தடுப்பு மருந்துகளைக் கைப்பற்றுவது, பெருமளவில் மருந்தை உற்பத்தி செய்வதற்காக காப்புரிமையை தளர்த்துவதற்கான கோரிக்கையை ஏற்க மறுப்பது, தமது அரசின் ராஜீய விவகாரங்களுக்காக தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முதலானவைகள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து விரைவாக ஏழை நாடுகளைப் பாதுகாக்காது என்பது உறுதி. இதன் விளைவாக, பணக்கார நாடுகளில் கூட இந்த பெருந்தொற்றை ஒழிப்பது மிக நீண்ட காலமாகும்.

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம்

கோவிட்–19 பெருந்தொற்றானது பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. பணக்கார நாடுகளிலுள்ள (குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) மக்களிடையே இந்த கொரோனா தொற்றுப் பாதிப்பானது மிகப் பெருமளவில் சரிசமமற்றிருந்தது; இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எடுக்கும் கொள்கை ரீதியிலான எதிர்வினைகளின் பிரம்மாண்டம்; உலகளாவிய அளவிலான விரைவான மற்றும் அவசரமான எதிர்வினைகள் என பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

பணக்கார நாடுகள் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய அதீத ஆர்வமானது தனிப்பட்ட நாடுகளின் எதிர்வினையை வடிவமைத்தது மட்டுமின்றி உலக அளவிலானக் கொள்கையையும் வடிவமைத்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்கான மருந்துக் கம்பனிகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக மிகப்பெருமளவில் மானியங்களை வாரி வழங்கியதன் மூலமும், முன்கூட்டியே தடுப்பூசி மருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் போடுவதன் மூலமும் மற்றும் இன்னபிற வழிகளிலும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிகப்பெரும் அழுத்தத்தை தந்தன.

இதனால் அதிவிரைவிலேயே பலமுனை கோவிட்–19 தடுப்பூசி மருந்துகளை பலரும் உருவாக்கியது மட்டுமின்றி அவற்றில் பல மருந்துகளுக்கு இன்னும் மிக அதிவிரைவான தரப்படுத்தல் ஒப்புதல் வழங்கப்பட்டன. வழமையாகவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும், ஒப்புதல் பெற்று தயாரிக்கவும் பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில் பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கும், எந்த வகையிலாவது பக்கவிளைவுகள் உள்ளதா எனவும் சோதித்தறிய பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் சில கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு மருந்துக் கம்பனிகளுக்கு அத்தியாவசிமான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே பயன்பாட்டுக்கான ஒப்புதலை அந்த அரசுகள் வழங்கியுள்ளன. இன்னும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூட ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு, அதாவது முழுமையான தரவுகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து பரிசோதிக்காமலேயே அவற்றைப் புறந்தள்ளிதான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி அதிஅவசரக் கொள்கைகளைப் பின்பற்றி கோவிட்-19 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை உற்பத்தி செய்வதிலும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் உலக நாடுகளிடையே தீவிரமான சமத்துவமின்மை நிலவுவது அம்பலமாகியுள்ளது. முக்கியமாக, 1) பணக்கார நாடுகள் தடுப்பூசியை அப்பட்டமாக பிடுங்கிக் கொள்ளுகின்றன. 2) முன்னேறிய நாடுகளின் காப்புரிமைப் பாதுகாப்பு கொள்கைகளின் காரணமாகப் பரவலாக அதிகரித்த அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதுத் தடுக்கப்படுகிறது. 3) இந்த தடுப்பூசி விநியோகம் மூலம் தேசியவாதமும் மற்றும் ராஜதந்திர ரீதியிலான மென் அதிகாரமும் (Soft Power) வளர்க்கப்படுகிறது.

மிகப்பெரிய தடுப்பூசி கொள்ளை (அ) பிடுங்குதல் !

இப்பெருந்தொற்றிலிருந்து கடந்து வரவேண்டுமெனில் உலகம் முழுவதிலுமிருந்து இது கடந்து வரப்பட்டால்தான் முடிவுக்குவரும் என்பது வெளிப்படையானது. உலக மக்களிடையே தடுப்பூசிப் போடுவதில் உள்ள தாமதம் காரணமாக கொரோனா வைரஸ் மாற்றமடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இது, பணக்கார நாடுகள் தங்கள் பைகளில் தடுப்பூசிகளை நிரப்பி வைத்துக் கொண்டாலும் இப்பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான திறனைக் குறைக்கும்.

போதுமான அளவில் தடுப்பூசிப் போடாததன் காரணமாக தொற்று நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற அச்சத்தின் விளைவாகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் மறுவிளைவாக உலகப் பொருளாதாரம் மீட்சியடைவது மேலும் தடைபடும், தாமதமாகும். இந்த பாதிப்புகள் மிகப்பெரும் அளவிலானது. உலக மக்கள் அனைவருக்குமான தடுப்பூசிப் போடும் செலவு முழுவதையும் பணக்கார நாடுகள் தாமே ஏற்றுக் கொண்டால் கூட அந்தப் பணக்கார நாடுகள் இதன் மூலம் பலனடையும் வாய்ப்புகளே மிக அதிகம்.

‘ஒவ்வொரு நாடும் தனக்காக’ என்ற அணுகுமுறையானது பகுத்தறிவற்றது மட்டுமின்றி மிகப்பெரும் பின்னடைவுக்கும் இட்டுச் செல்லக் கூடியது. ஆனால் இதுதான் தற்போது அச்சு அசலாக நடந்து கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மூன்று முக்கிய தடுப்பூசிகளுக்கு [பிசெர்-பயோNடெக் (Pfizer-BioNTech), மாடெர்னா (Moderna), அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) என்ற 3 மருந்து கம்பெனிகளின் மருந்துகள்] ஒப்புதல் அளித்தவுடனேயே பணக்கார நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்தன. இதன் விளைவாக 2021 பிப்ரவரி முடிவில் கோவிட்-19 தடுப்பூசி மருந்தானது உலகின் வளர்ந்த நாடுகளில் மிக அதிகளவு குவிந்தன. (ஆங்கில கட்டுரையில் படம் உள்ளது. படம்-1).

படம் 1

இது நடந்திருக்கக் கூடாது. இந்த கோவிட்-19 உலகளவில் தடுப்பூசி பெறும் வசதி (COVAX-கோவாக்ஸ்) என்ற அமைப்பானது உலக சுகாதாரக் கழக (WHO) தலைமையின் கீழ் இயங்குகிறது. பெருந்தொற்றுக்கு எதிராகத் தயாராவது மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டமைப்பு மற்றும் கவி (Gavi) போன்ற அமைப்புகள் இப்படி நடப்பதைத் தடுப்பதற்கு என்றே குறிப்பாக உருவாக்கப்பட்டவை. அதாவது, பணக்கார நாடுகள் தடுப்பூசியைக் கைப்பற்றுவதைத் தடுக்கவும், உலகின் ஏழை மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்குமாக ஏற்படுத்தப்பட்டவை.

கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவது, அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் பகிர்ந்து கொடுப்பதில் வெளிப்படையாகவும் அதிக அபாயத்திற்கு இலக்காகும் மக்களுக்குக் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டும் கோவாக்ஸ் செயல்படுகிறது. 2021 துவக்கத்திலேயே 190 நாடுகள் இதில் சேர்ந்தன. பிப்ரவரியில் அமெரிக்காவும் (முன்னால் ஜனாதிபதி டிரம்ப் இதில் சேராமல் தடுத்து வைத்திருந்தார்) இதில் சேர்ந்தது. உயர் வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்களுக்கான தடுப்பூசி மருந்தை கட்டணம் செலுத்தியும், 92 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கட்டணம் இன்றியும் பெற்றுக் கொள்ளலாம்.

கொவாக்ஸ் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அந்நாடுகளின் மக்கள் தொகையில் 3% பேருக்கு, நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடிய முன்களப் பணியாளர்களுக்கு, அதாவது சுகாதாரம் மற்றும் சமூக சேவைப் பணியாளர்களுக்கு வழங்குதல். பிறகு ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையில் 20% பேருக்கு, அதாவது நோய் தாக்குதல் அபாயம் உள்ள வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு வழங்குதல்.

இரண்டாவது கட்டமாக நோய் பரவல் வேகம், பிற நோய் தொற்றுக் காரணிகளால் (அம்மை போன்ற நோய்கள்) நோய் பரவுதல் மற்றும் அந்த நாட்டின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமானதாக உள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குதல். இறுதியாக அனைவருக்கும் என செயல்படுத்தப்பட உள்ளது.

