தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை, அசுரர்கள் பருகிவிடாமல் தடுக்க மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அதை 12 நாட்கள் கட்டி காத்தாராம். இங்கும் அங்குமாக ஓடியபோது சிந்திய அமுதத்துளிகள் புனித கங்கையின் ஹரித்துவார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக் போன்ற இடங்களில் விழுந்தனவாம்.

எனவே, அந்த இடத்தில் புனித நீராடினால் ஏழெழு பிறவிகளில் செய்த பாவமும் கழுவப்படும் என்ற கட்டுக்கதையை 19 நூற்றாண்டுக்குப் பிறகே இந்துத்துவர்கள் பரப்பி வருகின்றனர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துக்களின் புனித நீராடுதல் நிகழ்வு என சொல்லப்படும் கும்பமேளா குறித்த வரலாறு 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவாக்கப்பட்டிருக்கிறது. கும்பமேளா குறித்த எந்த விவரமும் புராண இதிகாச நூல்களில் இல்லை எனவும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

புனித கங்கையில் அமுதத் துளிகள் கலந்திருப்பதற்கும் அதில் நீராடினால் இந்துக்களின் பாவங்கள் கழுவப்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், புனித கங்கையில் நீராடும் நிகழ்வான கும்பமேளா மூலம் காலரா போன்ற பெருந்தொற்று நோய்கள் பரவி உலக மக்களை பலியாகியிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

1855-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா உருவாக்கிய காலரா, எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பது குறித்து இஸ்தான்புல்லில் 1866-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டில் அறிக்கை சமர்பிக்கப் பட்டிருக்கிறது.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித யாத்திரைத் தளங்களில் காலரா வளர்ந்து பிறகு மெக்கா, எகிப்து, மத்திய தரைக்கடல் துறைமுகங்கள் மூலம் ஐரோப்பிய நகரங்களுக்கு பரவியதாகவும் 1866 அறிக்கை கூறுகிறது.

புனித கங்கை தொற்று நோய்களின் கூடாரமாக மாறியுள்ளதை சமீபத்திய ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன. ஆனாலும் கூட பாவங்களை கழுவச் சொல்லும் மூட கட்டளையை நிறைவேற்ற லட்சக்கணக்கில் மக்கள் அங்கே கூடிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, உலகமே பெருந்தொற்று காலத்தில் பீடித்திருக்கும் போது, கும்பமேளா நடத்துவதும், அதில் பங்கேற்பதும் எத்தகைய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு மோடி கால இந்தியா உதாரணமாகியிருக்கிறது.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், சோதிடர்களின் அறிவுரைப்படி ஓராண்டு முன் கூட்டியே நடத்தியிருக்கிறது உத்திராகண்டை ஆளும் பாஜக அரசு. கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிர பரப்பியாக செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஜனவரி-14 முதல் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை நிகழ்ந்தது கும்பமேளா. கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் கலந்துகொண்ட கும்பமேளாவுக்கு வர மத்திய அரசு சிறப்பு ரயில்களை விட்டது. மாநில அரசு கோவிட் பரிசோதனை எதுவும் தேவையில்லை, வந்து நோய்ப் பரப்பலில் ஈடுபடுங்கள் என சலுகையோடு அழைத்தது.

கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன.  நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன. கார்டினியன் நாளிதழ் தலையங்கள் எழுதியது போல, வட இந்தியா வாழும் நரகமாக மாறிவிட்டது.

கங்கை நதிக்கரையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பீகார் மாநிலத்தில் பாக்ஸரில் கடந்த வாரம் 71 பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அந்தப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் சீதாராம் சவுத்ரி, ‘கங்கையில் அவ்வப்போது பிணங்கள் மிதந்து வருவது இயல்பானதே. ஆனால், இத்தனை பிணங்கள் ஒரே நேரத்தில் மிதந்தது, நரகத்தில் உடைப்பு ஏற்பட்டுவிட்டதுபோல இருந்தது’ என்கிறார். இந்தப் பிணங்கள் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவை என்கிறார் பீகார் அமைச்சர்.

இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கர் அதன் 30 நிருபர்களைக் கொண்டு கள ஆய்வு ஒன்றைச் செய்திருக்கிறது. அதில் உத்தரப் பிரதேசத்தில் கங்கை ஆற்றின் கரையை ஒட்டி சுமார் 1,140 கிலோமீட்டர் பரப்பளவில் 2,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். கோவிட் காரணமாக தினசரி சுமார் 300 பேர் மட்டுமே இறப்பதாக உத்தரப் பிரதேசத்தை ஆளும் சாமியார் அரசு கணக்குக் காட்டி வருகிறது.

