தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு நகரங்களில் சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படவேண்டும் என்று போலீசுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு போலீசுத்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உட்பட உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஏடிஸ் (Anti-Terrorism Squad) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆக்டோபஸ் (Organisation for Counter-Terrorist Operations) ஆகிய சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் அலுவலகங்களை பார்வையிடச்சென்றது.
அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அவர்களுக்கான பயிற்சிமுறை, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்துள்ளதாகவும், அது குறித்த விரிவான அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சைலேந்திரபாபு கூறினார்.
“அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின்பு இந்த சிறப்பு பிரிவிற்கான பணிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே பணியில் இருக்கும் அதிகாரிகள் இப்பணியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மத்திய அரசின் கீழ் செயல்படும் புலனாய்வு அமைப்புகளுடன் இந்த சிறப்பு பிரிவு ஒத்திசைவாக செயல்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) உடன் இணைந்து செயல்படப்போகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு என்.ஐ.ஏ-வுடன்டன் இணைந்து சமூக ஆர்வலர்களையும் அரசை கேள்வி கேட்கும் அறிவுத் துறையினரையும் வேட்டையாடப் போகிறது. கடந்த செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ மற்றும் ஏ.டி.எஸ் ஆகியவை இணைந்து கைது செய்ததானது தமிழ்நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதற்கு ஒரு சான்று.
படிக்க: அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்
இந்த சிறப்பு பிரிவுக்கு 18 முதல் 21 வயதிலான இளைஞர்களை தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நவீன ஆயுதங்களை கையாளும் வகையில் இரண்டு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்சி, பிற மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளாலும் இந்திய ராணுவ அதிகாரிகளாலும் அளிக்கப்படும். இதற்கென பிரத்தியேகமாக ஒரு பயிற்சி பள்ளியும் உருவாக்கப்படும். இப்படையை உருவாக்க அரசு முனைப்பாக இருக்கிறது; 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படைக்கான ஆட்சேர்ப்பு துவங்கப்பட உள்ளது” என்று போலீசு உயர் அதிகாரி தெரிவித்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் இந்த சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும். இது ஒவ்வொரு நகரிலும் 40 – 50 பேரை கொண்டதாக இருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த பிரிவுக்கு ஏடிஜிபி அல்லது ஐஜி நிலையில் உள்ள ஒரு அதிகாரி தலைமை வகிப்பார். மற்ற நகரங்களில் தேவை ஏற்பட்டால் இவர்கள் அங்கேயும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சிறப்பு பிரிவு – சிஐடி-யில் (Special Branch-CID) புதியதொரு உளவுப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு II – சிஐடி (SB II-CID) என்ற உளவுப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் ‘க்யூ’ பிரிவு (Q Branch) என்று பெயர் மாற்றம் இயங்கி வருகிறது. இந்த வரிசையில், தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தை காரணம் காட்டி, தீவிரவாத தடுப்பு பிரிவு (Counter-Terrorism Squad) என்ற மேலும் ஒரு சிறப்பு போலீசுப்படையை உருவாக்கவுள்ளது தமிழக அரசு.
படிக்க: மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !
இப்படி பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும். மேலும், முஸ்லீம் மக்களின் மீதான வெறுப்பை தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இவை அமையக்கூடும். அதாவது, அரசு எந்திரத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவாரக் கும்பல் ஊடுருவி இருப்பதால், இந்த சிறப்பு பிரிவையும் பாசிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொள்வது மிக எளிதாகிறது. எனவே, திமுக அரசு கொண்டுவரும் இந்த சிறப்பு காவல்படை பிரிவு போன்ற நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
பொம்மி
செய்தி ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா