கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் உலகளாவிய சிக்கலை திறமையாகக் கையாண்ட நாடுகள் இருக்கும்  அதே நேரத்தில், திறமையற்ற முறையில் தமது நாட்டு மக்களை கொரோனாவிற்குப் பலி கொடுத்த தலைவர்களும் இருக்கின்றனர்.

அந்த வகையில் கொரோனாவை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிய – மோசமான முறையில் கொரோனா தொற்றைக் கையாண்ட – உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிரபல பத்திரிக்கையான கான்வெர்சேசன்.

படிக்க :
மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்
லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

கோவிட்-19 நோயை மோசமான முறையில் கையாண்ட ஐந்து நாடுகள் குறித்து தனது இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது இந்த பத்திரிகை. இப்படி மோசமாகக் கையாண்ட நான்கு நாடுகளின் தலைவர்களின் பெயரை டிவிட்டரில் குறிப்பிட்டு யார் மோசமான முறையில் கோவிட்-19ஐக் கையாண்டது என இணைய வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தாம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட ஐந்து நாடுகளின் தலைவர்கள் எப்படி மக்களை கொரோனாவுக்குப் பலி கொடுத்தார்கள் என்பது குறித்த ஒரு கட்டுரையையும் வெளியிட்டுள்ளது, ‘தி கான்வெர்சேசன்’ பத்திரிகை.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் அதிபர் பொல்சனரோ, பெல்லாரஸ் சர்வாதிகாரி அலெக்சாண்டர் லுகாஷென்கொ, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆகியோர் தான் உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட அந்த 5 தலைவர்கள்.

இந்தியாவின் நிலைமை பற்றி தமது கட்டுரையில் குறிப்பிடுகையில், மே மாதத்தில் கோவிட் நோயின் குவிமையமாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது தி கான்வர்சேசன் இதழ். நாளொன்றுக்கு சராசரியாக 4,00,000 புதிய தொற்றுகள் இந்தியாவில் ஏற்படுவதை சுட்டிக் காட்டியுள்ள இப்பத்திரிகை, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளின் பற்றாக்குறை, போதுமான படுக்கைகள் ஆகியவை இல்லாத நிலைமையை சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனாவை மோசமாகக் கையாண்டு முதலிடம் பிடித்த பாசிச மோடி

மேலும், கடந்த ஜனவரி 2021-ல் சர்வதேச மன்றம் ஒன்றில் மோடி பேசுகையில், கொரோனாவை திறமையாகக் கையாண்டதன் மூலம் இந்தியா மனித குலத்தைக் காத்துள்ளதாக மோடி  பேசியதையும், மார்ச் மாதத்தில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்ததையும் சுட்டிக் காட்டியிருக்கிறது கான்வர்சேசன் பத்திரிகை. உலகம் முழுவதிலும், இந்தியாவிலும் கொரோனா இரண்டாம் அலை பரவத் துவங்கியதையும், இரண்டாம் அலையில் பரவும் திரிபுற்ற கொரோனாவின் கடுமையையும் கருத்தில் கொள்ளாமல், அதன் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசாங்கம் மெத்தனமாக இருந்தது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

ஏப்ரல் மாதத் தேர்தலை ஒட்டி, இந்தியா முழுவதும், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களைக் கூட்டியது, மதரீதியான கூட்டங்களுக்கும், திருவிழாக்களுக்கும் அனுமதி வழங்கியது, ஆகியவை மிக முக்கியமான காரணங்கள் என்று சுட்டிக் காட்டியுள்ளது கான்வர்சேசன் இதழ்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக கடந்த ஆண்டு மார்தட்டிய மோடி, சுமார் ஒரு கோடி தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ள நிலையில் மே மாதத்தின்  துவக்கம் வரையில், தனது 130 கோடி மக்கள் தொகையில் 1.9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி மோடியின் கையாலாகாத் தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்து வந்தது. மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம் என உலகமே காறி உமிழும் அளவிற்கு தனது தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இந்தியாவின், குறிப்பாக வடஇந்தியாவின் மோசமான மருத்துவக் கட்டமைப்பை கொரோனா இரண்டாம் அலை அம்பலப்படுத்தியது. தடுப்பூசி தயாரிப்புக்கு பல்வேறு அரசு நிறுவனங்கள் தகுதிப் பெற்றதாக இருந்தாலும், அவற்றை புறந்தள்ளி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 4,500 கோடி நிதி வழங்கி, அந்த நிறுவனங்கள் சொல்லும் விலையில் தடுப்பூசியை வாங்கியிருக்கிறது.

இந்தக் கொரோனா காலத்தின் நெருக்கடியை முழுக்க முழுக்க தனியார், மற்றும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்ட மோடி கும்பல், மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து இன்றளவும் எவ்வித அக்கறையையும் செலுத்தவில்லை.

கர்ணன்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க