ந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் பிணவறைகள் நிரம்பிக் கொண்டிருந்தபோது, தடுப்பூசி போடுவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு தொலைக்காட்சியில் தோன்றி நீலிக்கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில், தடுப்பூசி போடுவதை மாநிலங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஒரே நாளில் அதிகபட்சமாக தடுப்பூசி போட்டு புதிய ‘உலக சாதனை’ படைத்ததாக தனக்குத்தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டது மோடி அரசு.

கடந்த திங்களன்று (21.06.2021) மட்டும் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக பா.ஜ.க. அரசு கூறிக்கொள்ளும் ‘உலக சாதனை’யின் உண்மைத்தன்மை என்ன என்பதை ஸ்கரால் இணையதளம் தரவுகளுடன் தோலுரித்துள்ளது.

படிக்க :
♦ தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !
♦ கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மத்தியப் பிரதேச மாநிலம் போட்டது. திங்களன்று 16.9 லட்சம் தடுப்பூசிகள் மத்திய பிரதேசத்தில் போட்டப்பட்டன. ஆனால், அதற்கு முந்தைய நாள், வெறும் 692 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே அங்கு போடப்பட்டதாக மத்திய அரசின் தடுப்பூசி தளமான கோவின் கூறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 17 முதலே தடுப்பூசி போடுவதில் மந்தநிலை தொடங்கியுள்ளது. ஜூன் 16 அன்று 338,847 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டாலும், அடுத்த நான்கு நாட்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதைக் காட்டிகிறது புள்ளி விவரம். ஜூன் 17 அன்று 124,226 டோஸ், ஜூன் 18 அன்று 14,862 டோஸ், ஜூன் 19 அன்று 22,006 டோஸ், மற்றும் ஜூன் 20 அன்று 692 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முந்தைய நான்கு நாட்களுக்கான தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டு கணக்குக் காட்டுவதற்கென்றே, ஜூன் 21-ஆம் நாளன்று அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது விமர்சனம் செய்யப்பட்ட பின்னர், தினசரி 17 லட்சம் தடுப்பூசிகளை போட வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச அரசு தள்ளப்பட்டுள்ளது.

இப்படி அதிகப்படியான தடுப்பூசி போடப்படுவதற்கு முக்கியக் காரணம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை 18-44 வயதினருக்கும் போடலாம் என மத்திய அரசின் அறிவித்ததுதான்.

ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதுதான் உலகத்திலேயே அதிகளவு சாதனை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்தார். ஆனால், ஜூன் 9-ம் தேதி அன்று நேச்சர் இதழ், சீனாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக நாளொன்றுக்கு இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்தச் செய்தியே மோடி அரசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.

இதே போன்ற உத்திகளைத்தான் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் கையாளப்பட்டிருக்கிறது. முந்தைய நாளான ஜூன் 20-ம் தேதி தடுப்பூசி மிகக் குறைவாகவே போடப்பட்டிருக்கிறது.

அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக உள்ள கர்நாடகத்தில், ஜூன் 21-அன்று 11.21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ஜூன் 20 அன்று 68, 172 தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன. இதைக்காட்டிலும் இதற்கு முந்தைய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூன் 6-ஆம் நாள் 1,26,386 பேருக்கும் ஜூன் 13-ஆம் நாள் 96,956 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.

குஜராத் மாநிலத்தில் திங்களன்று 5,10,434 தடுப்பூசி போட்டப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 1,89,953 தடுப்பூசிகளே போட்டப்பட்டன. இது 17 நாட்களில் மிகக் குறைந்த அளவாக உள்ளதாக புள்ளி விவரம் காட்டுகிறது.

தொடர்ந்து நான்கு நாட்கள் அசாமில் தடுப்பூசி வரைபடம் உயர்வில் இருந்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 20 அன்று 33,654 தடுப்பூசிகளே போடப்பட்டு கூர்மையான வீழ்ச்சியைப் பதிவு செய்தது. திங்களன்று 360,707 என்ற அதிகபட்ச சாதனையை எட்டியதாக பா.ஜ.க. அரசுகள் வெற்றிக் கூச்சலிட்டன.

பா.ஜ.க. ஆட்சிபுரியாத பல பெரிய மாநிலங்களும் ஜூன் 20 அன்று தடுப்பூசி அளவைக் குறைத்தன. ஆனால், இது ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் வழக்கமான வீழ்ச்சிக்கு ஏற்ப இருந்தது. அதுபோல, ஜூன் 21 அன்று தடுப்பூசி அளவு முந்தைய நாட்களை விட மிக அதிகமாகவும் இல்லை.

உதாரணமாக, மகாராஷ்டிரா ஜூன் 21 அன்று 3,83,495 தடுப்பூசி மருந்துகளை வழங்கியது, ஜூன் 19 அன்று வழங்கப்பட்ட 3,81,765 அளவுகளை விட இது மிக அதிகமானது இல்லை. ஜூன் 20 அன்று 1,13,109 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், முந்தைய ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட 87,273 என்ற அளவுகளை விட அதிகமாக இருந்தது .

ராஜஸ்தானிலும் இதே நிலைதான், ஜூன் 11 அன்று செய்ததைப் போலவே, ஜூன் 21 அன்று 4.46 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மையம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. இருப்பினும், கோவிட்-19இன் கடுமையான இரண்டாவது அலையின்போது போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டின.

எனவே ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு கொள்முதல் கொள்கையை மாற்றியது. மேற்கு வங்கத்தைத் தவிர்த்து, 18-44 வயதுடையவர்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மாநிலங்களை அனுமதித்தது. இதற்கிடையில், மத்திய அரசு 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கியது.

உச்சநீதிமன்றம், இளைய வயதினருக்காக தடுப்பூசி போடும் முடிவைக் கைவிட்டு, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசின் கொள்கையை விமர்சித்துள்ளது.

“உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசு 18 – 44 வயதுடையவர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது? எனவும் கேள்வி எழுப்பியது. இது தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது” எனவும் விமர்சித்திருந்தது.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

ஜூன் 7-ம் தேதி, மத்திய அரசு தனது கொள்கையை பகுதியளவு மாற்றியமைத்தது; மாநிலங்களுக்கான தடுப்பூசிகளை வாங்குவதற்கான பொறுப்பை திரும்பப் பெற்றது. தடுப்பூசிகள் இப்போது அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அறிவித்தது. இருப்பினும், தனியார் நிறுவனங்களுக்கு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக சேவை கட்டணமாக ஒரு டோஸுக்கு ரூ.150-ஐ மட்டுமே செலுத்தி தடுப்பூசிகளை வாங்க அனுமதித்தது.

இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியில், ஒரே நாளில் உலகின் உச்சபட்ச அளவாக தடுப்பூசி போடப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பா.ஜ.க.-வினர் கூறி வருகின்றனர். பா.ஜ.க அரசின் இந்தப் பொய்யை எந்தவித ஆய்வும் இன்றி வெகுமக்கள் ஊடகங்களும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.


கலைமதி
செய்தி ஆதாரம் : Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க