கொரோனா தாக்குதல் : அவலத்தின் உச்சத்தில் இந்திய மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி மற்றும் அரசியல் கட்சிகள் !

உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவில் தடுப்பூசிகள் மட்டுமல்ல, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர், ஐவெர்விமெக்டின், டாகஸ்சைக்ளின், ஆஸித்ரோமைசின், ஸின்க் அடிப்படையாகக் கொண்ட துணைப்பொருள்கள், பி.பி.இ கிட்ஸ், ஆம்புலன்ஸ்கள், மருத்துவனைப் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், RT-PCR பரிசோதனை சக்தி, சுடுகாடுகள் எல்லாமே பற்றாக்குறையாகவே இருப்பதையும், இதன் காரணமாக மக்களின் கொடுமையான அனுபவங்களையும் சமூக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

தினமும் பல்வேறு தரப்பினரிடம் விவாதம் என்ற பெயரில் பேசி வரும் மோடியோ, நாடு எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பதாக கூறுவதுடன் பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறப்போவதாக இரண்டு கைகளையும் உயர்த்தி கர்ஜிக்கிறார். ஆனால், அதற்கான எந்த திட்டமும் இதுவரை மோடியிடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவின் இத்தகைய அவல நிலைக்கு காரணமே மோடி தான் என்பதை, டைம்ஸ் பத்திரிக்கை உட்பட அயல்நாட்டு பத்திரிக்கைகள் அம்பலபடுத்தி வருகின்றன.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

ஊருக்கே வெளியே இருந்த இடுகாடுகள், பூங்காக்களிலும் மைதானங்களிலும் காலிமனைகள் உட்பட இடம் மாறிவிட்டன. இதுவும் பற்றாக்குறையாக இருப்பதால் எரியூட்டப்படுவதற்குப் பிணங்களை வரிசையாக வழியெங்கும் வைத்திருக்கும் அவலங்களை அனைத்து ஊடகங்களும் காட்டுகின்றன. தகனம் செய்யும் தளங்களில் தொடர்ந்த எரியூட்டுவதன் காரணமாக அதிலிருக்கும் உலோக தளங்கள் உருகி வழிகின்றன.

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் மருத்துவமனைப் படுக்கைகளுக்காகவும் சுற்றி சுற்றி அலைகையில், நமக்கு அன்பானவர்கள் தெருக்களிலும் சுற்றுச் சுவர்களிலும் எரியூட்டப்படும் இடங்களில் வரிசையில் இடம்பிடித்துப் புதைக்க இடம் இல்லாமல் தூக்கிக் கொண்டு அலையும்போது மனித மாண்புகள் மற்றும் கெளரவங்கள் கிழிந்து கிடக்கின்றன.

இந்தப் பிணக்குவியல்கள் மேலே நின்று கொண்டுதான் ஒரு நபர் ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாகப் பேசுகிறார்.

குடும்ப நண்பர்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் யாராவது சொந்தக்காரர்கள் என ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தங்களுடைய உறவினர்களுக்காக, அன்பானவர்களுக்காக, இந்த கொளுத்தும் வெயிலில், உயிர்காக்கும் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக, அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் கண்களில் ஏக்கத்துடன் நிற்கின்றக் கொடுமையான அவலநிலையை தினம் தினம் ஊடகங்களில் பார்க்கிறோம்.

இந்த அவலங்களில் பெரும்பகுதி தலைநகர் டெல்லியில் மோடியின் கண்களுக்கு எதிராக நடந்து வருகிறது. துல்லியமானத் தாக்குதலை நடத்தியதாகப் பெருமைபட்டுக் கொண்ட மோடி அரசு உயிர்காக்கும்  மருந்துகளை எளிதாகக் கிடைக்க செய்ய அல்லது கள்ளச் சந்தைக்கு கைமாறாமல் இருக்க ஏன் துல்லியத் தாக்குதலைக் கையிலெடுக்கவில்லை ? அதற்கு பதில் தினமும்  ‘வாயால் வடை சுடுகிறார்’ பிரதமர் மோடி.

உலகிலேயே தடுப்பூசிகள் உற்பத்தியில் பெரிய அளவில் இருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது?

