இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் சுயசார்பாக உருவாக்கியதாகக் கூறப்படும் கோவேக்ஸின் தடுப்பூசியையும்; இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்திருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியையும் அவசர காலத்தில் நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து மற்றும் தரநிர்ணயக் கமிட்டி அனுமதி அளித்திருக்கிறது.
இந்த அனுமதியின் முதற்கட்டமாக நாடெங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு இத்தடுப்பூசிகளைப் போடும் நடைமுறையும் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கிவிட்டது.
இத்தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும், அவற்றுக்கு அவசர கதியில் அளிக்கப்பட்ட அனுமதி குறித்தும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும், கேள்விகளும் நிலவிவரும் நிலையில் தொடங்கப்பட்டிருக்கும் தடுப்பூசித் திட்டம் முதல் நாளிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
தமிழகத்தில் ஜனவரி 16, அன்று 16,600 முன்னணிப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய நிலையில், வெறும் 2,783 பேர்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்துள்ளனர். குறிப்பாக, கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுவதற்கு மருத்துவர்கள் பலரே மறுத்திருப்பதாக ஆங்கில இந்து நாளிதழ் (ஜனவரி, 17, பக்.6) குறிப்பிட்டிருக்கிறது.
படிக்க :
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
இத்தடுப்பூசிகளுக்குத் தரப்பட்ட அனுமதியை, இத்தடுப்பூசியைப் போடுவதற்கான திட்டத்தை யார் முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமோ, இத்தடுப்பூசி குறித்த நம்பிக்கையை யார் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமோ, அம்மருத்துவ உலகமே இத்தடுப்பூசித் திட்டத்தை ஆதரிப்பதில் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கு.கணேசன் இத்தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் அவற்றுக்குத் தரப்பட்ட அனுமதி குறித்தும் விமர்சனக் கட்டுரையொன்றை தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து, 07.01.2021). வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ககன்தீப் காங், “கோவேக்ஸின் தடுப்பூசி கொரோனா நுண்கிருமிக்கு எதிராகச் செயலாற்றுகிறது என்பது குறித்த எந்தத் தரவுகளையும் நான் அறிந்திருக்கவில்லை” என்கிறார். “இந்தத் தருணத்தில் நான் யாருக்கும் கோவேக்ஸினைப் பரிந்துரைக்க மாட்டேன்” என்கிறார், அரசு மருத்துவ ஆராய்ச்சித்துறையின் தலைவர். “எந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது?” என்ற கேள்வியை எழுப்புகிறார், அனைத்திந்திய மருந்து செயல்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாலின் ஐசோலா (The Hindu, 04.01.2021, p.13).
“கோவேக்ஸினின் செயல்திறன் குறித்து மேலதிகமான தரவுகளைத் தருமாறு” (The Hindu, 02.01.2021, p.1) இந்தியத் தலைமை மருந்துகள் கட்டுப்பாடு ஆணையகம் கேட்ட இரண்டாவது நாளிலேயே அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுகிறதென்றால், இந்த அவசர அனுமதி குறித்து நிபுணர்களுக்கு மட்டுமல்ல, பாமரனுக்கும்கூடச் சந்தேகம் வரத்தான் செய்யும்.
இக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நியாயமாகவும் நேர்மறையாகவும் பதில் அளிக்க யோக்கியதை அற்ற மோடி அரசு, கேள்வி எழுப்புவர்களைச் சுயசார்பு இந்தியாவிற்கு எதிரானவர்களாக, இந்தியா குறித்துப் பெருமை கொள்ளாத சிறுமதியாளர்களாக அவதூறு செய்து வருகிறது.
கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் அவசரச் சூழலுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ள மோடி அரசு, அந்நிபந்தனைகள் என்னென்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இவ்விரண்டு தடுப்பூசிகளுள் கோவேக்ஸினுக்கு அளிக்கப்பட்ட அனுமதியில், மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் (clinical trial mode), குறிப்பாக, உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி என்ற வகையில் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வாரத்தைகளின் பொருள் என்னவென்றால், இத்தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச் சாலை எலிகளாக இந்திய மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான்.
* * *
புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முன், அத்தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு செயல்திறன் ஆகியவை குறித்து மூன்று கட்டப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அப்பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகள் மருத்துவ அறிவியல் உலகின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டு, அம்முடிவுகளை மருத்துவ அறிவியலாளர்களும் ஒவ்வொரு நாட்டின் மருந்து கட்டுப்பாடு துறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டபூர்வ நடைமுறையும் மருத்துவ அறமுமாகும்.
முதல் இரண்டு கட்டப் பரிசோதனையைவிட மூன்றாவது கட்டப் பரிசோதனைதான் விரிவான அளவில் நடத்தப்படும். முதல் இரண்டு கட்டப் பரிசோதனைகளில் அத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பைத் தூண்டிவிடும் திறன் சோதிக்கப்படும்; மூன்றாவது கட்டப் பரிசோதனையில்தான் அத்தடுப்பூசியின் செயல் திறன் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். இதன் காரணமாகத்தான் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அச்சோதனையில் ஈடுபடுத்தப்படுவது வழமையாக உள்ளது.
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் விடயத்தில் இந்த வழமையான சட்டபூர்வ, அறிவியல்ரீதியான நடைமுறை புறக்கணிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் பல்வேறு மருத்துவ அறிவியலாளர்களும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர்.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான மூன்றாவது கட்ட பரிசோதனை இந்தியாவில் முழுமையாகவும் தனியாகவும் நடத்தப்படவேயில்லை. ஆனால், மைய அரசோ, சீரம் நிறுவனம் அத்தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளைச் சேர்த்து நடத்திவிட்டதாக சால்ஜாப்பு ஒன்றைச் சொல்லிவருகிறது. இந்த சால்ஜாப்பை உண்மையாக எடுத்துக்கொண்டாலும், கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் எதனையும் சீரம் நிறுவனம் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை.
படிக்க :
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !
♦ கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடத்தப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளையும், அதனின் முடிவுகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்பரிசோதனைகள் குறித்தே பல்வேறு விமர்சனங்களை, சந்தேகங்களை மருத்துவ அறிவியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, இம்மூன்று நாடுகளிலும் ஒருபடித்தான முறையில் இச்சோதனைகள் நடத்தப்படாததால், பரிசோதனையில் கிடைத்த முடிவுகளை நம்பகத்தன்மை கொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது மருத்துவ அறிவியலாளர்களின் வாதம். இங்கிலாந்து அரசு கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ள போதிலும், இன்னமும் அமெரிக்க அரசு அத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளைக் கேட்டிருக்கிறது, அமெரிக்க அரசு.
கோவேக்ஸின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், அதனின் செயல்திறனைப் பரிசோதிக்கும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் இன்னும் முடிவடையவேயில்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் கட்டப் பரிசோதனையை நடத்துவதற்குத் தேவையான தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதுகூட இன்னும் முழுமையடையவில்லை. மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் மார்ச் மாதத்தில்தான் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனமே அறிவித்துள்ள நிலையில், அத்தடுப்பூசியைப் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்திருக்கும் மைய அரசு, இத்தடுப்பூசி உருமாறிய கரோனை வைரஸுக்கு எதிராகவும் செயல்படும் என்ற நற்சான்றையும் அளித்திருக்கிறது.
கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல் திறன், அத்தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும் என மைய அரசு கூறியிருப்பது ஆகியவற்றை மட்டும் மருத்துவ அறிவியலாளர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இத்தடுப்பூசியைத் தன்னார்வலர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்வதற்கு அளிக்கப்பட்ட அனுமதி, அப்பரிசோதனைகள் நடத்தப்பட்ட முறை ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.
கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளை, டிசம்பர் 30 (2020) அன்று நடந்த கூட்டத்தில் கேட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை, அதற்கடுத்த இரண்டொரு நாட்களிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கிறது. எனில், அந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகிறார்கள்.
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடனேயே, “ஆங்கில நாட்டுத் தயாரிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுதேசி நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படாதது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக” சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டார். அப்பதிவு வெளியான 24 மணி நேரத்துக்குள்ளாகவே சுதேசி தயாரிப்பான கோவேக்ஸினுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தத் திடீர் அனுமதியின் பின்னே பா.ஜ.க.வின் சுயதம்பட்ட அரசியல் இருப்பதை மறைத்துக்கொண்டு, இது குறித்துக் கேள்வி கேட்பவர்களை அரசியல் செய்வதாக மலினமாகக் குற்றஞ்சுமத்துகிறது, மோடி அரசு.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரோனா வைரஸின் மாதிரியை மே 9, 2020 அன்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அளிக்கிறது. அம்மாதிரி தரப்பட்ட ஐம்பதாவது நாளிலேயே – ஜூன் 29 அன்று அந்நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதியும் அளிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்று, அதனை அழிக்கக்கூடிய தடுப்பூசியை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனை விலங்குகளிடம் செலுத்திப் பரிசோதித்துப் பின்னர் மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குக் குறைந்தது மூன்று மாதம் ஆகும் எனச் சுட்டிக் காட்டும் மருத்துவ அறிவியலாளர்கள், ஐம்பது நாட்களுக்குள்ளாகவே இவையனைத்தும் நடந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் செப்டெம்பர் 2020-ல் வெளியிட்ட அறிக்கையில், கோவேக்ஸின் தடுப்பூசியை மிருகங்களிடம் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வு ஜூன் 6-ஆம் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதேசமயம், ஜூன் 29 அன்று, அதாவது மிருகங்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவதற்கு முன்பாகவே, கோவேக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்க்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்ற பத்தாவது நாளில், அதாவது மே 20, 2020 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃபர்சன் தடுப்பூசி நிறுவனத்தோடு கூட்டுச் சேர்கிறது. அந்த அமெரிக்க நிறுவனம் கொரோனாவை அழிக்கக்கூடிய கரோவேக்ஸ் என்ற தடுப்பூசி மருந்தைத் தயாரித்திருப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. இதனையெல்லாம் இணைத்துப் பார்த்து, பாரத் பயோடெக் நிறுவனம் சுயசார்போடு தயாரித்திருப்பதாகக் கூறிவரும் கோவேக்ஸின் தடுப்பூசியின் ஆதிமூலம் கரோவேக்ஸாக இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் எழுப்பப்பட்டிருக்கிறது (All You Need to Know About Bharat Biotech and Covaxin During the Pandemic, The wire, 03/01/2021).
