முறிந்துகிடக்கும் இந்தியாவின் கொரோனா இறப்பு விவரங்கள் : தீர்வு காண்பது எப்படி?

கடந்த ஓராண்டு காலமாக, இந்திய ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு பதில் சொல்ல பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?

அரசாங்கத்தின் தரவுகளில் பெரும் முரண்பாடுகள் இருப்பதால், இந்த விவரங்களை வெளிக் கொண்டுவர ஊடகத்துறையினர் பல்வேறு வகையான, வழக்கத்திற்கு மாறான உத்திகளை பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் வெளியிடும் இந்த எண்ணிக்கையில் என்ன பிரச்சனை  இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

படிக்க :
♦ மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

கோவிட்-19 இறப்பு கணக்கை தவறவிட மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளன.

  1. கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்த நபரை, தொற்று இல்லாமல் இறந்ததாக பதிவு செய்வது அல்லது தொற்று உறுதிசெய்யப்பட்டவர் வீட்டிலேயே இறந்துவிட்டால் அந்த இறப்பினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாலேயே விட்டுவிடுவது.
  2. கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளாத நபர் நோய்த் தொற்றினால் இறந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளாததால் அவர் கோவிட்-19 இறப்புகளில் சேர்க்கப்படமாட்டார்.
  3. கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாகக் காட்டிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள்.

மேற்கூறியவற்றில் மூன்றாவது வாய்ப்பு முக்கியமானதும் பெரும்பாண்மை வகிப்பதும் என்று பலர் கருதலாம். அதேவேளையில், மற்ற இரண்டு அம்சங்களும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளபடி, தற்போதைய தொற்று நோயின் இறப்புகளைப் பதிவு செய்ய சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கூறுகிறது.

ஒரு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் மரணம் கோவிட்-19 மரணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மேலும், ஒரு நபர் தற்போதைய நோய்த் தொற்றின் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் இறந்தாலும், அவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்ததாக எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறியீடுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் “நோய்களின் சர்வதேச வகைப்பாடு” (INTERNATIONAL CLASSIFICATION OF DISEASES _ ICD-10) வழிகாட்டியுள்ளது.

அதன்படி,

  1. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சுவாசக் கோளாறு காரணமாக இறந்திருப்பதாகத் தோன்றினாலும், – தனித்துவமான இறப்பு முறையாக இருப்பதால் – அவரது இறப்பை கோவிட்-19ஆல் ஏற்பட்ட இறப்பு என்றே கணக்கில் கொள்ள வேண்டும்.
  2. தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு வேறு பல நோய்கள் இருப்பின் நிச்சயமாக அவர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால், மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்று கருத்தக் கூடாது, மாறாக இறப்பின் காரணம் கோவிட்-19 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒருவர் கோவிட்-19 பரிசோதனையை எடுக்காமல் அல்லது நோய்த் தொற்று இல்லாதவர் என்று பரிசோதனையில் முடிவு வந்திருந்தாலும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரது இறப்பு, “சந்தேகத்திற்குரிய அல்லது கோவிட்-19ஆல் ஏற்பட்ட மரணம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை. பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் எங்களுக்கு சொன்னது என்னவென்றால், ஒருவர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்களில் உயிரிழந்தாலோ அல்லது அறிகுறிகள் தெளிவாக வெளிப்பட்டாலோ மட்டுமே அந்த மரணம் கொரோனாவினால் எற்பட்ட மரணம் என்று கணக்கிடப்படுகிறது.

இதுவே ஒரு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சில வாரங்களில் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் காணப்படலாம். இந்த நிலையில் அவர் இறந்தாலும் அவரது இறப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

பெரும்பாலான மாநிலங்கள் “சந்தேகத்திற்குரிய கொரோனா இறப்புகளை” கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இரண்டாம் அலையின் போது பல சந்தேகத்திற்குரிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனை நடைபாதைகளில் மற்றும் வீடுகளில் இறந்துள்ளனர். இவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் பாதிக்கும் குறைவானவைதான் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன என 2018-இன் அரசின் தரவுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது, தற்போது கோவிட்-19 இறப்புகள் என அதிகாரப் பூர்வமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மிகப் பெரும்பாலானவை மருத்துவமனைகளில் நிகழ்ந்ததுள்ளவை மட்டுமே.