கொரோனாவின் முதல்அலை எதிர்பாராதது என்றீர்கள். அதனால், தட்டெடுத்து தாளம் போட சொன்னீர்கள் விளக்கேற்ற சொன்னீர்கள். சங்கு ஊத சொன்னீர்கள். எவ்வித முன்னேற்பாடின்றி திடிரென ஊரடங்கு அறிவித்தீர்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் பிழைப்புக் கெட்டுப்போய் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆயிரக்கணக்கான மைல்கள் நடக்க நேர்ந்தது.

நடந்தார்கள் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் எத்தனை எத்தனை அவலங்கள் ! மாநில எல்லையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் ! அநீதிகள் !  வயதானவர்கள் குழந்தைகள் ! வெட்டவெளியில் ஒதுங்கக் கூட நிழல் இல்லாமல் நடந்தக் கொடுமைகள் ! அதனால் ஏற்பட்ட இறப்புகள் ! தற்கொலைகள் ! சாலை விபத்துகள் ! ரயில்வேப் பாதைகளில் ஓய்வு எடுத்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காதவர்கள் ! போலீசின் தாக்குதலால் இறந்தவர்கள் ! பசிப் பட்டினியால் இறந்தவர்கள் ! ஷராமிக் ரயில்களில் இறந்தவர்கள் என ஆயிரக்கணக்கில் அனாதைகளாக இறந்தக் கொடுமை ! இதை விடவும் கொடுமை இந்த புலம்பெயர் தொழிலாளர் பற்றி எவ்வித விவரங்களும் இறப்பு விவரங்கள் புலம்பெயர்ந்த விவரங்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது உட்பட எந்த விவரத்தையும் தங்களது அரசு பராமரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அறிவித்ததுதான்.

ஒரு வைரஸ் பரவலும் அதனால் திடிரென எவ்வித முன்னறிவிப்போ திட்டமோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் இந்திய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பொருளாதார ரீதியில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி தள்ளியது. இந்த அனுபவங்கள் எதுவும் மத்திய அரசையோ மோடியையோ சிறிது கூட சிந்திக்க தூண்டவில்லை என்பது இந்தியாவின் துரதிஸ்டம்.

இரண்டாவது அலை மிக வேகமாக உலக நாடுகளில் பரவிய போது இந்தியாவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வல்லுநர்கள் மருத்துவர்கள் அபாயத்தை பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தனர். உலக நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக் கொண்டு மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த போது, மோடியோ  தேர்தல் திருவிழாவில் நாட்டை மூழ்கடித்து கும்மியடித்துக் கொண்டிருந்தனர். பிணக்குவியல்களின் மேலே நின்றுக் கொணடு ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்று தேர்தல் கமிசனும் மத்திய அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த 365 நாட்களும் எந்த அரசியல் கட்சிகளும் மக்களின் துயர் துடைக்க வீதிக்கு வந்துப் போராடவில்லை. அப்பாவி மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள் என்பது மிகப்பெரிய அவலம் ! சாவின் வாயிலில் மக்கள் நின்று கொண்டு இருந்த போதும் அவர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுகளைப் பறிக்கக் காத்து கிடந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியோ “மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவில் கலந்துக் கொள்ள சொல்லி” ட்வீட் போடுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் உலகமே கண்டிராத வகையில் 4 லட்சம் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி எந்த கவலையும் மத்திய அரசாங்கத்தக்கோ அரசியல் கட்சிகளுக்கோ ஏன் மக்களுக்கோ கூட இல்லாமல்தான் இருக்கிறது. இன்றைய தினம் எக்சிட் போல் பற்றிதான் நாடெங்கும் பேச்சாக இருக்கிறது. இந்த நாட்டில் அரசாங்கம் செய்கிறத் தவறுகளைப் பற்றி எந்த விதமான சீரியஸ் நெஸ் சும் மக்களிடம் இல்லாதப் போது இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றும் வேலையைத்தான் பார்த்து வருவார்கள்.

நாம் எந்தவித கேள்விகளும் கேட்காதபோது தாங்கள் விரும்பும் குரங்காட்டத்தில் தள்ளிவிடத்தனத்தான் பார்ப்பார்கள். இதைத் தாண்டி ஒரு அரசாங்கம் இப்படிப்பட்டதொரு பேரழிவு காலத்தில் மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் தான் சார்ந்திருக்கக் கூடிய கட்சிக்கு முழுநேரமாக வேலை பார்த்த்தை பற்றி எந்தவித கேள்விகளும் கேட்காமல் அனுமதிக்கிறோம். அவர்களுக்காகவே அவர்களுடன் தேர்தல் களத்திலும் குதித்துவிட்டோம்.

நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அதிகாரத்தில் அமர்வது மட்டுமே லட்சியமாகக் கொண்டு பிரதமர் முதல் பரிவாரங்கள் வரை களத்தில் சுற்றி வந்தார்கள். இப்படிபட்டதொரு அபாயகரமானக் காலத்தில் தேர்தல் அவசியமா என எந்த ஒரு அரசியல்வாதியும் கேட்கவில்லை. தேர்தல் நடக்கட்டும் எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம் பிரச்சாரக் கூட்டங்கள் பேரணிகள் வேண்டாம் என ஒரு பொறுப்பான பிரதமர் கூறியிருக்க வேண்டாமா? பீகாரில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசத்தில் 28 இடங்களுக்கான உ.ப தேர்தல் நடந்தது.

இந்த 28 எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்கி காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக. இதுவும் இதே காலக் கட்டத்தில்தான். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி என ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதுவும் மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக எந்தப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது கொரோனா.

பிரச்சாரத்திற்காக மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திலும் ரூபாய் 400 முதல் 500 கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கூட ரூபாய் 25 முதல் 50 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கானக் கோடிகளை வீணாக்கியதற்குப் பதிலாக நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்திருக்கலாம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை பெருக்கி இருக்கலாம். இருக்கும் மருத்துவமனைகளில் வசதிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். உயிர்காக்கும் மருந்துகளை மக்களுக்கு எளிதாகக் கிடைக்க செய்திருக்கலாம். இப்படி எத்தனையோ ‘லாமை’ செய்திருக்கலாம். செய்திருக்க முடியும்.

இந்த கொரோனாக் காலக்கட்டத்தில் பிரதமரின் வேலை இந்த நாட்டு மக்களின் நலனை காப்பதுதான். அவரது அமைச்சரவை சகாக்களின் வேலையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவம் உட்பட அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து சரிசெய்வதுதான்.

வேறு என்ன வேலைகளுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து வரிகள் கட்டி அமர வைத்தனர் ? ஆனால், இவர்களெல்லோரும் கடந்த ஒரு ஆண்டாக என்ன செய்தார்கள் ? தேர்தல் திருவிழாவில் குதித்து விட்டார்கள். இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதன் விளைவைத்தான் ஒவ்வொரு மருத்தவமனையின் வாசலிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பீகார் தேர்தலுக்காக 2020 அக்டோபரிலிருந்து நவம்பர் வரை பிரதமர் மட்டுமே 12 பேரணிகளை நடத்தியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 18 பேரணிகள், அசாமில் ஏழு. தமிழகத்தில் ஏழு தேர்தல் பிரச்சார கூட்டங்கள். கேரளாவில் ஐந்து. புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள். மொத்தமாகக் கிட்டத்தட்ட 50 பேரணிகள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

அதே நாட்களை மக்களைக் காப்பாற்றத் திட்டங்கள் தீட்டி நிறைவேற்ற செலவழித்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். உள்துறை அமைச்சர் முதல் பன்னிரண்டு அமைச்சர்கள் வரை தங்களது முழு நேரத்தையும் தேர்தல் வேலைகளுக்கு மட்டுமே செலவழித்துள்ளார்கள். லட்சக்கணக்கில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் குவிக்கப்பட்டனர். பேரணிகளுக்கும் ஓட்டு வேட்டைக்கும் மக்கள் லட்சக்கணக்கில் அழைத்துவரப்பட்டனர். எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் திரும்ப சென்ற போது நாடு முழுதும் வைரஸ்களும் பயணித்தன.

அது மட்டுமா? கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி பயணித்தபோது உத்திரகாண்ட் கும்பமேளாவில் ஒரே சமயத்தில் முதல் நாள் 35 லட்சம் பேர் நதியில் குளிக்கக் கூடினர். மொத்தமாக கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் அங்கே ஒரே இடத்தில் கூடியிருக்கின்றனர்.  மக்கள் கூட்டமாகக் கூடினால் இந்த நோய் தொற்றின் வேகம் அபாயகரமானது கட்டுபடுத்த முடியாதது என்பது தெரிந்தும் நாகரிகமடைந்த எந்த நாடாவது தனது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இதை அனுமதித்திருக்குமா?

நெறிபடுத்த வேண்டிய சுப்ரீம் கோர்ட் கடந்த 365 நாட்களாக நாட்டில் நடக்கும் செயல்களை கண்டு கொள்ளவில்லை. இப்படி உலகத் தொற்று அபாய காலத்தில் எப்படி தேர்தல்கள், கும்பமேளாக்கள்  என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களைக் கூட்டுவதுப் பற்றியெல்லாம் ஒரு கேள்வியைக்கூட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசாங்கத்தையோ – மாநில அரசாங்கத்தையோ கேட்கவில்லை.

கொரோனோ பரவல் இந்த அளவுக்கு வேகமாக மக்களை தொற்றவும் அதன் விளைவான மரணங்களுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தடுப்பூசிகள் கடந்த 60 நாட்களுக்குள்தான் இந்திய மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதுவும் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதித்தது மத்திய அரசு. அதன் விளைவாக உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 10 கோடி பேருக்கு (அதாவது ஒரு சதவீதம் கூட அல்ல) தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் பரிவாரங்களும் சங்கிகளும்.

இந்திய மக்கள் தொகையில் 70 சதவிதத்தினருக்காவது தடுப்பூசிகள் போடப்பட்டால்தான் கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதற்கான நமது தேவை கிட்டத்தட்ட 145 கோடி டோஸ்கள். இப்போதைய நமது உற்பத்தி அளவு மாதத்திற்கே 6 கோடி டோஸ்கள்தான். எல்லாமே நல்ல படியாகப்போனால் 20 முதல் 24 மாதங்கள் ஆகும். அதுவரை மக்களின் உயிரைப் பாதுகாக்கப்போவது யார்? எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் ! இந்த மலையளவு கடினமானப் பணியை முடிக்க மோடியின் அரசு என்ன தயாரிப்பில் இருக்கிறது?.

விமர்சனம் செய்வோருக்கு இந்தியாவின் எதிரி என்று பட்டம் கட்டி கேவலப்படுத்தவது யோகி போன்றவர்கள் ஆக்சிஜன் இல்லை என்று சொன்னால் தேசப் பாதுகாப்பு சட்டம் பாயும் சொத்துக்களை கைப்பற்றுவோம் என மிரட்டுவது. இப்படித்தான் நடக்கிறது இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான இயக்கம்.

இதைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டிய உள்ளூர் ஊடகங்கள், மெயின்ஸ்டிரீம் ஊடகங்கள் மத்திய அரசாங்கத்துக்கு ஊதுகுழல் வேலை செய்கின்றன. மக்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றன அறிவுரைகள் சொல்கின்றன !

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நாட்டை நேசிக்கும்படி மோடியின் பரிவாரங்களும் அரசியல்வாதிகளும் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இந்த நாடு அவர்களுக்குக் கொடுத்த அன்பின் மற்றும் கண்ணியத்தின் ஒரு பகுதியைக் கூட திருப்பித் தர மறுத்து இழிவுபடுத்துகிறார்கள்.

இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி ஏமாளிகளாக இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் ?

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

இத்தனை அனுபவங்களும் நமக்குப் போதிப்பது ஒன்றைத்தான் நமது பிரச்சனைகளுக்கு நாம்தான் போராடியாக வேண்டும். இன்றைக்கு தெருவில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசைகளில் நிற்கிறோமே இதை விடவாப் போராட்டம் துன்பத்தை தரப்போகிறது ? மாயையைகளை களைந்தெறியுங்கள் !

நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை  பேசக்கூட அனுமதிக்காது ! அப்போதும், வீதிகளில் நடக்கும் நமது போராட்டங்கள்தான் நமக்கு விடிவை கொடுக்கும் !

உழைக்கும் மக்களுக்குப் போராட்டமே வாழ்க்கை ! வாழ்வதே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது ! இருக்கத்தான் போகிறது ! நாம் என்ன செய்ய போகிறோம் ! ?


மணிவேல்
செய்தி ஆதாரம் : Scroll.in, ROOSTER NEWS

 

1 மறுமொழி

  1. மோடி இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீத மக்களைக் காவு கொடுக்க திட்டமிட்டுள்ளாரோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க