Wednesday, December 11, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்எல்கர் பரிஷத் வழக்கு: மனித உரிமை ஆர்வலர் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!

எல்கர் பரிஷத் வழக்கு: மனித உரிமை ஆர்வலர் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!

உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் முற்போக்காளர்களை காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

-

ல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரும், மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலருமான வெர்னான் கோன்சால்வ்ஸுக்கு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சிறையில் பலமுறை மயங்கி விழுந்தார். தலோஜா மத்திய சிறை அதிகாரிகள், அவருக்கு பாராசிட்டமால் மருந்தைமட்டும் செலுத்தி, மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

செப்டம்பர் 8 ஆம் தேதி, அவரது மனைவியும் அவரது வழக்கறிஞருமான சூசன் ஆபிரகாம் சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தில் மருத்துவத்திற்காக முறையிட்டார். அதன் விளவாக அவர் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த நேரத்தில், கோன்சால்வ்ஸின் நிலை மோசமடைந்துவிட்டது. அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாக ஆபிரகாம் கூறினார்.

கோன்சால்வ்ஸ் இரண்டு வாரங்களாக டெங்குவால் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது என்றும் ஜேஜே மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

***

கடந்த 2018-ஆம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் 65 வயதான கோன்சால்வ்ஸ் ஒருவர் ஆவார். புனே போலீசுத்துறை – 2019 இறுதி வரை வழக்கை விசாரித்தது – கோன்சால்வ்ஸ் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் “நகர்ப்புற நக்சல்கள்; இவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் “ராஜீவ் காந்தி கொலைக்கு” சதி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிக்க : ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!

இந்த வழக்கு பின்னர் 2020-இல் NIA-விற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. NIA குற்றப்பத்திரிகையில் பிரதமரைக் கொல்லும் திட்டம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

***

செப்டம்பர் 7 ஆம் தேதி, வழக்கறிஞர்களும் கோன்சால்வ்ஸின் குடும்பத்தினரும் அவருக்கு உடல்நலக்குறைவு பற்றி அறிந்தவுடன், அவர்கள் மும்பையில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் தற்காலிக ஜாமீன் கோரி விண்ணப்பம் செய்தனர்.

கோன்சால்வ்ஸின் வழக்கறிஞர் லார்சன் ஃபர்டாடோ, விண்ணப்பத்தில், அவர் செப்டம்பர் 7-ஆம் தேதி தலோஜா சிறைக்குச் சென்றதாகக் கூறுகிறார். கோன்சால்வ்ஸ் மோசமான நிலையில் இருப்பதாக சிறையில் இருந்தவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

“1வது நாள் – ஆகஸ்ட் 30: வெர்னானுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இது குறித்து வருகை தந்த மருத்துவரிடம் தெரிவிக்கப்பட்டபோது, ​​அவரை பரிசோதிக்காமலேயே 3 நாட்கள் பாராசிட்டமால் மற்றும் எரித்ரோமைசின் கொடுத்தார்; செப்டம்பர் 1ம் தேதி வரை, காய்ச்சல், தொடர்ந்து இருமல் மீண்டும் தொடர்ந்தது” என்று உடன் இருந்த தோழர்கள் கூறியுள்ளனர்.

4 ஆம் நாள், மற்ற சிறைத் தோழர்கள் சிறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இறுதியாக, கோன்சால்வ்ஸ் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். இங்கே, அவருக்கு மீண்டும் சில Antibiotic – நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவருக்கு எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. 8வது நாள் தான் கோன்சால்வ்ஸ்-விற்கு மலேரியா பரிசோதனை செய்யப்பட்டது. இது டைபாய்டு அல்லது டெங்குவாக இருக்கலாம் என்று கோன்சால்வ்ஸைப் பரிசோதித்த மருத்துவர் சிறை அதிகாரிகளிடம் கூறியிருந்தார். ஆனால், சிறை அதிகாரிகள் மற்ற காய்ச்சல் பரிசோதனைக்கு உத்தரவிடவில்லை.

செப்டம்பர் 7ஆம் தேதி தலோஜா சிறை அதிகாரிகளிடம் கோன்சால்வ்ஸ் கூப்பிய கைகளுடன் கெஞ்சிய பின்னரே, அவர் இறுதியாக ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தோழர்கள் கூறினர். இங்கு, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் ஆக்ஸிஜன் அவருக்கு செலுத்தப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 8, வியாழன் அன்று, வழக்கறிஞர்கள் நிலைமை அறிந்து அளித்த விண்ணப்பம் இறுதியாக NIA நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. நீதிபதி ஆர்.ஜே. கட்டாரியா உடனடியாக போதிய மருத்துவ வசதிகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  கோன்சால்வ்ஸ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.

***

கடந்த நான்கு ஆண்டுகளில், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் சிறையில் இருந்தபோது கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். ஒவ்வொரு முறையும் மருத்துவ தலையீடு கோரி அவர்கள் விசாரணை நீதிமன்றத்தையும், பம்பாய் உயர் நீதிமன்றத்தையும் நாட வேண்டியிருந்தது. 84 வயதான ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின உரிமை ஆர்வலர் தந்தை ஸ்டான் சுவாமிக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிறை அதிகாரிகளின் தாமதம் செய்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். கோன்சால்வ்ஸ் மற்றும் சக மனித உரிமை ஆர்வலர்கள், சுவாமியை அவரது இறுதி நாட்களில் கவனித்துக் கொண்டனர். அதேபோல், வரவர ராவ் சிறையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு பின்னர் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு நிரந்தர மருத்துவ ஜாமீன் வழங்கியது.

***

இந்நிலையில் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதை கண்டித்து, குற்றவியல் அலட்சியம் என்று சிறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக செப்டம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட அனைத்து “அரசியல் கைதிகளுக்கும்” விரைவான சிகிச்சையை உறுதிசெய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்க : நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!

“எல்கர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டான் சுவாமி, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை மறுக்கப்பட்ட பின்னர் விசாரணையில் இருக்கும்போதே காலமானார், அதேபோல், பல்வேறு யுஏபிஏ குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட நாக்பூர் சிறையில் 33 வயது பழங்குடியினரான பாண்டு நரோட் இறந்த அதிர்ச்சியான செய்தியை நாங்கள் சமீபத்தில்தான் கேட்டோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது மரணம் நிகழ்ந்ததாக நரோட்டின் வழக்கறிஞர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“பல ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். சிறையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் உடனே நீதிமன்றம் தலையிட வேண்டும். இதனால் அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர்களை பொய்வழக்கு போட்டு சிறையில் வைத்து சித்திரவைதை செய்யும், போலீசுத்துறை – NIA – சிறைத்துறை – நீதிமன்றம் – மோடி அரசு ஆகியவற்றிற்கு உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து தகுந்த எதிர்வினையை கொடுக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் முற்போக்காளர்களை காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க