சிறை அதிகாரிகள் என்னை ஊனமுற்றவராக உணரச் செய்துவிட்டனர்: பேராசிரியர் சாய்பாபா

“சிறை என்பது வெளி உலகத்தின் ஒரு மாதிரி வடிவமாக உள்ளது; அது சமூகத் தீமைகளின் பூதாகரமாக்கப்பட்ட வடிவமாக உள்ளது” என்று சாய்பாபா குறிப்பிடுகிறார்.

2017 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சாய்பாபாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அதனை ரத்து செய்தது. இந்த வழக்கில் தற்போது விடுதலையடைந்துள்ள சாய்பாபா ஆகஸ்ட் 23 அன்று தெலுங்கானாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனது சிறை அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தெலுங்கானா பணி பத்திரிகையாளர்கள் சங்கம் (Telangana Union of Working Journalists – TUWJ) ஒருங்கிணைத்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் சாய்பாபா தனது சிறை அனுபவத்தை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். ஊபா (UAPA) கருப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது அவர் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்களையும், சிறையின் கொடூர தன்மைகளையும் அப்பேட்டியில் விவரித்தார். மேலும், அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காக ஒரு திரளான முன்னெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தினார்.

இந்தியா ஒரு தொடக்கநிலை பாசிச அரசாக (proto-fascist state) மாறியுள்ளதாகவும், சிறை நிலைமைகள் காலனிய ஆட்சியின் கொடூரத்தை மீண்டும் நினைவூட்டுவதாக இருக்கிறது என்றும் சாய்பாபா கூறினார். மேலும், “இதற்கு முன்பு அரசியல் கைதிகள் இதுபோன்று துன்பப்பட்டது கிடையாது. சிறைவாசம் மனிதர்களை மனித நேயமற்றதாக்குகிறது; அவர்களின் கண்ணியத்தைப் பறிக்கிறது. சாதி ரீதியான பாகுபாடு சிறை வாழ்க்கையில் அதிகம். சிறைக் கைதிகளுக்கு அதன் அடிப்படையில் தான் வேலைகள் ஒதுக்கப்படுகிறது” என்று கூறினார்.


படிக்க: சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !


சாய்பாபா கைது செய்யப்பட்ட போது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் இருந்தபோதிலும் அவருக்கான மருத்துவச் சிகிச்சை அரசால் மறுக்கப்பட்டது. ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் கூட இதுபோன்ற அணுகுமுறை மிகவும் நியாயமற்றதாகும்.

“என் வாழ்க்கையில் முதல்முறையாக ஊனமுற்றவராக சிறை அதிகாரிகள் உணரச் செய்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளை நினைத்து வருத்தப்படாமல் எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். என்னால் மீண்டு வர முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். பத்தாண்டுக்கால சிறைக்குப்பின் அவர் வெளிப்படுத்தும் இந்த நம்பிக்கை விடுதலை தாகத்திற்கான சக்திவாய்ந்த சான்றாக விளங்குகிறது.

அவருக்கு ஜாமீன், பரோல் கோரிக்கை மறுக்கப்பட்டது. தனிமை சிறையில் அவர் எதிர்கொண்டது, அவரது அம்மாவின் இறுதிச் சடங்கிற்குச் செல்வதற்குக் கூட அனுமதிக்கபடதாதை அவர் விவரித்தபோது அது நெஞ்சை உலுக்குகிறது.

“சிறை என்பது வெளி உலகத்தின் ஒரு மாதிரி வடிவமாக உள்ளது; அது சமூகத் தீமைகளின் பூதாகரமாக்கப்பட்ட வடிவமாக உள்ளது” என்று சாய்பாபா குறிப்பிடுகிறார்.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை | வழக்குரைஞர் ப.பா.மோகன் | நேர்காணல்


1894 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் சட்டம் திருத்தப்பட்டதை அவர் விமர்சித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்காக ‘லேசான’ உடல் சித்திரவதையை இச்சட்டம் அனுமதிக்கிறது. இது முற்றிலும் அரசியலமைப்பு உரிமையை அப்பட்டமாக மீறுகிறது. குறிப்பாக, புதிய கைதிகள் சிறைக்கு வந்தவுடன் எந்தவித காரணமின்றி அடிக்கப்படுகின்றனர்; தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அதிலிருந்து தப்புவார்கள் என்பதை சாய்பாபா வெளிப்படுத்தினார். “யாரும் சிறையில் அடைக்கப்படக் கூடாது என்பது எனது நம்பிக்கை. சிறையமைப்பு மனித வாழ்க்கையை மதிப்பிழக்கச் செய்கிறது” என்று சாய்பாபா உறுதியுடன் கூறினார்.

தான் அநியாயமாகக் கைது செய்யப்பட்டது குறித்து விவரித்த சாய்பாபா, ஆப்ரேஷன் கிரீன்ஹண்ட் பிரச்சாரத்திற்கு எதிரான தனது செயல்பாட்டை ஒடுக்கும் வகையில் மகாராஷ்டிரா போலீசு உட்பட அதிகாரிகளிடமிருந்து மிரட்டல்கள் வந்தது குறித்துப் பகிர்ந்து கொண்டார். இதேபோன்ற கொடூரத்தை, அவருடன் சிறையில் இருந்த கடுமையான உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஹனிபாபுவும் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார். சாய்பாபா நீதித்துறையின் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இது சீரழிந்த சமூக நிறுவனங்களின் ஒரு பகுதி  என்றும் குறிப்பிட்டார்.

சாய்பாபாவின் இப்பேட்டி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலின் ஒடுக்குமுறைகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், மக்களுக்காகக் களத்தில் நிற்கும் சாய்பாபாக்களின் போராட்டங்களை எந்த கருப்புச் சட்டத்தின் மூலமும் ஒடுக்க முடியாது என்பதை இப்பேட்டி நமக்கு உணர்த்துகிறது.


ஹைதர்

நன்றி: கவுன்டர் வியூ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க