‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்

"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.

ந்தியாவில் தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தி அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியியல் சார்ந்த மொழிபெயர்ப்பாளருமான மனிஷ் ஸ்ரீவஸ்தவா என்பவரை உத்தரப்பிரதேச போலீசின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு (Anti Terrorist Squad) 2019 ஆம் ஆண்டில் கைது செய்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டில் மனிஷ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது 2025 ஜனவரி 5 அன்று 2019-ல் முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்யப்பட்ட அதே பழைய நக்சல் தொடர்பு வழக்கில் மீண்டும் அவரைக் கைது செய்திருக்கிறது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசு. ஏற்கெனவே நீதிமன்ற பிணையில் இருக்கும் ஒரு நபரை திரும்பவும் கைது செய்ய எந்த நீதிமன்ற ஆவணமும் வழங்கப்படவில்லை;  காண்பிக்கப்படவும் இல்லை. எந்த நீதிமன்றத்துக்கும்  எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

2019 வழக்கில் கைது செய்த போது மனிஷ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட ஏழு பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து (அந்த ஏழு பேருமே அரசியல் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்டவர்கள் என்பது முக்கியமானதாகும்) புதிய ஆதாரங்கள் பல கிடைத்திருப்பதாகவும் அவரது நக்சல் தொடர்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியது. 2019-ல் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையிலேயே கொடிய கருப்புச் சட்டமான ஊபாவின் உட்பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இப்போது கிடைக்கப் பெற்ற புதிய ஆதாரங்களின்படி மனிஷ் ஸ்ரீவஸ்தவா போலியாக (Forgery) தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடனும் கணேஷ் மற்றும் ராகேஷ் என்கிற புனை பெயர்களில் போலியான அடையாள அட்டைகளுடனும் மத்தியப் பிரதேசம் போபாலில் தனது மனைவி அனிதாவுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்திருப்பதாகவும் கணவன் மனைவி இருவருமே இ.பொ.க (மாவோயிஸ்ட்) அமைப்பின் கொள்கை சித்தாந்தங்களை ஏற்றுச்செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசு கூறியது.


படிக்க: நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!


ஆனால் இவையெல்லாம் கற்பனையாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எனவும் தான் போபாலில் ஒருபோதும் வசித்ததில்லை என்றும் தனது சொந்தப் பெயரான மனிஷ் தவிர வேறு எந்த புனை பெயரும் தனக்கு இருந்தது இல்லை என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA – National Investigating Agency) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசு ஆகியவற்றுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடினார். ”இந்த வழக்கு முற்றிலும் அடிப்படை இல்லாதது. அதே பழைய வழக்கில் அதே முதல் தகவல் அறிக்கையில் போலீசு தன்னிச்சையாகச் சேர்த்துக்கொண்ட புதிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதல் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிரானது. சமூகத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொடுமைப்படுத்தி முடக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் கேடான நோக்கத்தை நிறைவேற்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் தனது சொந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளது” என்கிறார் மனிஷ்.

மேலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல்கள் ஊடுருவி இருப்பதாகவும் அங்கு ரகசிய கூட்டங்கள் நடத்தி ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசைத் தூக்கி எறிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் அது பற்றி பின்னர் அறிந்த போலீசார் போபால், கான்பூர், டியோரியா மற்றும் குஷிநகர் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்திய போது அங்கிருந்தும் இந்த வழக்குக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டதாகவும் போலீசு கூறியது.

ஆனால் உண்மையில் மனிஷ் ஆசாத் என்று பரவலாக அறியப்படும் மனிஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது துணைவியார் அனிதா இருவருமே கல்விப்புலம் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்களாவர். அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. மனிஷ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். இவர் தன்னுடைய இரண்டாண்டுக் கால சிறை அனுபவங்களை 2023 இல் “சிறை அனுபவங்களின் டைரி குறிப்பு” என்று நூலாக வெளியிட்டுள்ளார். மேலும் இன்குலாபி சத்தர் சபா என்னும் மாணவர் அமைப்பின் நிறுவனத் தலைவராகவும் இருந்து வருகிறார்.


படிக்க: ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!


இவரது துணைவியாரும் சக சமூக செயற்பாட்டாளருமான அனிதா ஷிரின் என்கிற புனைபெயரில் பல கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். பொலிவியா நாட்டின் தொழிற்சங்க தலைவரான டுமில்ட்டா பாரியஸ் என்பவரின் வாக்குமூலமான “என்னைப் பேச விடு” (Let Me Speak) என்கிற ஆங்கில நூலை இந்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மேலும் வாய்மொழி வரலாறு  (Oral History) என்னும் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவராவார்.

