கொரோனா இரண்டாவது அலையின்போது நாடு முழுவதும் நடந்த மரணங்கள் பொது சுகாதார அமைப்பு ஒழிக்கப்பட்டு வருவதையும் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதையும் உணர்த்துகின்றன.

மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால் ஆம்புலன்சிலேயே சிகிச்சையளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள், நோயாளிகளுக்கு ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நெடும் வரிசையில் நின்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குகூட பல மணி நேரங்கள் காத்திருந்த கொடுமை, கங்கை நதி ஓரம் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான பிணங்கள் என கொரோனா இரண்டாம் அலையின் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் நமது பொது சுகாதாரக் கட்டமைப்பின் திவால் நிலையை அனைவருக்கும் உணர்த்திச் சென்றது.

கொரோனா இரண்டாம் அலை குறித்து பல மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்த பின்னரும் சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்தாமல், லட்சக்கணக்கான மக்களை வேண்டுமென்றே படுகொலை செய்தது மோடி அரசு. உள்நாட்டு − பன்னாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியின் செயலின்மையை விமர்சித்துக் கடுமையாக எழுதின.

படிக்க :
♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

இத்தனைக்கும் பிறகும், இதனை முட்டுக்கொடுக்கும் வகையில் ஜி−7 நாடுகளின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘கடந்த 75 ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கட்டமைப்புக்குப் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை’’ என பொதுவாக பூசி மெழுகுகிறார். அதேபோல ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி மோடி ஆற்றிய உரையில் ‘‘கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை’’ என்று பேசுகிறார்.

பிரச்சனை தீவிரமான பிறகு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அரைகுறையாக உண்மையை ஒப்புக் கொள்வதும், அனைத்துக்கும் கடந்தகால காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்று சாடுவதும் காவி பாசிஸ்டுகளுக்கே உரிய அரசியல் சாணக்கியத்தனம்.

நிலைமை இப்படி இருக்கையில், ‘‘சுகாதார உள்கட்டமைப்புக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதல் அலையின்போது இதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.2 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் மோடி.

அதையே கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவிகிதம் அதிக நிதியை (ரூ.2.23 லட்சம் கோடி) மருத்துவத் துறைக்கு ஒதுக்கியிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் 2021−22 பட்ஜெட் உரையில் சொல்கிறார்.

இப்படிச் சொல்வது அப்பட்டமானதொரு புள்ளிவிவரப் புளுகு. ஏனெனில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியதாக சொல்லப்பட்ட ரூ.2.23 இலட்சம் கோடியில் குடிநீர் மற்றும் வடிகால் துறைக்கான ரூ.60 ஆயிரம் கோடி, குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்காக நிதி ஆணையம் ஒதுக்கிய சுமார் ரூ.50 ஆயிரம் கோடி, தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி ஆகியவற்றையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் ரூ.80 ஆயிரம் கோடிக்கும் குறைவே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிலும் சுகாதாரத் துறைக்கென்றே நேரடியாக ஒதுக்கப்பட்ட ரூ.73,932 கோடி மட்டுமே. இத்தோடு கூட பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

இதேபோல, டிசம்பர் 2022−க்குள் 1.5 இலட்சம் சுகாதார மையங்களை நாடு முழுக்க அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் 17,788 கிராமப்புற மற்றும் 11,024 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவும் புதிய நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்காகவும் ‘‘பிரதமர் ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரான அஷ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் அறிவித்தார்.

இவை அனைத்துக்கும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்துதான் நிதி ஒதுக்கப்படும். அதாவது, யானைப் பசிக்கு சோளப்பொரி போடும் கதைதான்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளெல்லாம் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத்திற்கு மேலாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி வருகின்றன. ஏன், இலங்கை, ஜாம்பியா, கென்யா உள்ளிட்ட ஏழை நாடுகள் கூட இந்தியாவைக் காட்டிலும் அதிகத் தொகையை சுகாதாரக் கட்டமைப்புக்கு ஒதுக்கி வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ பல பத்தாண்டுகளாக ஒரு சதவிகித்திற்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தான் ஜி−7 கூட்டத்தில் மோடி ‘‘கடந்த 75 ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கு போதுமான அளவு முதலீடு செய்யவில்லை’’ என்று ஒப்புக்கொண்டார்.

இப்படி பல ஆண்டுகளாக சொற்பமான தொகைகளை ஒதுக்கி, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவுதான், லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாக நேர்ந்த கொடூரம்.

‘‘தேவை ஒரு அவசர சிகிச்சை’’ என்ற தலைப்பில் இந்திய மருத்துவக் கட்டமைப்பின் நிலைகுறித்து தலையங்கம் எழுதிய தினமணி, ‘‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், 2020 ஏப்ரல் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய மருத்துவமனைகளில் 19 லட்சம் படுக்கைகள் உள்ளன. அதில் 12 லட்சம் தனியார் மருத்துவமனையில் காணப்படுகின்றன. 10 ஆயிரம் பேருக்கு 16 மருத்துவமனைப் படுக்கைகள் என்கிற அளவில்தான் இந்தியா இருக்கிறது. சிறிய அண்டை நாடான இலங்கையில் கூட 10 ஆயிரம் பேருக்கு 42 மருத்துவமனைப் படுக்கைகள் காணப்படுகின்றன.’’

‘‘அதேபோல, இந்தியாவிலுள்ள அவசர சிகிச்சை படுக்கைகள் வெறும் 95 ஆயிரம் மட்டுமே. அதில் 59 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. வென்டிலேட்டர்களை எடுத்துக்கொண்டால், 47 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 29 ஆயிரம் தனியார் மருத்துவனைகளில்தான் காணப்படுகின்றன. முறையான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல்போனதன் விளைவுதான் இது.

வீட்டில் இருக்கும் நகை – நட்டுகளையும், வங்கியில் இருக்கும் சேமிப்புகளையும் அசையாச் சொத்துகளையும் விற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கிராமங்கள் வரை மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பதை கொள்ளை நோய்த்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இப்படி தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தும் மோடியின் ஆதரவு ஊடகங்களே, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை அரசு பலப்படுத்த வேண்டிய தேவையை எழுதுமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நாடு முழுவதும் 718 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், 280 அரசு மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மாவட்ட மருத்துவமனைகள் வரை 37,725 மருத்துவ நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. 135 கோடி மக்கள் தொகைக்கு சேவை செய்வதற்கு இவை போதுமா?

நவம்பர் 2020 கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 43,486 தனியார் மருத்துமனைகளில் 12 இலட்சம் படுக்கைகளும் 59,264 ஐ.சி.யூ படுக்கைகளும் 29,631 வெண்டிலேட்டர்களும் இருந்தன. ஜனவரி 28, 2021 நிலவரப்படி அரசு மருத்துவமனைகளிலோ 1,57,344 ஆக்சிஜன் இணைப்புள்ள படுக்கைகளும் 36,008 ஐ.சி.யூ படுக்கைகளும் 23,619 வெண்டிலேட்டர்களும் மட்டுமே இருந்தன. ஏப்ரல் மாதத்தில்தான் அவை முறையே 62,458, 27,360, 13,158−ஆக அதிகரிக்கப்பட்டது. இதுவும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் செய்யப்பட்டது.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

மேற்கண்டவை கூட எவ்வளவு உண்மை எனத் தெரியாது. ஏனெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஆவணத்தில் சொல்லப்பட்டதில் பாதியளவு ஐ.சி.யூ படுக்கைகளே உண்மையில் இருந்தன. மோடி அரசு ரூ.2,000 கோடி செலவில் மாநிலங்களுக்கு அனுப்பிய பல்லாயிரம் வெண்டிலேட்டர்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத ஓட்டை உடைசல்களாக இருந்தன.

இந்த நிலைமைகளில், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம் என்று மோடி அரசு சொல்வதில் எள்ளவும் உண்மை இல்லை. அப்படியானால், தற்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை அரசால் மேம்படுத்த முடியாதா எனக் கேள்வி எழலாம். நிச்சயமாக முடியும்.

இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்படுபவை எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான். இதற்காக ஒவ்வொரு மருத்துவ மனைகளுக்கும் ரூ.1,250 முதல் ரூ.2 ஆயிரம் கோடிகள் வரை செலவாகிறது. தற்போது வரை 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஆண்டொன்றுக்கு 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் துவங்குவதைத் திட்டமாக வைத்தால், மாநிலத்துக்கு இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஐந்தாண்டுகளில் உருவாக்க முடியும். இதற்கு ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் கோடிகள்தான் செலவாகும்.

