கான்பூர் தொழிற்சங்க இயக்கத்தினுடைய முண்ணனித் தோழரின் இளைய மகனிடமிருந்து ஏப்ரல் 27-ஆம் தேதி காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் வீட்டில் அனைவரும் கோவிட்-19 அறிகுறிகளால் பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் அப்பாவைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அப்பாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார். ஆக்சிஜன் கிடைப்பதும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதும் தாமதமாகிக் கொண்டே வந்தது.

உதவிக்காக நான் பணிபுரியும் கல்வி வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்காக நடத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரை அழைத்தேன். அவரோ தன்னுடைய மாமனார் போன வருடம் இதே நாளில் இறந்ததாகக் கூறினார். ஒரு வருடமாக தொடரும் இந்த நிலை தற்போது இன்னும் கோரமான வடிவத்தில், ஆக்ஸிஜன் இல்லை, மருத்துவமனையில் படுக்கை இல்லை எனத் தொடர்கிறது. இந்த ஒரு வருடம் காலத்தில் காலையில் கிரிக்கெட் புள்ளி விவரங்களை பார்ப்பதற்கு பதில் கொரோனா விவரங்களை பார்ப்பது வழக்கமாகி உள்ளது.

படிக்க :
யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

மாற்று ஊடகங்களில் நாம் பார்பது கூட கோவிட் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனைகள், மருத்துவ அவசர ஊர்தி, மருந்துகள், ஆகியவற்றை பெற முடிகிறவர்களை பற்றி செய்திகளைதான். இந்த வசதிகளையெல்லாம் பெற முடியாதவர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. நான் பணிபுரியும் மேல்தட்டு வர்க்கத்திற்ககான உயர் தரமான கல்லூரிக்கு அருகாமையிலேயே சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நான்காரி என்ற பகுதி உள்ளது.

தோட்டவேலை செய்பவர்கள், விடுதிகளில் வேலைசெய்பவர்கள், பேராசிரியர் வீடுகளில் வேலை செய்பவர்கள், செக்யூரிட்டிகள் என கல்லூரியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரக்கனக்கானோர் நான்காரி பகுதியில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சை பெற தகுதியுள்ள ஒரு மருத்துவர் இப்பகுதியில் கிடையாது. முறையாக மருத்துவம் படிக்காதவர்களே (jholawala doctors) – போலி மருத்துவர்களே – இப்பகுதியில் உள்ளனர்.

கொரோனா காலத்தில் இந்த போலி மருத்துவர்களின் வீட்டு வாசலில், தினமும் ஒரே அறிகுறிகள் உள்ள நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாக நண்பர்கள் கூறக் கேள்விபட்டிருக்கிறேன். பொதுவான மருந்துகளைக் கூட பெறமுடியாத காரணத்தால் இந்த போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதை நிறுத்தினாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக இவர்களின் வீட்டிற்கு வந்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த போலி மருத்துவர்கள் அதே பகுதியில் வசிப்பதனால் தங்களுடைய வீட்டுக்கு வரும் நோயாளிகளை இவர்களால் புறக்கணிக்கவும் முடிவதில்லை. தற்போதைய சுகாதார நெருக்கடியில் இந்த போலி மருத்துவர்களே நாட்டைக் காப்பாற்றுகின்றனர் என்று அப்பகுதியில் வசிக்கும் என்னுடைய பழைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தகுதியுள்ள மருத்துவர்கள் நான்காரியில் பகுதியிலிருந்து திடீரென வெளிறிவிடவில்லை. உழைக்கும் வர்க்க பிரிவினரும் நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கின்ற இப்பகுதியில் எனக்கு தெரிந்தவரையில், நான் 27 வருடங்களாக இக்கல்லூரியில் பணிபுரிகிறேன், இங்குள்ள பெரும்பான்மையான உழைக்கும் வர்கத்தினரால் தகுதியுள்ள மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற முடிந்ததில்லை. ஓரளவு வசதி படைத்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்கள் இப்பகுதியில் கிடையாது. மிக மோசமான பாதிப்புகளாக இருந்தால் ஜிடி சாலையிலும், வணிக பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுவார்கள். இச்சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இப்போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதைத் தாண்டி முறையான கொரோனா பரிசோதனைகளோ வழிகாட்டுதல்களோ எதுவும் கிடையாது.

