கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஒட்டுமொத்த நாட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. முதல் அலையை விட அதிபயங்கரமாக, அதிவேகமாகப் பரவியிருக்கிறது கொரோனா.

கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்திருப்பது தெரிந்தும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரங்களில் பெருங்கூட்டத்தைக் கூட்டிப் புளகாங்கிதமடைந்தார் மோடி. இதை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்த போது “கொரோனா பரவலுக்கு தேர்தல் கூட்டங்கள் காரணம் இல்லை” என தத்துவம் உதிர்த்தார் அமித்ஷா. யார் வீட்டில் இழவு விழுந்தால் நமக்கு என்ன? என்ற நீரோவின் மனநிலையில்தான் மோடியும் அமித்ஷாவும் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று !

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
♦ விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

இப்படி மக்களின் உயிரை வைத்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் விளையாடிக் கொண்டிருக்கையில், இலட்சக் கணக்கானவர்களைக் கும்பமேளாவில் ஒன்றுகூட்டி, கொரோனாவிற்கு மனிதக்கறி விருந்துப் படைத்தது பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் அரசு.

கொரோனா பரவும் வேளையில் இப்படி மதியிழந்த மூடர்கள் ஒன்று கூடுவதைக் கண்டு உலகமே காரி உமிழ்ந்தாலும், துடைத்துப் போட்டுவிட்டு, அடுத்ததாக ‘சார் தாம்’ புனித யாத்திரைக்கு அனுமதி அளித்திருக்கிறது அந்த அரசு.

கொரோனா தொற்றினால் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டிருக்கும் போது, இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல், சுற்றுலா வருவாய் மற்றும் பக்தி மாயையை அதிகரிக்கச் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் மனநிலைதான் “சங்கி” மனநிலை.

அனைத்தும் கைமீறிப்போன நிலையில் வழக்கம் போல இரவு 8.45 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி ’உரையாற்றினார்’ மோடி. ஆற்றிய உரையின் மறைமுகப்பொருள் என்னவெனில், “எங்களால் இனி லாக்டவுன் போட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பாதிக்க முடியாது. நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். துணிவோடு வரவேறுங்கள்” என்பதுதான்.

கும்பமேளாவைக் நடத்தியும், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைக் கூட்டியும் கொரோனாவைப் பரப்பிய பின்னர், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளோர் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும், அதன் மூலம் கொரோனாவைத் தடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது மோடி அரசு.

இதுவரையில் தடுப்பூசிகளை உற்பத்தி நிறுவங்களிடமிருந்து தானே வாங்கி மாநிலங்களுக்குப் பிரித்து அளித்து வந்தது மோடி அரசு. அதிலும் எந்த மாநிலத்திற்கு எதனடிப்படையில் தடுப்பூசிகள் பிரித்து அளிக்கப்படுகின்றன என்பதை மர்மமான ஒன்றாகவே வைத்துள்ளது மோடி அரசு. தற்போது மாநில அரசுகள் தாங்களாகவே நேரடியாகவும் தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எப்படி கொடுக்க முடியும் என்றும், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகையில், மாநில அரசுகளுக்கு எப்படி தடுப்பூசி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பின, மாநில அரசுகள்.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.4500 கோடியை வழங்க இருப்பதாகவும் அதன்மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கப் போவதாகவும் மோடி அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பைக் கண்டு, இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆகியவை பேரானந்தமடைந்துள்ளன.

சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தாம் தமது உற்பத்தியை அதிகரிக்கப் போவதாகவும், தமது உற்பத்தியில் 50% மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50%-ஐ மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும், மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஓராண்டிற்கும் மேலாக, பொருளாதாரம் வீழ்ந்து, மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து, உற்றார் உயிரிழந்து நிற்கும் சூழலில்தான் இந்த விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது சீரம் இன்ஸ்ட்டிட்டியூட்.

இந்தியா முழுவதும் மக்கள், தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஆகியவற்றால் திணறி வருகையில் ஒரு நிறுவனத்தால் சிறிதும் கூச்சமின்றி விலை உயர்வை அறிவிக்க முடியுமா?

முதலாவதாக, மத்திய அரசு தடுப்பூசி குறித்த தனது பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து கைக்கழுவிக் கொண்டது. இரண்டாவதாக, தடுப்பூசி தயாரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாக மக்களைக் கொள்ளையடிக்க வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம் என கொரோனா பெருந்தொற்றிலும் மக்களை ஒட்டச் சுரண்டும் வரையில் இலாபம் பார்க்க தடுப்பூசி நிறுவன முதலாளிகள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை முதலாளியோ ஒருபடி மேலே போய், எரிகிற வீட்டில் இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்ற அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

மோடி அரசின் முட்டாள்தனமான, பொறுப்பற்ற பாசிச நடவடிக்கைகளால், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதி வழங்கினால் தம்மால் நாளொன்றுக்கு 1000 டன் வரையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தர முடியும் எனவும், தமக்கு சிலிண்டர்களை 30 – 40 நாட்களில் தயாரித்துத் தர கோவையைச் சேர்ந்த நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல் !!

♦ கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

அதாவது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் காரணமாக வைத்து மூடப்பட்ட தமது ஆலையை மீண்டும் இயக்குவதற்கும், அதை வைத்தே தொடர்ந்து தாமிர உற்பத்தியை தொடர்வதற்கும் திட்டமிட்டு இப்படி காய் நகர்த்தியிருக்கிறது.

பாசிசக் கும்பலின் அக்கறையின்மையாலும் திமிராலும் அதிகரித்துள்ள கொரோனா பரவலால் முறையான மருத்துவம் கிடைக்கப் பெறாத மக்களின் அவல நிலையைப் பயன்படுத்தி அதே கார்ப்பரேட் கும்பல் மீண்டும் நம்மை சுரண்டத் துடிக்கிறது. இவர்கள் பிணத்தின் மீதிருக்கும் காசைத் திருடுத் தின்னும் கூட்டமல்ல. பிணத்தையே திருடித் தின்னும் கூட்டம் என்பதைத்தான், கொரோனா காலகட்டம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

பிணத்தைக் கூட விடாமல் தின்னும் இந்தக் கார்ப்பரேட் கும்பலை சகித்துக் கொண்டிருப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய மனிதத் தன்மையற்ற செயல்.


சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க