பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறிய கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை, ஓர் மோசடி என்று தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மிகப்பெரிய தடுப்பூசி திருவிழா நடத்தப் போவதாகவும், அன்று அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகவும் விளம்பரப்படுத்தியது ஒன்றிய அரசு. செப்டம்பர் 17-ம் தேதியன்று 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதாகவும், ஒரே நாளில் அதிக தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துவிட்டது என்றும் மோடி அரசு விதவிதமான வடைகளை பொரித்து தள்ளியது. ஆனால், அந்த எண்ணிக்கை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தி கேரவன் பத்திரிகை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்திய அளவில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளின் சராசரியை விட குறைவாகவும், ஒரு நாளில் மட்டும் உச்சத்தை அடைந்து மீண்டும் பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் “தி கேரவன்” செய்தி அறிக்கை புள்ளிவிவரங்களை அடுக்கிவைக்கிறது. அதாவது, செப்டம்பர் 16 அன்று நாடு தழுவிய அளவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை சுமார் 70 லட்சமாக இருந்தது.
செப்டம்பர் 17 மோடியின் பிறந்த நாளன்று செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 2.5 கோடி எனும் அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையை திடிரென்று அடைந்துள்ளது. செப்டம்பர் 18-ம் தேதியன்று 85 லட்சம் என்ற மிகவும் குறைந்த எண்ணிக்கையை அடைந்துள்ளது; செப்டம்பர் 19-ம் தேதியன்று அதைவிட மிகவும் குறைந்த எண்ணிக்கையான 68 லட்சத்தை அடைந்துள்ளது.
படிக்க :
மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்
ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?
இப்படி தடுப்பூசி செலுத்தியதன் எண்ணிக்கையில் மாற்றங்கள் நிகழ்வதற்கு சில பித்தலாட்டங்களை மோடி அரசு செய்துள்ளது. அதில் சிலரது கருத்துக்களையும் பதிவு செய்கிறது தி கேரவன் பத்திரிக்கை.
000
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் வசிக்கும் பிரனய் நர்வேர், “என் அம்மாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடந்த செப்டம்பர் 15-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அதேநாளில் சான்று வழங்க தடுப்பூசி மையம் மறுத்துவிட்டது” என்றும், “அடுத்தநாள் என் அம்மா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மகாபியனுக்காக (மாபெரும் இயக்கம்) அவரது பெயர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்” என்றும் கூறியுள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதியன்று வரை காத்திருந்து, நார்வேரின் தாயார் வாங்கிய சான்றிதழில், அயர்யா நகர் என்பதற்கு பதிலாக கோவிந்த்புரா என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதியைச் சேர்ந்த அர்ஷத் அலிக்கு, செப்டம்பர் 17-ம் தேதியன்று காலை 8.30 மணியளவில் தங்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியில் அப்போதே தடுப்பூசி மையத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவரது அழைப்பு ஒவ்வொரு முறையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கூறிகையில் “நான் ஒரு படித்த நபர்; நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நான் அறிந்து கொள்ள முடியும்; ஆனால், இவை அனைத்தும் புரிந்து கொள்ள முடியாத, படிப்பறிவற்ற மக்களின் நிலை பற்றி யோசித்தால் மிகவும் கவலையாக உள்ளது” என்றார் அர்ஷத்.
குஜராத் மாநிலம், ஜுனகார்ட் மாவட்டத்தில் துஷார் வைஷ்ணவ் வசிக்கிறார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக செய்தி வந்துள்ளது. ஆரம்பத்தில் இது ஒரு தவறான செய்தியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார் வைஷ்ணவ். ஆனால், சான்றிதழ் தரவிறக்கம் செய்து பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர்கள் இருவரின் பெயர்களும் சான்றிதழில் உள்ளது. அந்த சான்றிதழ் வைஷ்ணவின் வீட்டிலிருந்து 25 கி.மீட்டர் தொலையில் இருந்த தடுப்பூசி மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தநாள் செப்டம்பர் 18-ம் தேதியன்று தடுப்பூசி மையத்திற்கு சென்றிருக்கிறார் வைஷ்ணவ். ஆனால், அங்கு ஒரு செவிலியர் மட்டுமே இருந்திருக்கிறார். வந்தவர் எதற்கான வந்தார் என்று கூட கேட்காமல் எனக்கு இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்னாள் உதவ முடியாது என்றும், நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
000
இதுபோன்று, பல்வேறு பித்தலாட்ட செய்திகளை கேட்டறிந்த தி கேரவன் இணைய பத்திரிகை, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்ட கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளின் மூலம், மோடி தன் பிறந்தநாள் விளம்பரத்திற்காக நாட்டு மக்களின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட உண்மையிலேயே அதிகத் தடுப்பூசி போடாமல் பித்தலாட்டம் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதாவது, செப்டம்பர் 17-ம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னும், இரண்டு நாட்களுக்கு பின்னும் நாடுதழுவிய அளவில் தடுப்பூசிகள் செலுத்தியதன் எண்ணிக்கைகளையும், தடுப்பூசி போடாதவர்களுக்கெல்லாம்  போட்டதாகக் கணக்குக் காட்டியும் தான் அந்த 2.5 கோடி தடுப்பூசி எண்ணிக்கையை ஊதிப் பெருக்கியுள்ளார் என்பது தெரிகிறது.
சுயமோகம், பொய், புரட்டு, பித்தலாட்டம் – இவைதான் மோடியின் கடந்த கால செயல்பாடுகளாக இருந்தன. இப்போதும் அது தொடர்கிறது. ஆனால், இம்முறை மற்றவற்றைப் போல அல்லாமல் மக்களின் உயிரோடு விளையாடுவதில் அரங்கேற்றியிருக்கிறார் மோடி.
சந்துரு
செய்தி ஆதாரம் : Caravan magazine

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க