கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று ஒன்றிய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் கிடைக்காததால் மரணம் என்று எந்த மாநில அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் இறப்பு சான்றிதழ்களும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணம் என்று குறிப்பிடவில்லை. எனவே, மத்திய அமைச்சர் மாநில அரசுகளின், யூனியன் பிரதேசங்களின் அறிக்கைகள், தகவல்களில் இருந்துதான் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளாரே தவிர, உண்மைக்கு புறம்பாக ஏதும் கூறவில்லை என்று ஒன்றிய அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக தினமணி நாளிதழ் (ஜூலை 23) தலையங்கத்தில் எழுதியுள்ளது.

உலகத்தில் எங்கும் காணாத நடைமுறையை (இறப்புச் சான்றிதழிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் என்று எழுதுவது) துணைக்கு இழுத்துக் கொண்டு வந்து பாசிச மோடி அரசிற்கு முட்டுக் கொடுக்கிறது தினமணி

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருந்ததும், ஆக்சிஜன் கிடைக்காமல் எண்ணெற்ற மரணங்கள் நிகழ்ந்ததும் நாட்டின் அனைவரும் அறிந்த உண்மை.

குறிப்பான டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர் என்பதை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுதன்ஷூ பங்காட்டா கூறியுள்ளார். டெல்லி கங்காராவ் மருத்துவமனையில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக உயிரிழந்தார்கள்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அன்றே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சிதிணறி மூதாட்டி உயிரிழந்தார். வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு முதலான மாநிலங்களிலேயே இதுதான் நிலை என்றால், உத்தரப் பிரதேசத்தைப் பற்றி கேட்கவே தேவையில்லை.

இதை தவிர வெளியில் தெரியாத பல்வேறு ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணங்கள் நிகழ்ந்திருகிறது. மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் மரணமடைந்தார்கள். மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் வரிசையாக நின்றுக் கொண்டிருந்த ஆம்புலன்சுகளிலேயே ஆக்சிஜன் கிடைக்காமல் மரணமடைந்தார்கள்.

மேலும், மருத்துமனைகளில் ஆக்சிஜன் அதிகம் தேவைப்படும் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு குறைவான அளவில் ஆக்சிஜன் வினியோகத்தாலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

உடலில் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் அளவைப் பொருத்துதான், செலுத்த வேண்டிய ஆக்சிஜனின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த தீர்மானிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாகவே ஆக்சிஜன் கிடைக்கும் பட்சத்தில் நோயாளியின் நுரையீரல் சுவாசிப்பதில் முன்னேற்றம் அடைவதில்லை. போதுமான பிராணவாயு கிடைக்காமல் நோயாளிகள் மரணமடைவது நடக்கிறது.

இந்த மரணங்களுக்கான செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் கூறி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை துவங்கியபோதே பல மருத்துவ வல்லுனர்களும், இரண்டாம் அலையின் தீவிரம் குறித்து எச்சரிக்கை தெரிவித்தனர்.

ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் தாயாரித்தாலும் அதை பாதுகாக்கும் கருவிகள் இல்லை, மருத்துவமனைகள் பற்றாக்குறை, தடுப்பூசிப் பற்றாக்குறை, என எது குறித்தும் அக்கறை செலுத்தாமல், தேர்தலிலும் ஆட்சிக் கவிழ்ப்புகளிலும் கவனத்தை செலுத்திவிட்டு, மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்களை மரணத்தை நோக்கித் தள்ளியது பாஜக அரசு.

பாசிச மோடி அரசு தனது கையாலாகாத் தனத்தை மறைத்து ஆக்சிஜன் இல்லாமல் யாரும் மரணிக்கவில்லை என்று தைரியமாக நாடாளுமன்றத்தில் கூறுகிறது. இதற்கு ஊடகங்களும் முட்டுக் கொடுக்கின்றன.

கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு இந்தியா முழுவதையும் களேபரப்படுத்திய ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனால் ஏற்பட்ட மரணங்களும், உலக அளவில் கவனம் பெற்றன. பல நாடுகளும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கும் உதவி செய்தன. இப்படி பகிரங்கமாக நடந்த ஒரு பேரவலத்தை, நடக்கவே இல்லை என நாடாளுமன்றத்தில் ஒரு நாட்டின் ஆளும் கட்சி கூறுகிறது என்றால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை இந்த அரசு ஐந்தறிவு கொண்ட விலங்குகளாகவே பார்க்கிறது என்று பொருள்.


சந்துரு
செய்தி ஆதாரம் : தீக்கதிர், தினமணி (23.7.2021)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க