14.11.2024
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்!
சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!
பத்திரிகை செய்தி
கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் விக்னேஷ் என்பவரின் தாய் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இவரது உடல்நிலை சரியாகாத காரணத்தினால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் “அவருக்கு இதற்கு முன்பு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை இதனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விக்னேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர் வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி, தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “சம்பந்தபட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என மருத்துவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. இத்தாக்குதல், மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதன் வெளிப்பாடாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சிவபாலன் மற்றும் இளங்கோவன், தமிழ்நாடு மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்த சம்பவத்தை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து துறைகளிலும் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த மாதம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மருத்துவக் கட்டமைப்பு எவ்வாறு கிரிமினல்மயமாகி உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதோடு, மருத்துவத்துறையில் உள்ள போதாமையையும், அன்றாடம் உடை மாற்றுவதற்கு கூட வசதியில்லாமல் மருத்துவர்கள் இருப்பதையும், மருத்துவத்துறையில் மேல்நிலைப் படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளின் வேலை சுமையையும் இணைத்தே அம்பலப்படுத்தியது.
மேலும், நேற்று இரவு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லாமல் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளில் உள்ள அவலநிலைக்கு மற்றொரு சான்றாகும்.
எனவே, சேவைத் துறையான மருத்துவத்துறையை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து கார்ப்பரேட்மயமாக்கும் அரசின் நடவடிக்கையே, பாலாஜி போன்ற மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, இது போன்ற தாக்குதல்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போலீஸ் பூத் அமைப்பதெல்லாம் தீர்வல்ல, மருத்துவத்துறையில் கர்ப்பரேட்மயத்தை தடுத்து நிறுத்தி சீரழிந்திருக்கும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தீர்வாக இருக்கும்.
தமிழ்நாடு அரசே, ஒன்றிய அரசே,
- அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!
- அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- அரசு மருத்துவத்துறையில் கார்ப்பரேட் பங்களிப்பை உடனடியாக கைவிட வேண்டும்!
- மருத்துவ சேவையை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்!
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram