பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த எம். வெற்றிச்செல்வன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாசுதேவனின் சட்டவிரோதக் கட்டுமானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடிவருகிறார். 2013, 2014-ம் ஆண்டுகளில் ஈஷாவுக்கு எதிராக இவரால் வழக்குகள் தொடரப்பட்டன. ஈஷா சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்டுமானங்களை இடித்துத்தள்ள வேண்டும் என நகர்ப்புற திட்டமிடல் துறை அளித்த ஆணையைச் செயல்படுத்த வேண்டும், இந்த சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படாத அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும், சன்ஸ்க்ருதி என்ற பெயரில் ஈஷா சட்டவிரோதமாக நடத்திவரும் பள்ளிக்கூடம் மூடப்பட வேண்டும், ஈஷாவுக்கு குறைந்த விலையில் தரப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என தனது மனுவில் வெற்றிச் செல்வன் கோரியிருக்கிறார்.

2013 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை இந்த மனுக்கள் மீது பத்து முறை விசாரணை நடைபெற்றது. அதற்குப் பிறகு விசாரணை ஏதும் நடக்கவில்லை. “ஈஷாவில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்ற எங்களுடைய மனு மீது 2013 மார்ச் 8-ம் தேதி விசாரணை நடந்தது. ஈஷா, மாவட்ட ஆட்சியர், வனத்துறை HACA, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த விசாரணை மார்ச் 25-ம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென ஈஷாவின் வழக்கறிஞர் கோரினார்.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

ஜூன் 20-ம் தேதியன்று ஈஷா, நகர்ப்புற திட்டமிடல் துறை, மாநில அரசு ஆகியவை தங்கள் பதில்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தன. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 22-ம் தேதி மேலும் மூன்று மனுக்களைத்தாக்கல் செய்தோம். இவை எல்லா மனுக்களும் சேர்த்து அடுத்த நாள் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் வாதிட்டோம். ஆனால், மாநில அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆகவே வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

2014 மார்ச் 13-ம் தேதி நடந்த விசாரணையின்போது, பள்ளிக்கூடங்கள் எதையும் நடத்த தாங்கள் ஈஷாவுக்கு அனுமதியளிக்கவில்லையென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இதற்குப் பிறகு எல்லாத் தரப்பும் தங்கள் பதில் வாதங்களை சமர்ப்பித்தால், இறுதி விசாரணை நடக்குமென நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

2017-ல் ஈஷாவின் மகாசிவராத்திரி விழாவை எதிர்த்து வெற்றிச்செல்வன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல்செய்த முந்தைய மனுவே நிலுவையில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
“நான் உள்நோக்கத்துடன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றம் சொன்னது. ஈஷாவின் சுற்றுப்புறத்தில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் கடந்த 15 – 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யானைகள் செல்லும் வழியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பகுதியின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கத்தான் நாங்கள் முயற்சிசெய்தோம். அதனால்தான் ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்த்துப் போராடுகிறோம். இதில் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

தனது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததற்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதாவது, மகாசிவராத்திரி போன்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியது.

வெற்றிச்செல்வனைப் போலவே The Velliangiri Hill Tribal Protection Society என்ற அமைப்பும் நீதிமன்றத்தை அணுகியது. இக்கரைப் பொலவம்பட்டியில் உள்ள முட்டாத்து ஆயல் குடியிருப்பைச் சேர்ந்த 49 வயதான பி. முத்தமாள் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்து ஆதிவாசிகளின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகியிருப்பதாக முத்தம்மாள் வாதிட்டார். எவ்விதமான அனுமதியையும் பெறாமல் 112 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆதியோகி வடிவத்திற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்த நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனர் ஆர். செல்வராஜ், அந்த ஆதியோகி வடிவம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் கட்டப்பட்டது என்று நீதின்றத்தில் தெரிவித்தார். ஆனால், செல்வராஜ் தனது பதிலை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அந்த ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அந்த ஆதியோகி சிலை என்பது சட்டச்சிக்கலில் இருக்கிறது என்பது தெரிந்தும் அதனைத் திறந்துவைக்க நரேந்திர மோதி தயங்கவில்லை. ஈஷா இவ்வளவு தைரியமாக சட்டமீறல்களைச் செய்வதற்குக் காரணம், அந்த அரசுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு. குறிப்பாக அப்போதைய தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு.
ஈஷா ஆசிரமம் ஒன்றும் யானைகள் செல்லும் பாதையில் அமைந்திருக்கவில்லையென தனது நிலைப்பாட்டை மாற்றி நீதிமன்றத்தில் கூறியது தமிழக வனத்துறை.

படிக்க :
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

நியூஸ்லாண்டரிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, 2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுமானங்களும் அங்கு வந்து குவியும் மக்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிப்பதாக குறிப்பிட்டார். மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் அங்கு வந்து குவிகின்றனர். மிகப் பெரிய வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் பொறுத்தப்பட்டு, பெரிய பெரிய ஒலிபெருக்கிகளும் வைக்கப்படுகின்றன.

2013-ல் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஈஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இக்கரைப் பொலுவம்பட்டியின் காப்புக்காட்டுப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டடங்களால் யானைகள் செல்லும் பாதைகள் மறிக்கப்படுவதாகவும் இதனால் மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் கூறிய அறிவிப்பு, மின்சாரம், குடிநீர் ஆகியவை துண்டிக்கப்படும் எனக் கூறியது. HACA ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருப்பதால் அந்த இடம் இடித்துத்தள்ளப்படும் என்றும் அறிவிப்பு கூறியது.

ஆனால், 2020வாக்கில் வனத்துறை அதிகாரிகள் வேறு கதை சொன்னார்கள்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1: சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2: யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி!

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க