தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டவர்களிலும் ஒரு சில மரணங்களைக் கேள்விப் படுகிறோம். இது மனதில் விரக்தியை ஏற்படுத்துகின்றதே என்று பல நண்பர்கள் கூறுகிறார்கள்.

இதற்கான எனது விடை

முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போதைய கோவிட் தடுப்பூசிகள் வைத்து செய்யப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வுகளில், தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்ட மக்களிடையே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சைப் பெறும் எண்ணிக்கையையும் கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களும் ஏற்படவில்லை.

படிக்க :
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
♦ கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஆயினும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது தடுப்பூசிகள் போடப்பட்ட மக்களுள் அறிகுறிகளற்றக் கொரோனா ஏற்படலாம். சாதாரண (mild) தொற்று ஏற்படலாம் மிக மிகக் குறைவான மக்களுக்கு மிதமான சிகிச்சை தேவைப்படும் தொற்று நோய் ஏற்படலாம் அரிதினும் அரிதாக மரணங்களும் நேரலாம்.

ஆயினும் தடுப்பூசிப் போடப்படாத மக்களுள் ஏற்படும் கொரோனா மரணங்களை விட மிக மிகக் குறைவான அளவிலேயே தடுப்பூசிப் பெற்றவர்களிடையே மரணங்கள் நிகழ்கின்றன. நான் கொரோனா முன்கள மருத்துவராக கடந்த ஒரு வாரம் பணிபுரிந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 100 நோயாளிகளின் வரலாறுகளை நேரடியாகப் படித்திருக்கிறேன்.

அதிலிருந்து நான் கற்றவை. தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றிருந்தால் கூட அவருக்கு நோய் சாதாரண நிலையில் இருந்து மிதமான நிலைக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மிதமான மற்றும் தீவிர நோய் தன்மைக்குள்ளானவர்கள் யாரும் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. இது என்னளவில் நான் கண்டவை.

இன்னும் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரியும் எனது நண்பர்களின் கூற்று யாதெனில், அரிதினும் அரிதாகவே தடுப்பூசிப் பெற்றவர்கள் ஐ.சி.யூ நிலையை அடைகிறார்கள் என்பதே.

நடப்பது போர்ச்சூழல் இதில் ராணுவ வீரர்கள் தங்களை காத்துக் கொள்ளக் குண்டு துளைக்காத கவச உடை வழங்கப் படுகின்றது. ஆனால், அந்த உடை இருப்பதாலேயே அவர் மரணமடைய மாட்டார் என்று கூற முடியாது.

ஆயினும், அவர் மரணமடையும் வாய்ப்பை அந்த உடை வெகுவாகக் குறைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் அந்த கவச உடையுடன் கூடவே கையில் எதிரியை வீழ்த்த துப்பாக்கி எப்போதும் எதிரி கண்ணில் சிக்காமல் இருக்கும் யுக்தி போன்றவற்றை கடைபிடித்தால் தான் பிழைப்பார்.

அதுபோலவே, தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும்; கூடவே, சாலை விதிகளை மதித்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடப்பக்க ஓரத்தில் வண்டியை செலுத்த வேண்டும். அதிலும் செல்போன் பேசாமல் ஓட்ட வேண்டும். வேகம் குறைவாக ஓட்ட வேண்டும். இத்தனையும் கூட்டாக செய்யும் போது அவர் விபத்துக்குள்ளாகாமல் பயணிக்கலாம். அதேபோன்றுதான் கொரோனா நோய்க்கு எதிராக நமது யுக்திகள் செயல்படுகின்றன.

எனவே, இந்த யுக்திகளால் போர்க்களத்தில் காக்கப்படும் உயிர்கள் தான் நமக்கு முக்கியம் இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். ஆனால், எந்தப் பக்கம் இழப்புகள் ஜாஸ்தி என்பதை கணக்கிட்டால் தடுப்பூசிப் போடப்படாத மக்கள் தொகையில் மிக அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. நீங்கள் நோய்த் தொற்றிலிருந்து  காத்துக் கொள்ள விரும்பினால் உங்களுக்கான  தடுப்பூசியை உடனே பெறுங்கள். இன்னபிற கொரோனா தடுப்பு நடவடிக்கைளையும் சேர்த்து கடைபிடியுங்கள்.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.disclaimer

1 மறுமொழி

  1. தடுப்பூசி ஆ‌ய்வு கள் முழுமை பெறவில்லை. வளரும் நாடுகளில் மக்களை சோதனை கூட எலிகளைப் போல use பண்றாங்க என்ற கூற்றுக்கு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க