கடந்த சில வாரங்களாக, மகாராஷ்டிரா சிறை அதிகாரிகள், சாதி வன்முறை மற்றும் பிரதமரைக் கொல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படும் 2018 பீமா கோரேகான் வழக்கில், சிறையில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு கொசு வலைகள் மற்றும் தொலைபேசி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மறுத்துள்ளனர்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மின்னணு சாதனங்கள் அரசாங்கங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இராணுவ – தர ஸ்பைவேரைப் பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டன என்பதை அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.
சிறைச்சாலையின் நடத்தையை நிர்வகிக்கும் சிறை விதிகள் சிறை அதிகாரிகளுக்கு தனிபட்ட அதிகாரத்தை வழங்குவதால் இந்த ஒடுக்குமுறைகள் நிகழ்கிறது. கவுதம் நவ்லகா மற்றும் சாகர் கோர்கே ஆகியோர் கொசு வலைகளை பயன்படுத்தி கைதிகளின் கழுத்தை நெரிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர். இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துமாறு கூறிய நீதிமன்றம், சிறைச்சாலைகளில் தொடர்ந்து புகை மூட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
நவ்லகா தனது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்ய தடை விதித்துள்ளது சிறை நிர்வாகம். இதை அவர் நீதிமன்றத்தில் கூறியபோது, மாநில அரசு மார்ச் 25 சுற்றறிக்கையில், “கடுமையான குற்றங்களில்” குற்றம் சாட்டப்பட்ட கைதிகள், மற்ற கைதிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்பு வசதியைப் பெற முடியாது என்று கூறியது. அவரால் சந்திப்புகள் அல்லது கடிதங்கள் எழுத மட்டுமே முடியும் என்றார்கள்.
முன்னதாக, பீமா கோரேகான் குற்றம்சாட்டபட்டவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களை சிறை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். வெளி உலகத்துடன் அரசியல் கைதியின் தொடர்பை அதிகாரிகள் கட்டுப்படுத்துவதற்கு வேறுவழிகளையும் பயன்படுத்திகிறார்கள்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, கடிதம் எழுதும்போதும், உறவினர்களிடம் பேசும்போதும் ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனது தாய்மொழியான தெலுங்கு மொழியை பயன்படுத்தக்கூடாது என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2020 அக்டோபரில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகருக்குச் சென்று பாலியல் வன்கொலை பற்றி புகாரளிக்கச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்ட மலையாளி பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கூட, தன் மனைவியுடன் இந்தியில் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார். அது அவளுக்குப் புரியாத மொழி.
பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.
படிக்க : ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
முன்னதாக, 83 வயதான ஸ்டான் சுவாமிக்கு பார்கின்சன் நோய் காரணமாக ஒரு கிளாஸில் இருந்து குடிக்க முடியவில்லை என்றாலும், அவருக்கு ஸ்ட்ரா வைத்த பாட்டிலை வழங்க சிறை அதிகாரிகள் மறுத்தனர். அவர் ஒரு ஸ்ட்ராவிற்காக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியிருந்தது. 2021 ஜூலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சுவாமி இறந்தார். சிறை அதிகாரிகள் சுவாமியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளதால் அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரினார்.
சிறையில் பெரும் சித்திர்வதைக்கு உள்ளாக்கப்படும் முற்போக்காளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை அரசின் பாசிச கொடுங்கரங்களில் இருந்து விடுதலை செய்ய ஒன்றிணைந்து போராடுவது அவசியம். சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசை வீழ்த்துவதே நம் முன் உள்ள முதன்மை பணி.
சந்துரு
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால்.இன்