வரலாற்றை ஆராய்ந்தால் முடியாட்சி முதல் குடியாட்சிவரை அனைத்து அரசுகளுமே மக்களின் மீது ஒடுக்குமுறையை செலுத்தும் வன்முறைக் கருவியாக தான் இருந்துவந்துள்ளன. இந்திய வரலாறும் அப்படி தான். அதில் தற்போது மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த உறுப்புகளும் மேலும் மேலும் பாசிசமயமாகி வருகிறது. அதற்கு தக்க எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) 1967, மற்றும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (TADA), 1987 ஆகியவற்றின் கீழ், “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே ஒரு நபரை குற்றஞ்சாட்ட முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை (25.03.2023) அன்று இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றி வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), 1967 கீழ், ஒருவரை கைது செய்யலாம் எனவும், மேலும் அவர் அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் எனும் கட்டற்ற அரச ஒடுக்குமுறைக்கு வழியமைக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த வாரம் தனது தீர்ப்பின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
இக்கொடிய தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான குஜராத்தை சேர்ந்த எம்.ஆர்.ஷா தொடர்ந்து இதுபோன்ற மக்கள் விரோத தீர்ப்பை வழங்கிவருபவர் ஆவார். இவர் நீதிபதியாகப் பதவி ஏற்றதிலிருந்தே இவர்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தனது பேட்டி ஒன்றில் மோடியை மாடல் அண்ட் எ ஹீரோ (model and a hero) என்று புகழ்ந்தவர். எனில் அவர் யாருக்காகச் செயல்பட்டு வருகிறார் என்பதனை புரிந்துகொள்ளமுடியும். இப்படி ஆளும் பாசிச பா.ஜ.க – சங்கபரிவாரின் உறுப்பினர் போலவே செயல்பட்டுக் கொண்டிருப்பது எம்.ஆர்.ஷா. மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித்துறையும் பிற அரசு எந்திரங்களும் அரசின் பிரதிநிதிகளாக இருந்தே செயலாற்றி வருகின்றன.
படிக்க: ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்
ஏற்கெனவே ஊபா சட்டத்தை கருப்புச்சட்டம் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்த்து வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பானது மிக மோசமான மனித உரிமை மீறல்களை விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து, “வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை விட இது மிகவும் மோசமான அடிப்படை உரிமைகளை அழிக்கக்கூடிய தீர்ப்பு” என சட்டவியல் அறிஞர் கெளதம் பட்டாயா விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” எனும் கூற்றிற்கு இணங்க தீர்ப்பு வழங்கும் போது, “இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” என தனது போலி தேசபக்தியைத் தம்பட்டம் அடித்துக் கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
நாட்டையே அதானி அம்பானிக்கு கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கும் மோசமான சூழலில் இப்படிப்பட்ட முதலாளிகளுக்குச் சேவை செய்யும் இவர்களின் தேசபக்தி கேலி கூத்தானது. முதலாளிகளுக்குச் சேவை செய்வது தேசப்பக்தி என்றும், தம் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் நிற்பதும், மக்களுக்கு ஆதரவாக புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நிற்பதும் தேசவிரோதம் எனவும் கற்பித்து கொண்டிருக்கின்றன அரசு இயந்திரங்கள்.
000
மேலே குறிப்பிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு ஊபா வழக்கில் ஒரு தனிநபர் குற்றம் ஏதும் செய்யாமல், அதாவது எந்தவித பயங்கரவாத செயலிலும் ஈடுபடாமல், இந்திய இறையாண்மைக்கும் எவ்வித தீங்கும் செய்யாத நபர், தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக மட்டும் இருந்தால் அவரைக் குற்றவாளியாகக் கருத முடியாதென அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் தற்போது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வெறும் உறுப்பினராக இருந்தால் மட்டும் கூடப் போதுமானது, அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம் எனத் தீர்ப்பை மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஊபா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டதானது அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகப்போராடும் மக்களை, எல்லாவித அடிப்படை உரிமைகளையும் மறுத்துச் சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தி, இனி அரசபயங்கரவாதத்தை யாரும் எதிர்க்கத் துணிய அச்சப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காய் உருவாக்கப்பட்டிருப்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் சமீபகாலமாக அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பவர்கள் என யாராக இருந்தாலும் அனைவரையும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்தப் பாசிச மோடி அரசு.`
ஊபா சட்டம் மற்ற குற்றவியல் சட்டத்தைப் போல் இல்லாமல், இது எவ்விதக் காரணமும் இன்றி வருடக் கணக்காக ஒருவருக்குப்பிணை வழங்காமல் சிறையில் அடைக்கும்படியான முகாந்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை விசாரிக்கும் தேசியப் புலனாய்வு அமைப்பானது, மாநில அரசின் அனுமதியின்றியே எந்நேரத்திலும் எவரை வேண்டுமானாலும் விசாரிக்கவும், கைது செய்யவுமான அதிகாரத்தினை இச்சட்டமானது சாத்தியப்படுத்தி உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திதான் எல்கர் பரிஷத் வழக்கில் மனித உரிமைப் போராளிகளான முனைவர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகியோரை கைது செய்தது மோடி அரசு.
இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான மிக வயதான நபரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு மும்பையில் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது போதிய மருத்துவ வசதி மறுக்கப்பட்டு சூலை 5, 2021 அன்று உயிரிழந்தார். மேலும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் நாட்டையே உலுக்கிய அத்ராஸ் கொலைத் தொடர்பாக நேரில் தகவல் சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த பதிரிக்கையாளர் சித்திக் கப்பன் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !
மேலும் தங்களது உரிமைக்காகப் போராடும் மக்களின் மீதும் மாணவர்களின் மீதும் இக்கொடிய சட்டத்தை ஏவி அடக்குமுறையை நிகழ்த்தி வருகிறது இந்தப் பாசிச அரசு. இந்நிலையில் தான் இதற்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல் “தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தாலே அவரை கைது செய்யலாம்” என்ற இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்தப் பாசிச ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறியுள்ள நிலையில் தங்களது உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் மக்களை அமைப்புகளாக ஒன்றிணைக்க விடாமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
இந்தத் தீர்ப்பின்படி தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற நிலையை எதை வைத்து தீர்மானிப்பார்கள்? ஓர் அமைப்புத் தடைசெய்யப்படாத வரை அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவே கருதப்படுகிறது. ஆனால் தடைசெய்யப்பட்ட உடன் அதில் செயல்படும் உறுப்பினர்கள் எப்படிக் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்? இதற்கெல்லாம் சட்டத்தில் எந்த பதிலும் இல்லை.
ஏற்கனவே ஊபா சட்டத்தைப் பயன்படுத்தி இது போன்ற பொய்யான வழக்குகளைத் தயார் செய்து பல நபர்களை சிறையில் தள்ளியுள்ளது மத்திய அரசு. இனி அரசை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினாலும், தமது உரிமைகளைக் கேட்டாலும் அவர்கள் மீது பொய் வழக்குகளைத் தயார் செய்து சிறையில் அடைப்பதை எளிமைப்படுத்தி இருக்கிறது இச்சட்டம்.
பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருப்பதாகக் கைது செய்யப்பட்ட ஸ்டான்சாமியின் கணினியானது புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களால் ஹாக் (Hack) செய்யப்பட்டுப் பயங்கரவாத அமைப்பில் இருப்பதைப் போன்ற தகவல்கள் அதற்குள் செலுத்தப்பட்டது சமீபத்தில் அம்பலமானது. எனில் இச்சட்டம் ஏற்கனவே யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதனை புரிந்துகொள்ளமுடியும்!
இருப்பினும் அரசானது எந்தளவிற்கு உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டு எந்த அளவிற்கு மிரண்டுப்போய் உள்ளது என்பதனையே அரசின் இந்த மக்கள் விரோத சட்டங்கள் எடுத்து காட்டுகின்றன. அதனால்தான் அத்தகைய அறிவினை வழங்குபவர்கள், வழிநடத்துபவர்கள், கோட்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரின் மீதும் அரச பயங்கரவாத சட்டங்களைப் பாய்ச்சி தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிவகைகளை எல்லா வழியிலும் செய்து வருகிறது மோடி அரசு.
“ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” – என்றார் பாரதிதாசன்.
இதற்கேற்ப கொடிய சட்டங்களை நிறுவி மக்களை எப்போதும் அடக்கி வைக்கமுடியாது என்பதையே உலக வரலாறுகள் காட்டிநிற்கின்றன. இதை ஆட்சியாளர்கள் உணரும் தருணம் வெகுதொலைவில் இல்லை. மக்களின் கோபத் தீ மூளுமேயானால் அது காட்டுத்தீயைப் போல எங்கும் பரவி, வரலாற்றில் வெல்லவே முடியாத சர்வாதிகாரிகளாகத் தம்மைக் கருதிக்கொண்ட பாசிஸ்டுகளலான ஹிட்லர், முசோலினியன அரசுகளைப்போன்று இந்தப் பாசிச அரசையும், எந்தப் பாசிச அரசையும் வீழ்த்துவர். தத்துவமும் அமைப்புகளும் அனைத்து அரசப் பயங்கரங்களையும் தாண்டி மக்களை அணிதிரட்டி அதனைச் சாதிக்கும் நாள் வரும். இது ஆருடம், அல்ல ஆவணம்!
தீ