மாவட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கான கட்டமைப்பு செலவு, தமிழக அரசின் மதிப்பீட்டின்படி, ரூ.381 கோடி. ஆண்டுக்கு 100 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட நிதி ஒதுக்கினால் ஆகும் செலவு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி. இதன் மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத சுமார் 470 மாவட்டங்களின் குறையை அடுத்த ஐந்தே ஆண்டுகளில் தீர்த்து விட முடியும்.

இவ்வாறு உருவாக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் மருத்துவக் கல்வியிடங்களை புதிதாக உருவாக்க முடியும். இந்தக் கல்லூரிகளின் மூலம் கூடுதலாக பல இலட்சம் செவிலியர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் உருவாக்க முடியும்.

அடுத்ததாக, மக்கள்தொகை கணக்கீட்டின்படி குறைந்தபட்சமாக 45 ஆயிரம் மற்றும் அதிகபட்சமாக 67,500 ஆரம்ப சுகாதார நிலையங்களும், குறைந்தபட்சமாக 2.75 இலட்சம் துணை சுகாதார நிலையங்கள் நாடு முழுவதும் இருந்தால்தான் நமது தேவைகளில் ஓரளவுக்கேனும் மருத்துவச் சேவைகளை வழங்க முடியும். ஆனால், தற்போது அவை முறையே 30 ஆயிரம் மற்றும் 1.60 இலட்சமாகவே இருக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடிகளை ஒதுக்கினால் கூட ஐந்தாண்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் நிறைவெய்த முடியும்.

மேலும், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், உற்பத்தி மையங்கள் ஆகியவற்றை மாநிலந்தோறும் உருவாக்கி பராமரிக்க ரூ.25 ஆயிரம் கோடி என ஒதுக்கினால் ஐந்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.

தொகுப்பாக, ஆண்டுக்கு ரூ.1.25 இலட்சம் கோடி இதற்காக ஒதுக்கி வேலை செய்தால் கூட அடுத்த ஐந்தாண்டுகளில் பரந்துவிரிந்த, ஓரளவு பலமான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கிட முடியும். நாம் கூறுவது ஒன்றும் பெரியதொகை இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சமாக ஒரு சதவிகிதம் மட்டுமே, அதாவது இதுவரை மன்மோகன் தொடங்கி மோடி அரசு உள்ளிட்டவை சுகாதாரத் தொகைக்கு ஒதுக்கிய அதே சதவிகிதத் தொகையே. அப்படியானால் இதுநாள் அவற்றை ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்போது இருக்கும் மோடி அரசோ எந்த பிரச்சனையாக இருந்தாலும் காங்கிரசை மட்டுமே கைகாட்டி விடுகிறது. உண்மையில் காவி−கார்ப்பரேட் பாசிச மோடி அரசு தனது ஆட்சியில் பொதுச் சுகாதாரத்தைக் கை கழுவி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசு கஜானாவின் கதவுகளை அகலத் திறந்து விட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா கொள்ளை நோயால் உழைக்கும் மக்கள் பெரும் துயருற்றிருந்த காலத்தில்தான் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுக்கைகளை அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் இப்படி வரிச் சலுகை என்ற பெயரில் மட்டும் அரசுக்கு ஏற்படும் இழப்புத் தொகை சுமார் ரூ.1.45 இலட்சம் கோடி.

இவையன்றி, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக வாராக்கடன் என்ற பெயரில் கடந்த எட்டாண்டுகளில் ஒட்டுமொத்தமாக பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை சுமார் ரூ.6.33 இலட்சம் கோடி. இதில் ‘‘ஹேர் கட்’’ என்ற ஏலத் திட்டத்தின் மூலம் வசூலானது ரூ.1.8 இலட்சம் கோடி. மீதம் மொட்டையடிக்கப்பட்டது சுமார் ரூ.5.25 இலட்சம் கோடி.

இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை காட்டி வாரி வழங்குவதும், பொதுச் சுகாதரக் கட்டமைப்பை கண்டுகொள்ளாமல் விடுவதையும்தான் தனது ஆட்சிக் காலத்தில் மோடி அரசு செய்துள்ளது.

இவை ஒருபுறம் இருக்க, பொதுச் சுகாரத்தின் பெயரிலேயே கார்ப்பரேட்டுகளுக்கு அரசே அள்ளிக் கொடுப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனையில் ‘இலவசமாக’ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தனியாருக்கு பல நூறு கோடி வாரி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆந்திர அரசு கடந்த மே மாதம் வரை சுமார் ரூ.309 கோடிகளையும், தமிழக அரசு 2021−2022-ம் ஆண்டுக்காக சுமார் ஆயிரம் கோடிகளையும் ஒத்துக்கியுள்ளன. இது, மக்களை தனியார் மருத்துமனைகளைக்கு விரட்டும் செயலாகும். மேலும், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் அவை காப்பீட்டு பணத்தையும் தாண்டி பில் போட்டு சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டுத்தான் விடுகின்றன. இப்படி ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்தும் கார்ப்பரேட் நலனிலேயே கருத்தாக உள்ளன.

தடுப்பூசி உள்பட மருத்துவப் பொருட்களின் உற்பத்தியிலும் கார்ப்பரேட்டுகளை வளர்த்து விடுவதற்கான கொள்கையைத்தான் மோடி அரசு பின்பற்றுகிறது. முக்கியமாக, கொரோனா தடுப்பூசிகளை அரசு நிறுவனங்களைக் கொண்டு தயாரிக்காமல் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து, இவர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியது. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்போடுதான் தடுப்பூசியை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்களோ மத்திய அரசிற்கு ரூ.150-க்கு விற்ற தடுப்பூசியை வெளிச்சந்தையில் ரூ.1,200 வரை விற்று கொள்ளையடித்தது. மோடி அரசோ 45 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு தடுப்பூசி வழங்கும், மற்றவர்களுக்கு மாநில அரசுதான் பொறுப்பு என்று தள்ளிவிட்டு, ஒன்றிய அரசு கொடுத்ததை விட கூடுதலான தொகைக்கு தடுப்பூசிகளை பெறவும் தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடவும் வைத்தது.

ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் பல தடுப்பூசி நிறுவனங்களிடமே ஒப்பந்தம் போட முயற்சித்தபோது எந்த நிறுவனமும் தனியாக மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் போட முன்வரவில்லை. இதே காலத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. கடைசியாக, மோடி அரசு உச்சபட்சமான ஒரு அழுத்தத்திற்கு ஆளான நிலையில்தான், அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசியை ஒன்றிய அரசே வழங்கும் என மோடி அறிவித்தார்.

எனினும், தடுப்பூசி தட்டுப்பாடு தீரவில்லை. கொரோனா தடுப்பூசி தொழிநுட்பத்தைப் பெற்று அரசே தனது கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்; அங்கு குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மோடி அரசு காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை. செங்கல்பட்டில் உள்ள HBL தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசு லீசுக்கு எடுத்து நடத்த விரும்பிய விவகாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, தனியார் கார்ப்பரேட் சேவையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. இதன் மூலம் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கென்றே ரூ.50 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்
♦ கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

அரசே கார்ப்பரேட்டுகளை ஊக்குவிப்பதன் மூலமும், அரசு சுகாதார கட்டமைப்பு போதாமையால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு தள்ளப்படுவதாலும் ஆண்டுக்கும் ஐந்து இலட்சம் கோடிகள் மருத்துவத்திற்கு செலவானால் அதில் 60% மக்களே செலுத்தும் அவல நிலைமை உள்ளது.

ஆண்டுதோறும் பல இலட்சம் கோடிகளை இந்திய மக்களிடம் வரிவசூலாக பெற்று வரும் மோடி அரசு, அதனை பயன்படுத்தி பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பலப்படுத்த முடியும் என்ற நிலையிலும் பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படையலாக்குவதைத்தான் செய்து வருகிறது. இதைத்தான் தனியார்மய − தாராளமயக் கொள்கைகளும் கோருகின்றன. இதனை தீவிரமாக அமலாக்கி வரும் கார்ப்பரேட் − காவி பாசிச மோடி அரசை தூக்கியெறியாமல், இனி மக்கள் நலன் குறித்து பேசுவது வெறும் கனவாகவே இருக்கும்.


தமிழ்ச்சுடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க