பீமா கோரேகான் பொய் வழக்கின் ஐந்து ஆண்டுகள் நிறைவு!

மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணைய வில்லை. மாறாக பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்ததில்தான் இவர்கள் ஒன்று இணைகிறார்கள்.

பீமாகோரேகான் வெற்றித் தூண்.

பீமா கோரேகான் வழக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவு:
உறுதியான பாசிச எதிர்ப்பு மட்டுமே
மக்கள் போராளிகளின் விடுதலைக்கான ஆயுதம்!

“பீமா கோரேகான்” என்பது வரலாற்றில் இதற்கு முன் பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அறியப்பட்ட பெயர். ஆனால் தற்போது அது பாசிச எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டது. நமது உறுதியான பாசிச எதிர்ப்பு போராட்டத்தினால் மட்டும்தான் பீமா கோரேகான் போன்ற பொய் வழக்குகளால் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதையை அனுபவித்து வரும் சமூக செயற்பாட்டளார்கள், அறிவுஜீவிகள், அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய முடியும்.

ஜூன் 6, 2018 அன்று  பீமா கோரேகான் வழக்கின் முதல் கைது நடந்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இந்த வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை, விசாரணைகள் நடத்தப்படவில்லை, கைதானவர்களுக்கு பிணையும் தரப்படுவதில்லை, ஆனால் சிறைத்தண்டனையையும் சித்தரவதையையும் மட்டும் அனுபவித்து வருகிறார்கள்.


படிக்க : “பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!


வழக்கின் வரலாற்றுப் பின்னணி:

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூரின் பெயர்தான் கோரேகான். இங்கு ஜனவரி 1, 1818-ஆம் ஆண்டு ஆங்கிலேய மகர் படைக்கும் சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வா படைக்கும் இடையே போர் நடந்தது. இந்தப் போரில் சில நூறு வீரர்களை கொண்டிருந்த ஆங்கிலேயே மகர் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான வீரர்களை கொண்டிருந்த பேஷ்வா படையை வெற்றிக் கொண்டது. பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய வீரப் போரின் நினைவு சின்னமாக இந்த இடத்தில் பீமா கோரேகான் வெற்றித்தூண் நிறுவப்பட்டது. இந்த வெற்றி நாளை ஆண்டுத்தோறும் மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இந்த வெற்றி நாளின் 200-ஆம் ஆண்டையொட்டி பல்வேறு தலித் மற்றும் இடதுசாரி சமூக செயற்பாட்டாளர்களால் புனே அருகே “எல்கர் பரிஷத்” என்ற (எல்கர் என்றால் உரத்த அறிவிப்பு அல்லது உரத்த அழைப்பு என்று பொருள்) மாநாடு டிசம்பர் 1, 2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். 250-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கலந்துக் கொண்டன. பீமா கோரேகான் போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை ஏவிய பேஷ்வாக்களுக்கு எதிராக போராடியது போல தற்போது நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மாநாட்டில் அறைக்கூவல் விடுக்கப்பட்டது.

கொரெகான் பிமா, திரண்டெழுந்த மக்கள் வெள்ளம்

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காவிக்கும்பல் ஜனவரி 1, 2018 அன்று  பீமா கோரேகான் போரின் நினைவு நாளை கொண்டாட வந்த மக்கள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவிக் குண்டர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். சிறுவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரம்தான் பீமா கோரேகான் வழக்கின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இந்த கலவரத்திற்கு எல்கர் பரிஷத் மாநாடு நடத்தியதுதான் காரணம், இந்த மாநாடு மாவோயிஸ்ட் நிதி உதவியால் நடத்தப்பட்டது எனக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) போலிசு கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. பிறகு “பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்துள்ளார்கள்” என புதிய திரைக்கதையை போலிசு உருவாக்கியது. இதை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. மோடி அரசின் ஏவல் படையான என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு எல்கர் பரிஷத் மாநாட்டிற்கு துளியும் சம்மந்தமில்லாத சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகளை கூட இந்த வழக்கின் பெயரால் வேட்டையாட ஆரம்பித்தது.


படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !


ஐந்து ஆண்டுகளாக வதைக்கப்பட்டுவரும் செயற்பாட்டளார்கள்:

மோடி அரசு இவர்களை கைது செய்ததே சட்ட விரோதமாகத்தான். கைது செய்யப்பட்டதில் இருந்து பிணை தராமலும் சித்தரவதை செய்துவருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறையில் உள்ள மோசமான சுகாதார நிலைமைகளின் காரணமாக பேராசிரியர் ஹனி பாபுக்கு கொடிய கண் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. நோய் பரவி கண்பார்வை இழக்கும் தருவாயில் இருந்த போதிலும் பாபுவுக்கு பிணை மறுக்கப்பட்டது. 84 வயதான பாதிரியார் ஸ்டான்சுவாமி, நடுக்குவாத நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். கைநடுக்கத்தால் தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், அவர் தமக்கு குடிப்பதற்கு உறிஞ்சு குழாய் (சிப்பர்) வேண்டுமென்று கோரியிருந்தார்.  அதைக் கூட கொடுக்காமல் மறுத்தது சிறை நிர்வாகம். இறுதி வரை அவருக்கு பிணை தராமல் மருத்துவ உதவிகளும் வழங்காமல் சிறையிலேயே அவரை படுகொலை செய்தது மோடி அரசு.