டைனிக் பாஸ்கரின் விவரிப்பு கற்பனை கதைகளில் சொல்லப்பட்ட நரகம், கங்கை நதிக்கரையில் சமகாலத்தில் உண்மையாகியிருப்பதைக் கூறுகிறது. உ.பி.யின் கன்னாஜ் நதிக்கரையோரம் 350-க்கும் மேற்பட்ட உடல்களை பாறைத் துண்டுகளை வைத்து, மேலோட்டமாக புதைத்துள்ளனர்; கான்பூரில் உள்ள ஒரு சுடுகாட்டிலிருந்து சிறிது தூரத்தில் 400 பிணங்களை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருக்கின்றன. காசிப்பூர் காங்கை ஆற்றில் 52 பிணங்கள் மிதக்கினறன. பெரும்பாலும் அவை மிதந்து மாநில எல்லையைக் கடக்கக் கூடும்’ என்கிறது கள ஆய்வுக் கட்டுரை.

இறந்தவர்களை எரியூட்ட சுடுகாட்டில் இடம் கிடைக்காததாலும் எரியூட்டும் செலவு ரூ.2 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ஆனது உள்ளிட்ட காரணங்களாலும்  நதிக்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். இப்படி புதைக்கப்பட்ட பிணங்கள் சமீபத்தில் பெய்த மழையால் மேலே வந்து, அவற்றை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலமும் நிகழ்ந்திருக்கிறது.

கும்பமேளாவில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு திரும்பிய 10-ல் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறின. கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மோடியின் முன்மாதிரி ‘வளர்ச்சி’ மாநிலமான குஜராத் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.

குஜராத்தின் திவ்யா பாஸ்கர் நாளிதழ் மார்ச் 1 முதல் மே 10 வரை 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது – இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 65,000 அதிகம் எனக் கூறுகிறது.  மற்றொரு நாளிதழான குஜராத் சமாச்சார், வடோதரா சுடுகாட்டில் தினமும் 200 பிணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறுகிறது.

படிக்க :
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

மோடி ஆட்சிக்கு வந்து இந்து ராஷ்டிரம் அமைந்து விட்டால் பாலாறும் தேனாறும் பாயும் என கற்பனையில் வாக்களித்து அரியணை ஏற்றிய மக்கள், ஆறுகளெல்லாம் பிணங்கள் ஆகிவிட்டதைக் காண்கிறார்கள். பிணங்கள் எரியும் நாற்றமும் காற்றை நிரப்பும் பிணங்களில் அழுகலும் மக்களின் நாசிகளை துளைக்கின்றன. மதமும் மூடத்தனமும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை இந்துத்துவ புனித மயக்கத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் இப்போதும் அறிய வாய்ப்பில்லை. நாம் நினைவுப் படுத்திக் கொண்டே இருப்போம்.

பா.ஜ.க-வின் ஆதரவாளராக இருந்து, தற்போது நாடே சுடுகாடாக மாறியிருப்பதால் மனம் வெதும்பிய குஜராத்தி கவிஞர் பரூல் கக்காரின் இந்த வரிகள் இந்துத்துவ குண்டர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றன…

“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”


அனிதா
செய்தி ஆதாரம் : The Wire, The Print

2 மறுமொழிகள்

  1. இந்தியாவை இழவு நாடாக மாற்றியிருக்கும் மோடியின் யோக்யதையை இதைவிட அழகாக கொண்டு வந்திருக்க முடியாது.உணர்ச்சி பிழம்பாக வெடித்து சிதறிய வார்த்தைகள்…மிக கூர்மையாக பிரச்னையை அலசிய கட்டுரை…. நன்றி தோழரே….

  2. உலகம் முழுவதும் இந்த நிர்வாண சாமியார்கள் படத்தை போட்டு இந்திய நாட்டின் மானத்தை வாங்கிவிட்டார்கள். வெளிநாட்டு மீடியாக்களில் போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டாங்க. அப்பவும் ஒரு சூடு, சொரணை, வெக்கம், மானம் இந்த RSS/BJP காரனுகளுக்கு வராது. அடுத்த வருஷம் மறுபடியும் எங்கையாவது இந்த கும்பமேளாவை நடத்துவானுவ.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க