அதே வேளையில், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால், மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்புகளின் சதவீதமும் உயர்ந்துள்ளது. உதாரணமாக, டயாலிசிஸ் (Dialysis) மற்றும் கோவிட் அல்லாத ஆக்சிஜன் தேவை காரணமாக நிகழும் இறப்புகளும் உயர்ந்து வருகின்றன. மேலும், பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு நெருக்கமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசால் சொல்லப்படும் தரவுக்கும் உண்மையாக இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதைக் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரும் வேறுபாடுள்ள கோவிட்-19 இறப்புகளின் தரவுகளினால், இப்பத்திரிக்கையாளர்கள் இறந்தவர்களைத் தகனம் செய்யும் இடங்களுக்கும் புதைக்கும் இடங்களுக்கும் சென்று தரவுகளைச் சேமிக்கின்றனர். ஆனால், இம்மாதிரி குளறுபடியான தரவுகளை ஒருங்கிணைப்பதனால் இந்த நோய்த் தொற்றை நம்மால் ஒருபோதும் சரி செய்ய முடியாது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, தகனம் செய்யும் இடங்களிலும் புதைக்கும் இடங்களிலு பதிவேடுகள் முறையாகப் பாராமரிக்கப் படுவதில்லை. தகனம் செய்து முடிந்த நபர்களின் எண்ணிக்கை சரியாகப் பராமரிக்கப் படாததால் பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களின் தரவுகளை சரியாக கணக்கிட முடியாது. மேலும், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறையின்படித் தகனம் செய்த நபர்களின் எண்ணிக்கையும் முறையாக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில், நோய்த் தொற்று உடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும் நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் முன்னெச்சரிக்கையாக இந்த நெறிமுறையின்படியே தகனம் செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில், ஒரு மாநிலத்துக்குள்ளே அல்லது ஒரு நகரத்துக்குள்ளே தகனம் செய்யும் இடங்களில் சேகரிக்கப்படும் தரவுகள் முறையானதாக இருப்பதில்லை. உதாரணமாக, பெங்களுருவில், கோவிட்-19 தொற்று காரணமாக இறந்த நபரையும் கோவிட்-19 பரிசோதனை மட்டுமே எடுத்துக் கொண்ட நபரையும் ஒரே இடத்தில் தகனம் செய்கின்றனர். பரிசோதனை செய்துக் கொண்டவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதா? இல்லையா? என்ற எந்தச் சோதனையும் நடைபெறுவதில்லை. மேலும், பெங்களுருவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு அடையாள அட்டை வழங்கப் படுகிறது. ஆனால், இந்த முறையானது வேறு எங்கும் இல்லை.

கேரளாவில், பல தகனம் செய்யும் இடங்களில் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதற்கான மருத்துவரின் சான்றிதழை குடும்பத்தினர் முறையாக வைத்திருக்கும் போதிலும், தகனம் செய்யும் இடங்களில் அதைக் குறிப்பிடாமல் தவறவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதானது, வாய்வழியாக மட்டுமே உறவினர்களுக்குச் சொல்லப் படுகிறது. எனவே, அவர்கள் இறக்கும் போது முறையான ஆதாரங்கள், ஆவணங்கள் எதுவும் இல்லையென்பதால் அந்த மரணங்களும் கோவிட் அல்லாத மரணங்களாகவே தகனம் செய்யும் இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன.

மேலும், கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் தொற்றினை சரிசெய்து கொள்ள பெருநகரங்களுக்கு வருபவர்களில் சிலர் இறக்கின்றனர். இவர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப் படுகிறது. அதனாலும் பெருநகரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

நோய்த் தொற்று காரணமாக இறப்புகளைப் பதிவு செய்வது இந்தியாவில் முழுமையற்றதாக உள்ளதால், முந்தைய ஆண்டுகளின் “எல்லா மரணங்களையும் அவற்றின் காரணங்களையும்” எடுத்து ஒப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு செய்யலாம். 2018-இன் தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தில் 86 சதவீதம் இறப்புகள் மட்டுமே பதிவாகிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக இறப்புகள் பதிவு  செய்யப்படுகிறது.

கேரளா மாநிலம் மட்டுமே அனைத்து இறப்புகளையும் அதற்கான காரணங்களையும் 2020-இல் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில், 2020-ல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2019-இன் ஆண்டை விடக் குறைவு என்பதால் இதனை மரணத்தைக் குறைத்துக் காட்டும் தரவு என்றோ தவறான தரவு என்று எண்ணக் கூடாது. (2018-இல்-மொர்) குறிப்பிட்ட அளவிலான மரணங்கள் தாமதமாகவே பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக, 2018-இல் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் இறந்த ஒரு மாதத்திற்கு பின்பே பதிவு செய்யப்பட்டது. 2 சதவீதம் (4810) இறப்புகள் ஒரு வருடத்திற்கு பின்பு கூட பதிவு செய்யப்படவில்லை. 2020-ல் கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் 3,096. இதனை பதிவு செய்யாத இறப்புகளோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

மும்பை, டெல்லி, வேறு சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இந்த இறப்பு பதிவுகள் முழுமையாக உள்ளதனால் முந்தைய ஆண்டை ஒப்பிட்டு பதிவிட்ட இறப்புகளின் சதவீதத்தை அறிந்து, இந்த நோய்த் தொற்றின் வீரியத்தையும் இதனால் நேராகவோ மறைமுகமாகவோ ஏற்படும் விளைவுகளையும் புரிந்துக் கொள்ள முடியும்.

மக்கள் தொகை பதிவுகள் முழுமையாக இல்லாத வடமாநிலங்களில் “மாதிரி பதிவு அமைப்பு” (Sample registration system) உதவும். இ்ந்த மாதிரி கணக்கெடுப்பு, ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அளிக்கிறது.

இந்த தரவுகள் வெளியிடப்பட்டால் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் மூலம் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை அறிந்துக் கொள்ள முடியும்.


கட்டுரையாளர்கள் : ஆஷிஷ் குப்தா, தன்யா ராஜேந்திரன், ருக்மிணி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மாதவன்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க