மருந்து உற்பத்தியிலான கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டால் இது ஒரு சிறப்பான முறையாகும். ஆனால், இம்முறையில் எதிர்பார்த்த நிதியான 680 கோடி டாலரில் 400 கோடி டாலர் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மருந்தை வினியோகிக்க முடியவில்லை. ஏனெனில் கோவாக்ஸ்-ன் உறுப்பு நாடுகள் தனியே மருந்துக் கம்பனிகளிடம் நேரடியாக தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிப்பதால், செல்வந்த நாடுகள் சம்பந்தப்பட்ட மருந்துக் கம்பனிகளிடம் கோவாக்ஸ்-க்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

இதனால் தரக்கட்டுப்பாட்டு முறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் மூன்று மருந்துகள் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் உலக மக்கள் தொகையில் 14 சதிவீதம் மட்டுமே உள்ள முன்னேறிய செல்வந்த நாடுகளின் வசம் 2021-ஆம் ஆண்டில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பு மருந்துகளில் 85 சதவீதம் தடுப்பு மருந்துகள் சென்றன. (கோஷ் 2020).

இவற்றில் பெரும்பாலானவை ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்குவதற்கு முன்பாகவே கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டவை. கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட 48 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் 750 கோடி தடுப்பு மருந்துகள் (Doses) பெரும்பாலும் பணக்கார நாடுகளால் நவம்பர் 2020-க்குள்ளாகவே வாங்கப்பட்டன. சில நிகழ்வுகளில் மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பே இவ்வாறு ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்பட்டுவிட்டன. (ஆச்சாரியா & ரெட்டி 2021)

கடந்த 2020-ஆம் ஆண்டு 44 ஒப்பந்தங்கள், இந்த ஆண்டில் 2021-ல் இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் அரசாங்கங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களிடையேப் போடப்பட்டுள்ளன. தமது நாட்டு மக்கள் தொகையை விட கனடா பத்து மடங்கும், அமெரிக்கா நான்கு மடங்கும் கூடுதலான தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்துள்ளன. கோவாக்ஸ்-சிடம் குறைவான விலையில் விற்பதை விட அதிகவிலை கொடுத்து, வளர்ந்த செல்வந்த நாடுகள் வாங்க தயாராக இருப்பதால் மருந்து நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு மருந்துகளை விற்கின்றன. மேலும் ஒப்பந்தங்களின் அடிப்படை அம்சங்களான விலை உள்ளிட்டவற்றை மருந்து நிறுவனங்கள் மறைமுகமாக வைத்துள்ளன.

இவ்வாறு செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம். உலக சுகாதார நிறுவன தலைவரின் அறிக்கைப்படி, 2021 ஜனவரி மத்தியில் செல்வந்த நாடுகளில் 390 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. ஒரு ஏழை நாட்டில் மொத்தத்தில் 25 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் 170 பரம ஏழை நாடுகளில் ஒருவருக்குக் கூட தடுப்பூசிப் போடப்படவில்லை. அவர் மேலும் கூறுகிறார்: “நான் கூறுவது முரட்டுத்தனமாயிருக்கலாம் – உலகம் சமூகத்திலான மதிப்பு, நெறிபிறழ்வினது பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த தவறின் விலையானது உலகின் ஏழைநாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரத்தின் அழிவாக இருக்கும்”. (ஐ.நா.செய்திகள், ஜனவரி 2021).

நியாயப்படுத்த முடியாத அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு !

மிகமோசமான, சமனற்ற தடுப்பூசி மருந்து விநியோகத்திற்கான முக்கியமான காரணம் போதுமான அளவு உற்பத்தி நடக்காததுதான். எனினும் இந்த பற்றாக்குறை முற்றிலும் தேவையற்றது மட்டுமின்றி, எளிதாகவும், விரைவாகவும் தீர்க்கப்படக் கூடியதே. குறைந்த அளவிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட மருந்து உற்பத்திக்கு முக்கிய காரணமே மருந்துக் கம்பனிகளிடம் உள்ள காப்புரிமைதான்.

இந்த காப்புரிமை மருந்துக் கம்பனிகளுக்கு உற்பத்தியில் ஏகபோகத்தை வழங்குகின்றன. அந்த மருந்துக் கம்பனிகளிடம் உள்ள உற்பத்தித் திறன் மற்றும் மிகவும் ஒரு சிலருக்கு அந்த கம்பனிகள் வழங்கும் உற்பத்திக்கான அனுமதி ஆகியவையே பெருமளவிலான மருந்து உற்பத்திக்கான தடைகளாக உள்ளன.

