எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்வலர் கவுதம் நவ்லகாவை உடனடியாக மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றுமாறு தலோஜா சிறைக் கண்காணிப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 29 அன்று உத்தரவிட்டது.
“மருத்துவ சிகிச்சை பெறுவது அடிப்படை உரிமை என்று நாங்கள் கருதுகிறோம். மனுதாரரை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். அதன்படி, மனுதாரரை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கண்காணிப்பாளர் தலோஜா சிறைக்குக் கட்டளையிடுகிறோம். மனுதாரர் போலீஸ் காவலில் இருப்பார் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என்று பெஞ்ச் கூறியது.
மும்பைக்கு அருகில் உள்ள தலோஜா சிறையில் போதிய மருத்துவம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாததால், வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதற்கான அவரது மனுவை தள்ளுபடி செய்து பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 70 வயதான ஆர்வலர் நவ்லகா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
படிக்க : தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நவ்லகாவை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து அக்டோபர் 21 ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் நவ்லகாவின் மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
***
ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து ஆர்வலர் நவ்லகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள் தனக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவில்லை என்று அவர் பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவலில் இருந்தபோது அவரது சக பழங்குடியின உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி மரணமடைந்ததையடுத்து வீட்டுக்காவலை கோரி நவ்லகா மனு தாக்கல் செய்தார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற அவரது மனுவை பம்பாய் உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்ததை அடுத்து, ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். நவ்லகா தனது உடல்நலக்குறைவு மற்றும் தலோஜா சிறையில் உள்ள மோசமான வசதிகள் ஆகியவை தனது கோரிக்கைக்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 27 அன்று, உச்ச நீதிமன்றம் அவரது மனு மீது தங்கள் பதில்களை சமர்ப்பிக்க தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மகாராஷ்டிரா அரசு கேட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனுவில், தோல் ஒவ்வாமை மற்றும் பல் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய் சந்தேகத்திற்குரிய கொலோனோஸ்கோபி சிகிச்சையையும் அவர் மேற்கொள்ள வேண்டும். எனவே, அவரை அவரது சகோதரி வீட்டிற்கு மாற்றி, அங்கு வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நவ்லகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கொலோனோஸ்கோபிக்காக நவ்லகா மூன்று நாட்கள் உணவருந்தாமல் இருக்க வேண்டும் என்றார்.
மேற்கூறிய மனுவின் தற்போதைய விசாரணையில், “உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். கொலோனோஸ்கோபி சிகிச்சையின்போது நீங்கள் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்று நீதிபதி ஜோசப் கூறினார். தொண்டையில் கட்டி இருப்பதால் அவருக்கு முழுமையான பரிசோதனை தேவை என்று சிபல் கூறினார்.
உழைக்கும் மக்களுக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர்களை பொய் குற்றச்சாட்டுகளின் பெயரில் சிறையில் அடைந்து, சித்திரவதை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிச கும்பலை உழைக்கும் மக்களின் படை கொண்டு முறியடிக்க களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சந்துரு