இதுவரை 16 பேரில் சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த தெல்தும்டே ஆகிய மூன்று பேருக்கு மட்டும்தான் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டரை ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக கிடைத்தது. மற்ற 12 பேருக்கும் இன்னும் பிணை தரப்படவில்லை, பிணை மனு மீது விசாரணை கூட நடத்தப்படுவதில்லை. சிறையில் புத்தகம் படிப்பதற்கு தேவையான கண்ணாடி, கொசுவலை உட்பட மிகமிக அடிப்படையான தேவைகளை கூட அவர்கள் போராடிதான் பெற்று வருகின்றனர். கைதானவர்கள் குடும்பத்திடம் பேசும்போது கூட, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் (குடும்பத்தினருக்கு புரியவில்லை என்றாலும்). இப்படியாக பல்வேறு வகையில் மனரீதியாக, உடல்ரீதியாக அவர்களை சித்தரவதை செய்து செயலிழக்க வைப்பதே பாசிச மோடி அரசின் நோக்கம். ஊபா போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டதே இதற்காகதான்.

மோடி அரசின் அயோக்கியத்தனமான சதி:

மோடி அரசு கைதானவர்கள் மீது சுமத்தியிருக்கும் எந்த குற்றத்திற்கும் அவர்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் இந்த வழக்கு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு புனைவு என்பதை அம்பலப்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி 2021-இல், ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலிசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நிரூபித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் பாதிரியார் ஸ்டான் சுவாமியை கைது செய்ய ஆதரமாக காட்டப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தும் அவரது கணினியின் ஹார்டு டிரைவில் ஹேக் செய்து பொருத்தியுள்ளார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.

மேலும் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க மாகராஷ்டிர மாநில அரசால் அமைக்கப்பட்ட இரு நபர் தலைமையிலான நீதி விசாரணை ஆணையத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த மூத்த போலிசு அதிகாரி கணேஷ் என்பவர் எல்கர் பரிஷத் நிகழ்வுக்கும் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இது புனே போலிசு மற்றும் என்.ஐ.ஏ உருவாக்கிய கதையை ஒட்டுமொத்தமாக திரைக்கிழிக்கும் விதமாக இருந்தது. ஆனால் இதைப்பற்றி யாருமே வாய்திறக்கவில்லை.

இந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டார்கள் என சம்பாஜி பிண்டே மற்றும் மிலிந்த் எக்போட் ஆகிய இரண்டு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் தற்போது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத 16 பேர் சிறையில் உள்ளனர்.

கைதானவர்களை ஒன்றிணைப்பது பாசிச எதிர்ப்பு மட்டுமே:

84 வயதான ஸ்டான்சுவாமி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர். சுதா பரத்வாஜ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞராக வேலை செய்து வந்தவர். கெளதம் நாவ்லாகா தனது எழுத்துக்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். கவிஞர் வரவர ராவ் இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட பெரும்பான்மை மக்களுக்காக எழுதி வந்தவர். வெர்னான் கோன்சால்வ்ஸ் பீமா கோரேகான் வழக்கில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களுக்காக போராடி வந்தவர். இப்படியாக ஒவ்வொருவரும் தலித், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் போன்ற ஒடுக்கப்படும் மக்களுக்காகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தவர்கள்.

மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணையவில்லை. மாறாக பா.ஜ.க-வின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததில்தான் இவர்கள் ஒன்றிணைகிறார்கள்.

கூலிக்கார அறிவுஜீவிகளாக ஆளும்வர்க்கத்தின் நாயாக வேலைப் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்காக உறுதியாக இவர்கள் போராடுவதை பார்த்து தொடைநடுங்கிப் போய் அவர்களை ஒடுக்க நினைக்கிறது பாசிச மோடி அரசு. இவர்கள் மீது அரசு செலுத்தும் பயங்கரவாதத்தை பார்த்து நாளை யாரும் மோடியின் பாசிசத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப, போராட வரமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் திட்டம்.


படிக்க : பீமா கோரேகான் வழக்கு: தலோஜா சிறையில் ஒடுக்கப்படும் கவுதம் நவ்லகா!


ஆனால், பாசிஸ்டுகளின் சதித்திட்டம் என்றைக்கும் வெற்றிப்பெறாது. ஏனெனில் யாரை ஒடுக்க நினைத்து சிறையில் அடைத்தார்களோ அவர்கள் இன்னும் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறையில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஸ்டான் சுவாமி மரணத்திற்கு அரசுதான் காரணம் எனக் கூறி சிறையிலேயே போராட்டங்களை நடத்தினர். வெளியே வந்துள்ள சுதா பரத்வாஜ் சிறையில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

இத்தகைய உறுதியான பாசிச எதிர்ப்பாளர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் மோடி அரசு திட்டமிட்டு அவர்களை சிறை வைத்துள்ளது. இவர்கள் மட்டுமல்ல பீமா கோரேகான் போன்று பல பொய் வழக்குகளில் எண்ணற்ற செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் அப்பாவி பொதுமக்கள் சிறையில் வதைப்பட்டு வருகிறார்கள். சாய்பாபா, உமர் காலித் போன்றோர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலைக்கான ஒரே வழி உறுதியான பாசிச எதிர்ப்பு மட்டுமே! மோடியின் பாசிச அரசுக்கு எதிராகவும், ஊபா போன்ற கொடுஞ்சட்டங்களுக்கு எதிராகவும் இவர்களைப் போலவே நாமும் உறுதியாக போராட வேண்டும்!


அகதா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க