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் ஆகாஷ் சேதி, காயத்ரி லஹா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து வயர் இணைய தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையொன்றில், “இத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைப் பரிசோதிக்கும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கில்லுகர் மருத்துவமனை, ஜீவன் ரேகா மருத்துவமனை, பிரகார் மருத்துவமனை, ரானா மருத்துவமனை ஆகிய நான்கும் சிறிய மருத்துவமனைகள் என்றும், இம்மருத்துவமனைகள் எந்தவொரு மருத்துவக் கல்லூரியுடனும் இணைக்கப்படவில்லை” என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு நடத்திய கூட்டங்கள் தொலைக்காட்சிகளில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும், அத்தடுப்பூசிகள் தொடர்பாக நிபுணர்களும், பொதுமக்களும் எழுப்பிய கேள்விகளுக்கு நேரலையில் பதில்களும் அளிக்கப்பட்டன.
ஆனால், இந்தியாவிலோ கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளின் முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கிடைக்கப்பெற்ற தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இத்தடுப்பூசிகள் குறித்து நடத்தப்பட்ட மருந்துக் கட்டுப்பாட்டுக் கமிட்டிக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகள் முழுமையாக யாருக்கும் தரப்படவில்லை. இத்தடுப்பூசிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி குறித்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலும் அளிக்கப்படவில்லை.
மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டாவது வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகும்கூட அவருக்குச் செலுத்தப்பட்டது தடுப்பூசியா அல்லது பொய் மருந்தா (placebo) என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
படிக்க :
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
இத்தடுப்பூசியின் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் பங்கேற்ற போபால் நகரை சேர்ந்த தன்னார்வலர் தீபக் மராவி (வயது 42) பலியானதை மறைக்க முயன்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தடுப்பூசிப் போடும் திட்டத்தின் இரண்டாவது நாளிலேயே இத்தடுப்பூசிகளால் 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களுள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், தடுப்பூசிப் போட்டுக் கொண்ட உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் இறந்து போனதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அனுமதியின் பின்னுள்ள வெளிப்படையற்ற தன்மை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து எழுப்பப்படும் கேள்விகள், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் – இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இத்தடுப்பூசிகளுக்கு அவசர கதியில் அனுமதி அளித்திருப்பதன் உள்நோக்கத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். தனது அரசின் பலமுனைத் தோல்விகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்புக் கேடயமாக இத்தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள மோடியும் அவரது பரிவாரங்களும் முயலுகின்றன என்பதுதான் இந்த அவசர அனுமதியின் பின்னுள்ள உண்மை.
தமிழகத்தில் செங்கல்பட்டுக்கு அருகே தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்காக ஒரு தொழிற்பூங்காவையே அமைத்திருக்கும் மைய அரசு, கொரோனா தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு அம்மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் மாதிரியை அளித்திருக்கிறது.
எந்த நிறுவனம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கிறதோ, அந்த நிறுவனம்தான் தனது சொந்த செலவில் அத்தடுப்பூசியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கும் அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவ ஆய்வுலகில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆயின், மோடி அரசோ, இத்தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி அளித்திருப்பதன் மூலம், அவ்விரு கார்ப்பரேட் நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கு மக்களின் வரிப்பணத்தை மொய்யாக எழுதியிருக்கிறது. மேலும், இந்திய மக்களைச் சோதனைச் சாலை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்திருக்கிறது.
இதனைத்தான் மோடி அரசு சுயசார்பு என்கிறது. நாம் அதனை கார்ப்பரேட் சார்பு எனக் குற்றஞ்சுமத்துகிறோம்.
அறிவு