கள நிலவரங்களை கவனிக்கும் நம்மில் பலருக்கு இந்த திடீர் மருத்துவ நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டது அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு சராசரி நபருக்கும் இது போன்ற மருத்துவ நெருக்கடிகள் மீள முடியாத ஒரு பெருந்துயரம் தான். வசதி படைத்தவர்களும் உயர்மட்ட தொடர்பு உள்ளவர்களும் தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைத்திருந்தனர். இந்த நெருக்கடி அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த வருடம், டிசம்பர் மாதம், பெருந்தொற்று சமயத்தில் அலகாபாத்தில் (இப்பொழுது ‘பிராயாக்ராஜ்’) உள்ள என் தந்தைக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடையே எண்ணற்ற பயணத்தின் போது சாலைகளில் கோவிட் விதிமுறைகளான முக கவசம் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த கிருமியை ஒழித்து நமது மரியாதைக்குரிய மாநில முதல்வர் யோகி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஒரு நாள் காலை ரிக்க்ஷாவில் சிக்னலில் காத்துக்கொண்டிருந்த போது பிச்சை எடுக்கும் ஒரு பெண் என்னிடம் வந்து இந்த முககவசத்தை எல்லாம் வைத்து என்ன செய்கிறீர்கள், “வீதிகளில் திரியும் எங்களை போன்றோர் இது இல்லாமலே சமாளிக்கிறோம் எங்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா?” என்று கேட்டார்.

இந்த பிரச்சனை கடந்த ஒரு வருடகால நெருக்கடியினால் உருவானது என்று கருதுவது பிரச்சனையை எளிமையாகப் பார்ப்பதாகும். பெருந்தொற்றால் ஏற்பட்ட இந்த ஆழமானப் பிளவுகள் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்பதை காட்டுகின்றன. அதாவது: தற்போதைய ஆஷா ஊழியர்கள்(Asha workers) போல் இல்லாமல், நாம் வசிக்கின்ற பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முறையான பயிற்ச்சி பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் (உரிய சம்பளத்தோடு) பணியமர்த்த வேண்டும்; வழக்கமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதிலிருந்து; இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்ட நன்கு செயல்படக்கூடிய கிராமத்திலிருந்து பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட பொது சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். ஆனால் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வீடும் பெருந்தொற்றால் பற்றி எரியும் இந்த காலகட்டத்தில் (மே 2021) சாத்தியமான மேற்கூறிய இலக்குகள் கூட தொலைதூர கற்பனை போலவேத் தெரிகிறது.

ஒரு ஆண்டு முழுவதும் இழந்து விட்டோம் என்ற உண்மையை எண்ணி பலரும் வருந்துகின்றனர். பெருந்தொற்றை எதிர்கொள்ளுவதற்கான சிறந்த ‘திட்டமிடல்’ இருந்திருந்தால் (பரிசோதனைகள், மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், பணியாளர்கள் மற்றும் பல), தற்போது இருக்கும் படுமோசமான நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் தற்போதைய ஆட்சி, அடிப்படையில் பொது மக்களின் நலனுக்காக, அது பெருந்தொற்றோ அல்லது மற்றவையோ, சிந்திப்பது அல்லது வேலை செய்வது என்ற பொதுக் கண்ணோட்டத்திலிருந்து எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம், அதனை செயல்படுத்தவும் செய்திருக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தேசத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கத்துடன் பொருந்தக்கூடியதாக பிரம்மாண்டம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.

உதாரணமாக உ.பி. ல் அடுத்த தேர்தல் வருவதற்குள் ‘ஜனம் பூமியில்’, ஒரு பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான பொறுப்பு பிரதமரின் முன்னாள் முதன்மை ஆலோசகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிகப்பெரிய பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவது (கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கூட பிரதமர் இல்லம் கட்டுவது ‘அத்தியாவசிய’ சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது).

பொது சுகாதாரத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டால் கூட அது, இந்தியா எத்தனை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது அதன் மூலம் இந்தியா எவ்வளவு உயர்ந்த தேசம் என்று கூறும் வடிவத்தில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான பல முக்கிய மூலப்பொருட்களுக்கு நாம் முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையே சார்ந்து இருக்கிறோம். ஒருவேளை அந்த நாடுகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் உரிமம் பெற்ற உற்பத்தியைக் கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்பதே எதார்த்தமாகும்.

படிக்க :
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ போன்ற வசனங்கள் பேசினாலும் நம்மிடம் தொழில்நுட்ப வலிமை இருந்தாலும், நம்மால் சொந்தமாக எதையும் உருவாக்கமுடிவதில்லை. மருந்து உற்பத்தித் துறை இதற்கு சிறிது விதிவிலக்காக இருக்கலாம். இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகளினால் உள்நாட்டு திறன்களை வளர்த்திடவும் மருந்துகளை தயாரிப்பதற்கான பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளடக்கிய வலைபின்னலை உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தியில் சுதந்திரமான பாதையை வடிவமைத்திருந்தனர்.

முக்கியமாக 1970-ல் கொண்டுவரப்பட்ட காப்புரிமைச் சட்டமானது உள்நாட்டு மருந்து உற்பத்தித் தொழிலை மேம்படுத்தவும் இந்தியாவை ‘உலகின் மருந்தகம்’ என்று மாறுவதற்கான வாய்ப்புகளையும் திறந்து விட்டது. 1990 களில் உலக வர்த்தக அமைப்பின் புதிய அறிவுசார் சொத்து உரிமை திட்டத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கையெழுத்திட்டதினால் மேற்கூறிய முயற்ச்சிகளனியத்துமே சிதைவுற ஆரம்பித்தன. தற்போது உள்நாட்டு மருந்து உற்பத்தி தொழில்கள் அனைத்தும் சர்வதேச சக்திகளை சார்ந்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக, இந்திய மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு (70%) சதவிகிதம் சீனாவையே சார்ந்துள்ளோம். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனா இந்தியாவுக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தினால் அதன் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம்?

மக்களுடைய நலன் சார்ந்த விசயங்களில் நேரடியாக அரசு பங்கெடுக்க வேன்டியதில்லை அதனை சந்தையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பது தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். கூடவே தனியார் மூலதனம் சுகந்திரமாக செயல்படுவதற்கான சூழல் இல்லாமல் இருப்பதே பொருளாதார மேம்பாட்டுக்கான தடையாகக் கருதுகின்றனர். உதாரணமாக, ஊரடங்கின் போது தொழிலாளர் நலன்களை பறிக்கின்ற தொழிலாளர் சட்டத்தினை (Labour Codes) நிறைவேற்றியது, விவசாயச் சந்தையில் ‘மிருக வெறியை(Animal sprit) கட்டவிழ்த்து விடுவதற்கான மூன்று விவசாய சட்ட திருத்தங்களை கொண்டுவந்தது ஆகியவற்றைக் கூறலாம்.

