எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பழங்குடியின மக்களுக்காக களப்பணியாற்றிய ஸ்டான் சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பார்கின்சன் நோய் மற்றும் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான சுவாமி, கடும் அலைக்கழிப்புகளுக்கு பின்னர், நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையிலிருந்து மே 28 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இங்குள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கூறினார்.
படிக்க :
♦ நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
♦ சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !
தலோஜா சிறை அதிகாரிகளின் “கிரிமினல்தனமான அலட்சியம்” காரணமாக இது நிகழ்ந்ததாக தேசாய் குற்றம் சாட்டினார். அவர்கள் கைதிகளுக்கு தேவையான கவனிப்பை வழங்கத் தவறிவிட்டனர் எனவும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை சரியான நேரத்தில் நடத்தத் தவறிவிட்டனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பார்க்கின்சன் நோய் காரணமாக கைநடுக்கம் உள்ள நிலையில், ஸ்டான் ஸ்வாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் வழங்குவதற்குக்கூட பல மாதங்கள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக அவரது உடல்நிலை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில், மே 28 அன்று, நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் என்.ஆர். போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலோஜா சிறையில் இருந்து மருத்துவமனைக்கு ஸ்டான் ஸ்வாமியை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அக்டோபர் 2020-ல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து சுவாமி, தலோஜா சிறை மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக நீதிபதி எஸ்.ஜே. கதவாலா தலைமையிலான விடுமுறை அமர்வு முன்பு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிணை வழங்காத நீதிமன்றம், சுவாமியை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள அரசு ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றலாம் என அமர்வு கூறியது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான சுவாமி, ஜே ஜே மருத்துவமனையில் அனுமதியாக மறுத்துவிட்டார். அவர் ஏற்கனவே இரண்டு முறை அங்கு இருந்ததாகவும், ஆனால் எந்த மருத்துவ நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் கூறினார்.
ஜே ஜே மருத்துவமனைக்கு செல்வதை விட சிறையில் இறப்பேன் என அவர் கூறியிருந்தார். அரசு மருத்துவமனை ஒரு அரசியல் சிறைவாசியை நடத்திய விதம் இதுதான்.
தலோஜா சிறையில் இருந்தபோது அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் சீராக குறைந்து வருவதாக சுவாமி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனவே, இடைக்கால பிணையை வழங்குமாறு வலியுறுத்தினார்.
அவரது உடல்நிலை மற்றும் சக நோய்களைக் கருத்தில் கொண்டு, சுவாமி கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என வழக்கறிஞர் தேசாய் அமர்வில் தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் தனது சக கைதிகள் பற்றியும் கவலைப்படுவதாக சுவாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டு விசாரணைகளிலும், என்.ஐ.ஏ வின் ஆலோசகர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் மற்றும் மாநில ஆலோசகர் ஒய் பி யாக்னிக் ஆகியோர் தேசாயின் கோரிக்கையை எதிர்த்தனர்.
தனியார் மருத்துவமனையில் சுவாமியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் அவர் ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.
இருப்பினும், சுவாமி மற்றும் அவரது உதவியாளர்களால் சிகிச்சைக்கான செலவு ஏற்கப்படும் என வழக்கறிஞர் கூறியதையடுத்து சுவாமியை ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதி ஷிண்டே தலைமையிலான அமர்வு அனுமதித்தது.
படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
இந்த சட்டப் போராட்டங்களுக்குப் பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்கள் மீது குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படாத நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக பிணையும் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று காலத்தில் சிறைகள் தொற்றுக்கூடங்களாக மாறி வருகின்றன.
தொற்று அறிகுறிகள், பாதிப்புகள் இருந்தும்கூட நீண்ட போராட்டத்துக்குப் பின்பே அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத கொடுங்கோல் அரசாக மத்தியில் ஆளும் பாஜக அரசு உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்கர் பரிஷத் வழக்கு மீண்டும் புலனாய்வு செய்யப்படும் என கூறிய காங்கிரஸ் கட்சி, கூட்டணி வகிக்கும் சிவசேனா அரசாங்கமும் சளைத்ததல்ல என்பதை சிறையிலும், அரசு மருத்துவமனையிலும் ஸ்டான் சுவாமி நடத்தப்பட்ட விதம் எடுத்துக் காட்டுகிறது.
கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா