அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் நிறுவன ரீதியான கொலை
(
பி.கே.-16இன் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் விடுக்கும் அறிக்கை)

6.7.2021

பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களின் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களுமான நாங்கள் அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் இழப்பினால் உலுக்கப் பட்டு ஆழ்ந்த காயமடைந்திருக்கிறோம். இது ஒரு இயற்கையான மரணமல்ல; ஒரு கனிவான ஆத்மாவிற்கு எதிராக ஒரு மனிதாபிமானமில்லாத அரசு நடத்திய நிறுவன ரீதியான கொலை.

வாழ்நாள் முழுவதிலும் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆதிவாசிகளிடையே இருந்து அவர்களுடைய வளங்கள், நிலங்கள் மீது அவர்களுக்கு இருந்த உரிமைக்காகப் போராடிய அருட்தந்தை ஸ்டானுக்கு, அவர் நேசித்த ஜார்கண்டிலிருந்து தொலைதூரத்தில், பழிவாங்கும் உணர்ச்சி மிகுந்த அரசினால் சிறை வைக்கப்பட்ட நிலையில் இப்படி மரணம்  நேர்ந்திருக்கக் கூடாது.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !

பீமா கொரேகான் வழக்கில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 16 பேரில் கடைசியாகக் கைதானவர் அருட்தந்தை ஸ்டான்தான். பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான அவர்தான் கைது செய்யப்பட்டவர்களில் மூத்தவர்; அதிகம் நலிவடைந்தவர். உடல்நிலை மோசமாக இருந்த போதிலும், அவருடைய தார்மீக வலிமையாலும் அசைக்க முடியாத நேர்மையாலும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தார்.

சிறையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்த போதிலும் சக சிறைவாசிகளைக் குறித்தே அவருடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருந்தன. தன்னுடைய கடிதங்களில் பல்வேறு வழக்குகளில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்தவர்களைப் பற்றி எழுதிய அவர் சமுதாயத்தில் நிலவும் அநீதிகளைக் குறித்து வேதனையில் புழுங்கினார்.

அவருடைய கனிவையும், மனித நேயத்தையும், இரக்க உணர்வையும் நினைத்துப் பார்க்கும் நேரத்தில், அவர் சிறைவைக்கப்பட்டதெனும் மாபெரும் அநீதியை மறக்க முடியாது. அருட்தந்தை ஸ்டான் போல் வயதுமுதிர்ந்த நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவர் சிறையிலடைக்கப்படுவதே, அதுவும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடப்பது, மனசாட்சிக்கு விரோதமானது.

அக்டோபர் 8, 2020-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டபோதே அவருக்கு எதிரான விசாரணை முடிவுற்றிருந்தது; அவர் ஓடிப் போகும் அபாயம் இல்லை என்பதும் தெளிவு. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதும், நவி மும்பையிலிருக்கும் தஜோலா சிறையில் அடைக்கப்பட்டதுமே அவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை போன்றதுதான்.

அருட்தந்தை ஸ்டான் கைது செய்யப்பட்ட நேரத்தில் மனதை உருக வைக்கும் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அவருடைய கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் – அந்த ஆவணங்களை அவர் அதற்கு முன் பார்த்ததில்லை, தன் கணிணியில் பதியவுமில்லை என்ற போதிலும் – அவர் ஒரு மாவோயிஸ்ட் சதியில் ஈடுபட்டதாக மென்மையான ஆனால் தெளிவான குரலில் கூறினார்.

அந்த ஆவணங்கள் அவருடைய கணிணியில் தொலைத்தூரத்திலிருந்து திருட்டுத் தனமாக பதியப்பட்டன என்பதை இந்த வருட ஆரம்பத்தில் ஆர்சனல் கன்சல்டிங் என்கிற நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் வெளியிட்ட ஸ்தம்பிக்க வைக்கும் உண்மைகள் உறுதிப்படுத்தின.

நெட்வைர் மால்வேர் என்கிற இணையக் கருவியைப் பயன்படுத்தி பீமா கொரேகான் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணிணிகளில் அவர்களை சதியில் தொடர்பு படுத்தும் ஆவணங்களை தொலைத்தூரத்திலிருந்து பதிந்த முறையையும் அந்த இரு நிறுவனங்களும் விளக்கியிருந்தன. இப்படி தீய நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கு விலையாக அருட்தந்தை ஸ்டான் தன் உயிரைக் கொடுக்க நேர்ந்திருப்பதைக் கண்டு நாங்கள் கொதித்துப் போயிருக்கிறோம்.

அருட்தந்தை ஸ்டான் சிறையிலடைக்கப்பட்ட பிறகும் கூட அவரது உடல்நிலையைக் குறித்து கவலை கொள்ளாத பொறுப்பற்ற போக்கு தொடர்ந்தது. சிறையில் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சிக் குடிக்க உதவும் கோப்பையைப் பயன்படுத்தக் கூட அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அடிப்படையான இந்தத் தேவைக்காகக் கூட அவர் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. நீதிமன்றமும் விரக்தியடையச் செய்யும் வகையில் மெத்தனமாக நடந்து கொண்டது.

பின்னர் அவரது உடல் நிலை தொடர்ந்து சீரழிந்து வந்த போதிலும் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணையில் விடுவிக்குமாறு அவர் செய்த மனுவும் இதே குருட்டுத் தனமான, உணர்ச்சிகளற்ற, சொரணையற்ற என்.ஐ.ஏ. நீதிமன்றத்தால் எந்திர ரீதியாக நிராகரிக்கப்பட்டது. அவருக்கு கோவிட் தொற்று இருக்கிறதா என்பது கூட மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்படவில்லை; உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன்தான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரி செய்த மனுவின் விசாரணையின் போது அவர், தன் மோசமாகி வரும் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் நிகழ்த்திய உருக வைக்கும், இதயத்தை உடையச் செய்யும் உரையை நாம் மறக்க முடியாது. தான் நீண்ட நாள் உயிரோடு இருப்பேன் என எதிர்பார்க்கவில்லையென்றும், ராஞ்சியிலிருக்கும் பகாய்ச்சவில் வாழும் தன் மக்கள் கூட்டத்துக்கு நடுவே இருந்து இறக்க விரும்புவதாகவும் அவர் பேசினார். இந்த எளிமையான வேண்டுகோளைக் கூட நம் நீதித் துறையினால் நிறைவேற்ற முடியவில்லை என்பது கேவலமானது.

அருட்தந்தை ஸ்டானின் மறைவு குறித்து நாம் சோகமாயிருக்கும் அதே நேரத்தில், அவரது துரதிருஷ்டவசமான மரணத்துக்கு அலட்சியமான சிறைச்சாலைகளும், பொறுப்பற்ற நீதிமன்றங்களும், தீய நோக்கம் கொண்ட புலனாய்வு அமைப்புகளுமே பொறுப்பு என நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம்.

இதே சிறைகளில், இதே பொறுப்பேற்க மறுக்கும் அமைப்பின் அடியில், இதேபோன்ற அநீதிகளை எதிர்கொண்டிருக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களின் உடல்நிலை குறித்தும் உயிர் குறித்தும் அச்சம் கொண்டிருக்கிறோம். அனைவரின் பாதுகாப்பையும் நாங்கள் விழிப்புணர்வுடன் தொடர்ந்து கண்காணிப்போம். “நாங்கள் அமைதியான பார்வையாளர்களாக இருக்க மாட்டோம்; அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருப்போம்.” இதைத்தான் அருட்தந்தை ஸ்டானும் விரும்பியிருப்பார்.

இப்படிக்கு,
மீனால் காட்லிங்க், ராய் வில்சன், மோனாலி ராவுட், கோயல் சென், ஹர்ஷாலி போட்தார், ஷரத் கெய்க்வாட், மாய்ஷா சிங், ஒய். ஃஃபெரேரா, சூசன் ஆப்ரஹாம், பி. ஹேமலதா, சபா ஹுசைன், ரமா டெல்டும்ப்டே, ஜென்னி ரொவீனா, சுரேகா கோர்க்கே, ப்ரனாலி பரப், ருபாலி ஜாதவ், அருட்தந்தை ஜோ சேவியர்


தமிழாக்கம் : விஜயசங்கர் ராமச்சந்திரன்
முகநூலில் : Vijayasankar Ramachandran

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க