போராடும் விவசாயிகள் என்ன கோருகிறார்கள் அல்லது தொழிலாளர் சட்டத் திருத்தத்தைப் பற்றி தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் முக்கியமாக இவர்கள் கருதப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு எது நல்லது என்று தெரியாத கோபக்கார சிறுவர்கள் அவ்வளவுதான். மேலும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கியத் துறையிலும் அரசின் தலையீடு இருப்பதை(பொதுத்துற நிறுவனங்கள்) பொருளாதார வளர்ச்சிக்கான தடையாக தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது, பங்குகளை விற்பது, தனியார்மயப்படுத்து போன்ற நடவடிக்கைகள் மூலம் இதனை சரிசெய்ய முடியும் எனக் கருதுகின்றனர். மேற்சொன்ன பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிருகவெறியை (Animal spirit) கட்டவித்து விடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

தனியார்முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் ஆத்மநிர்பர்

இந்த ஆட்சியாளர்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்ச்சிப்பார்கள் என்று எண்ணுவது நம்முடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவத்திலிருந்து பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று முடிவுக்கே வரமுடியும். பாராளுமன்ற கட்சிகள் அனைத்துமே, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்டுகளிடம் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் மாநில அரசாங்கள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஆக்ஸிஜன் சிலிண்டரை பெறுவதற்கு மருத்துவக் காப்பீடு எவ்வாறு உதவும்? ஆனால் இந்த கேள்வியை கேட்க யாரும் தயாராவே இல்லை. இங்கே முரண்பாடு என்னவெனில், டாக்டர் மன்மோகன் சிங் கொரோனா சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்ற உயர்தரமான அரசு மருத்துவமனைகளில் சலுகை பெற்ற சில நபர்கள் மட்டுமே செல்லமுடியும். மற்றவர்களுக்கான (பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்) மருத்துவ சேவையோ சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பணக்காரர்களுக்கு ஏழு நட்சத்திர அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிலும் ஏழைகளுக்கு தெருவிலும் மருத்துவம் பார்க்கப்படும்.

சந்தையே அனைத்தையும் நிர்வகிக்கின்ற தற்போதைய நிலையில் மருந்துகளிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் இறந்தவர்களை தகனம் செய்வது வரை அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் விடப்படுகிறது. இந்த சந்தை கருத்தியலானது ஒருவரோ அல்லது இருவரின் முட்டாள்தனத்தினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர் கடந்த 30 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்தில் திட்டமிட்டு கட்டியமைத்ததாகும். இதன் விளைவுகளை அனைத்தும் தற்போது கொரோனா பெருந்தொற்று பற்றவைத்த தீயினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அரசைப் பொறுத்தவரை அது மக்களுக்கு ஆற்றக்கூடிய ஒரே கடமையாகக் கருதுவது சந்தைக்கான சிறந்த பொருளாக மக்களை ஒழுங்குபடுத்துவதே. மக்கள் ஏதாவது குறைக்கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திணிப்பது, ஆக்ஸிஜன் பற்றாகுறை பற்றி புகார் கூறினால் உத்திர பிரதேச அரசாங்கம் மிரட்டுவது போல, அது குடியுரிமை சட்டமாகட்டும் அல்லது விவசாய சட்டமாகட்டும் அனைத்திற்கும் இதே நிலைதான்.

இதற்கிடையில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலண்டனில் வாரத்துக்கு யூரோ 50,000 என்ற மதிப்பில் ஒரு மாளிகையை வாடகை எடுத்து தங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கும் இந்நேரத்தில், திரு. முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். இதில் இங்கிலாந்தின் மிக சிறந்த கோல்ஃப் ஆடுகளம், விம்பிள்டன் வீரர்களின் பயிற்சிக்கான டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை ஸ்டோக் பார்கில் உள்ளன.

இது தான் நம்முடைய ஆட்சியாளர்களின் பார்வையில் வளர்ச்சியெனில், நம்முடைய தற்போதைய நிலைமை கண்டு ஒருவர் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

கட்டுரையாளர்: ராகுல் வர்மன்
மொழிபெயர்ப்பு: வருண், CCCE-TN
மூலக் கட்டுரை :
RUPE-India

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு : பேரா. ராகுல் வர்மன், ஐ.ஐ.டி. கான்பூரில் தொழில் மற்றும் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக உள்ளார். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் குறித்து RUPE இணையத் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க