இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட கரும்புகை, நோயாளிகள் வெளியேற்றம் காரணம் மின் கசிவா? அரசு நிர்வாக சீர்கேடா?
ஜனவரி 1 நள்ளிரவில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் அனைவரையும் திடீரென நச்சு வாயுக்கள் அடங்கிய கரும்பு புகை சூழ ஆரம்பித்தது. பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது இதனால் அந்த தளங்களிலிருந்த உள் நோயாளிகள் பலரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிலிருந்து தப்பித்து வந்த நோயாளிகள் சிலர் குறிப்பிடும் போது “திடீரென கரும்புகை கிளம்பி எல்லாருக்கும் மூச்சுத் திணறிருச்சு, தப்பித்ததே பெரிய விஷயம்பா, பெட்டில் படுத்திருந்த, உடம்புல டியூப் மாட்டி இருந்தவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்கப்பா; இங்க இருந்து அவங்கள வெளியேத்தும் போது அவங்களுக்கு அதிகமான பாதிப்புப்பா…..” என்று தாங்கள் கண்ட அனுபவித்த கொடுமைகளை விவரித்தனர்.
ஆனால் மின் கசிவு ஏற்பட்டதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை என அதிகாரிகளும் பல ஊடகங்களும் ஜனவரி 2 காலையிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மையைத் திரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாம் இன்று மருத்துவமனைக்குள் சென்று பார்க்கும்போது, மின்கலங்கள் அதாவது பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்கள் வைக்கப்பட்டிருந்த அறை முழுவதும் எரிந்து கருப்பு நிறத்திலிருந்தது. அங்கிருந்த பேட்டரிகள் அனைத்தும் எரிந்து உருகி கருகிப் போயிருந்தது. வாகனங்களில் பயன்படுத்துவது போன்ற பெரிய பேட்டரிகள் நூற்றுக்கணக்கில் எரிந்து கருகி உள்ளன. அது முழுவதும் புகையாக வெளியேறித் தான் மருத்துவமனையின் உள்ளே தங்கி இருந்த நோயாளிகள் அனைவரையும் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டரிகள் வைக்கும் அறை என்பது பொதுவாக காற்றோட்டம் உள்ள அறையாகவும் முக்கியமாக எக்ஸாஸ்ட் ஃபேன் என சொல்லப்படும் வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி அவசியம் பொருத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இப்போது எரிந்து தீக்கரையாகியுள்ள இந்த அறையில் அப்படி எந்த ஒரு அமைப்பும் இல்லை. ஒரே ஒரு சீலிங் ஃபேன் வீடுகளில் போடுவது போல போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த அறையை சுற்றி காற்று வெளியேறுவதற்கான பெரும்பான்மையான இடங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாகத்தான் அந்த அறையிலிருந்த பேட்டரிகள் அனைத்தும் விபத்து ஏற்பட்டவுடன் வெப்பமாகித் தீப்பிடித்து உருகி மிக மோசமான நச்சு வாயுக்களை வெளியேற்றியுள்ளது. இது போன்ற நச்சு வாயுக்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் அபாயகரமானது என்பதையும் பல மருத்துவர்கள் பதிவு செய்கிறார்கள்.
இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய பிரச்சனை இங்கு வெடித்துள்ளது. பேட்டரிகள் வைக்கும் அறை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பொதுவாக இணையத்தில் தேடினாலே வருகிறது எனும் போது, இதைக் கூட செய்யாததற்கு என்ன காரணம்? கமிஷன் வாங்கிக்கொண்டு கட்டடங்கள் கட்டுவதும் அதிகாரிகள் காண்ட்ராக்டர் அரசியல்வாதிகள் கூட்டுக் கொள்ளை அடிப்பதும்தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இனிமேல் நாங்கள் ஒரு மின் வாரிய ஊழியரை அங்கு நிரந்தரமாக பணியமர்த்திச் சரி செய்து விடுவோம் என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இது போன்ற மின்கலங்கள் (பேட்டரிகள்) அமைக்கப்பட்ட அறையில் ஹைட்ரஜன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு புகைகளை எப்போதும் வெளியாகிக் கொண்டே இருக்கும் என்கிறார்கள். அவற்றின் அளவு அதிகரிப்பதைக் கூட டிடக்டர்கள் கருவிகள் வைத்துக் கணக்கிட்டு அபாயத்தைச் சரி செய்யலாம் என்கிறார்கள். ஆனால் அவற்றையும் இங்கு செய்யவில்லை.
இந்த மருத்துவமனை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் தான் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என இவர்கள் யாரும் விலக முடியாது என்பது தான் எதார்த்தம். ஊழல்மயமான அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் எல்லா ஆட்சிக்கும் படி அளக்கத்தான் செய்கிறார்கள்.
மேலும் இந்தத் துயர சம்பவத்துடன் மேலும் ஒரு துயரச் சம்பவமும் சேர்ந்து அரங்கேறி இருக்கிறது. இராமநாதபுரம் அருகில் வாலாந்தரவை என்ற இடத்தில் ஜனவரி 1 நள்ளிரவில் நடந்த விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த தீப்பிடித்து எறிந்து விஷ வாயுக்கள் வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதனால் மாற்று அறையும் மருத்துவர்களும் ஒதுக்கப்படாமல் படு காயங்களுடன் வந்தவர்கள் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். இதில் அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். அரசின் நிர்வாக சீர்கேடுகளும் ஊழல் லஞ்சம் முறைகேடுகளும் இன்று மூன்று உயிர்களைப் பறித்துள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்திற்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றாமல் விட்டதற்கும் ஒட்டுமொத்தமாக இந்த அரசுதான் முதன்மை காரணம்.
ஆதலால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் டீன், கட்டட காண்ட்ராக்டர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என கோருகிறோம்.
உறுதியான போராட்டங்களை களத்தில் கட்டியமைப்பதும் வேண்டும் ஜனநாயகம் என முழங்குவதும் அதற்கான போராட்டங்களைக் கட்டியமைப்பதும் இன்றைய காலத்தின் அவசியத் தேவை. அதுவே இந்த பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும்.
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram