் 15 லிட்டர் மட்டுமே உயிர்வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.”
நான்கு, “ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட கைதிகளை சந்திக்க சிறைக்கு வருகிறார்கள். பதிவு செய்த தருணத்தில் இருந்து கைதியைச் சந்திக்கும் வரை, வழமையான கட்டமைப்பில் ஐந்து முதல் ஏழு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து என்னைச் சந்திக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த முறைகள் மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரம், மின்விசிறிகள் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதுடன் நிரந்தர பார்வையாளர் அறையும் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று கோரகே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐந்து, கோவிட்-19 தொற்றின்போது, கைதிகளுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி சேவைகளை உடனடியாக மீட்டெடுக்குமாறு கோரகே கோரியுள்ளார். பின்னர் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சுற்றறிக்கையின்படி, “பயங்கரவாத நடவடிக்கைகள் / தேசத்துரோகம் / நக்சலிசம் / கும்பல் வன்முறை” போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
ஸ்டான் சுவாமி
“குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றவாளியாகக் கருதுவது அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். எனவே, என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நிரூபிக்கப்படும் வரை, என் மீதும் அல்லது வேறு யார் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை நியாயமற்றது. சிறை நிர்வாகத்தின் இத்தகைய சித்திரவதை நடைமுறைகள்தான் கடந்த ஆண்டு தந்தை ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு வழிவகுத்தது” என்று கோரகே குற்றம் சாட்டியுள்ளார்.
“இன்றும் நமது அடிப்படை மனித உரிமைகள் சிறைச்சாலையில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்படுகின்றன. நிலைமை முற்றிலும் தாங்க முடியாததாகிவிட்டதால்தான், நான் ஒரு வேதனையான உண்ணாவிரதப் போராட்டத்தை நாட வேண்டியதாயிற்று” என்று அவர் கூறினார்.
கோரகேவின் கூற்றுப்படி, தலோஜா சிறையில் அடைக்கப்பட்ட எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மே 21 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்பினர், எழுத்தாளர்களை இந்த அரசு திட்டமிட்டே ஒடுக்கி வருகிறது. உழைக்கும் மக்களுக்காக தொடர்ந்து போராடிவந்த ஸ்டான் சுவாமி, பொய்வழக்கினால் சிறையில் அடைக்கப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கில் குற்றவாளியா? இல்லையா? என்று விசாரணை நடைபெறும் காலத்திலேயே மருத்துவ வசதிகளை மறுத்து ஸ்டேன் சுவாமியை சித்திரவதை செய்து கொன்றது தலோஜா சிறைத்துறை. அவ்வழக்கில் இருக்கும் அனைவரையும் இதே போன்று வாழ்நாள் முழுவதும் விசாரணை கைதிகளாக வைத்து, சிறையில் சித்திரவை செய்து கொல்லவும் தயங்காது இந்த பாசிச தலோஜா சிறைத்துறை.
எனவே, தற்போது தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து சாகர் தத்யாராம் கோரகே, கௌதம் நவ்லகா, ரமேஷ் கெய்ச்சோர், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சுரேந்திர காட்லிங், ஆனந்த் டெல்தும்டே மற்றும் ஹனி பாபு ஆகியார் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிப்போம். இவர்களை போன்ற நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், புரட்சியாளர்களையும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க