2019 வழக்கில் இ.பி.கோ 120 B, 121A ஆகிய பிரிவுகளில் தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. 2023 தேசிய புலனாய்வு அமைப்பு இவர்களுடையது மட்டுமின்றி வேறு பல சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் தேடுதல் வேட்டை நடத்தியது. தற்போது ஜனவரி 5 அன்று கைது செய்யப்படும் போது இப்படிக் கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரங்களின்படி கைது செய்வதாகக் கூறியது போலீசு. இ.பி.கோ. 120B,121A ஆகிய பிரிவுகளில் அதாவது தேசத்தின் மீது போர் தொடுப்பது மற்றும் சதி வேலைகளில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டுகள் தான் கூறப்பட்டிருந்தன. இந்த தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 419, 420, 467, 468, மற்றும் 471 ஆகிய குற்றப்பிரிவுகளில் அதாவது மோசடி செய்து ஏமாற்றுதல் ஆள் மாறாட்டம் செய்தல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டிருந்தன.

மனிஷ் தரப்பின் வாதங்களை ஏற்று அவர்களது கைது முழுவதுமாக சட்டவிரோதமானது என்று கூறி ஜனவரி 9. அன்று மனிஷ் மற்றும் அவரது துணைவியார் ஆன அனிதாவுக்கும் பிணை வழங்கியது  அலகாபாத் உயர் நீதிமன்றம் அதன் பின்னர்தான் தி வயர் இணையதளம் மனீஷிடம் நேர்காணல் எடுத்து கட்டுரை வெளியிடப்பட்டது. இந்த வழக்கு பற்றி தி வயர் இணையத்தின் நிருபர் கேள்வி எழுப்பிய போது “ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” என்று பதில் அளித்தார் மனிஷ்.

அதைத் தொடர்ந்து மனிஷ் ஸ்ரீவஸ்தவா கைது பிரச்சனையில் பரவலாக எல்லா மனித உரிமை அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் இது தனி ஒரு விவகாரம் அல்ல என்றும் போலீசை உடன் இணைத்துக் கொண்டு பாஜக இந்து மத வெறி கும்பல் நாடு தழுவிய அளவில் நடத்துகின்ற அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்றும் வலுவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!


மேலும் மனீஷினுடைய சகோதரி சீமா ஆசாத் தன் சகோதரரைப் போலவே  ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார். நீண்ட காலமாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் இயங்கி வருபவர். 2010 ஆம் ஆண்டில் சீமா ஆசாத் மற்றும் அவரது கணவரான விஸ்வா விஜய் இருவரையும் மாவோயிஸ்ட் அமைப்பில் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசு. இரண்டு ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு 2012ல் கீழமை நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு அவர்களுக்குப் பிணை வழங்கியது ஆகியவை வேரொரு விவகாரம் ஆகும். அது போலவே மார்ச் 2024 ல் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கிருபா சங்கர் சிங் மற்றும் அவரது துணைவியார் பிந்தா ஆகிய இருவரையும் இதேபோன்று நக்சல் தொடர்பு என்ற வழக்கில் கைது செய்துள்ளது பயங்கரவாத தடுப்பு பிரிவு.

இவ்வாறு மனிஷ் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி அனிதா, மனீஷின் சகோதரி சீமா ஆசாத் மற்றும் அவருடைய கணவர் விஸ்வா விஜய் என்று அனைவருமே குடும்ப ரீதியாக ஜனநாயக உணர்வுடனும் சமூக அக்கறையுடனும் மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்று அர்ப்பணிப்புடனும் இருந்து வருவது தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்துத்துவ கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்களை இலக்கு வைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து சிறையில் அடைத்துவிட எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுகிறது.

ஜனநாயகத்தை நேசிப்பவர்களையும் சமூக அரசியல் உணர்வு படைத்தவர்களையும் இந்து மத வெறி பாசிச கும்பல் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்பதையே மனிஷ் குடும்பத்தின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவர்கள் தங்கள் வாழ்வைப் பணயம் வைத்துப் பெற்ற இந்த அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்து வெறி பாசிச கும்பலை ஒருபோதும் ஜனநாயக பூர்வமாக அணுக முடியாது அணுகவும் கூடாது என்பதுடன் அக்கும்பலை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் பரப்ப வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க