காப்புரிமை பொதுவாகப் புதிய கண்டுபிடுப்புக்கான அத்தியாவசியமான பண வெகுமதியாக பார்க்கப்படுகிறது. இது இல்லையென்றால் தொழில்நுட்ப மாற்றங்கள் நடக்காது அல்லது மிகவும் வரம்புக்குட்பட்டு இருக்கும் என்ற கருத்து உள்ளது. பெரிய மருந்து நிறுவனங்கள் (உலக வர்த்தகக் கழகம் (WTO) மற்றும் அதைத் தொடர்ந்து வணிக மற்றும் பொருளாதார கூட்டுகளுக்கான ஒப்பந்தங்களில் இந்த பெரிய மருந்து நிறுவனங்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ’லாபி’(lobby) செய்து இந்த அறிவுசார் சொத்துரிமையை முன் தள்ளிச் சேர்த்தன) புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு மிக அதிகளவு செலவு பிடிப்பதாலும் சில சமயங்களில் ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்து கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்துகள் வெற்றிப் பெறாமல் போவதாலும் இப்படிப்பட்ட ஊக்கத் தொகையான காப்புரிமை தேவை என வாதாடுகின்றன.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

ஆயினும், கோவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக அரசாங்கங்களிடமிருந்து மிகப்பெருமளவிலான மானியத் தொகைகளை மருந்துக் கம்பனிகள் பெற்றுள்ளன. பெருமளவில் இந்தத் தொகையானது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான மருந்துக் கம்பனிகளின் செலவுகளை முற்றிலும் ஈடுசெய்துள்ளன என்பதே உண்மை. அமெரிக்காவில் மட்டும் ஆறு பெரிய மருந்துக் கம்பனிகள் கோவிட்-19 மருந்து தயாரிப்பதற்காக 1200 கோடி டாலர் நிதியை மானியமாகப் பெற்றுள்ளன. (MSF 2021). பிற செல்வந்த நாடுகளின் அரசாங்கங்களும் இதேபோல மானியங்களை வாரி வழங்கியுள்ளன.

தனியார் மருந்துக் கம்பனிகள் முந்தையப் பொது ஆராய்ச்சிலிருந்து (Scientific American 2020) பலனடைந்தது மட்டுமின்றி, தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் மாதிரி சோதனைகளுக்கான செலவினங்களும் குறைந்து ஆதாயம் அடைந்துள்ளன. இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் அவர்களின் முதலீட்டை ஏற்கனவே பெற்றுவிட்டன. சில நிறுவனங்கள் அதற்கும் மேலாகவே ஆதாயம் அடைந்துவிட்டன. இனி விற்பதெல்லாமேக் கூடுதலான லாபம்தான். (Super Profits).

உதாரணமாக, ஃபைசர் (Pfizer) நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நேரடியான மானியம் எதுவும் பெறாவிட்டாலும் பத்து கோடி (Doses) டோஸ் மருந்துகளுக்கு முன்கூட்டியே 195 கோடி டாலர் பணம் பெற்றுள்ளது. (Industry Week 2020). மேலும், இது தொழில் நுட்பத்துக்காக பியோஎன்டெக் நிறுவனத்தைச் சார்ந்துள்ளது. இந்த பியோஎன்டெக் நிறுவனம் தனது ஆராய்ச்சிக்காக ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து 44.5 கோடி டாலரைப் பெற்றுள்ளது. (Bloomberg 2020). ஃபைசர் (Pfizer) நிறுவனம் இந்த தடுப்பு மருந்து தயாரிக்க 310 கோடி டாலர் செலவு (பி.பி.சி 2020) செய்து, 2021-க்குள் 1500 கோடி டாலர் விற்பனைக்கு உத்தேசித்துள்ளது. (Quartz 2020). மாடர்னா (Moderna) நிறுவனம் தடுப்பு மருந்து உருவாக்கத் தேவையான 250 கோடி டாலரை அமெரிக்க அரசாங்கமே ஏற்றுள்ளது. (USA Today 2020). சமீபத்தில் ஒப்புதல் பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து மானியங்களும், பத்து கோடி தடுப்பூசி டோஸ்களுக்கான முன்ஆணையும் (pre-orders) பெற்றுள்ளது. (ஜான்சன் & ஜான்சன் 2020).

அஸ்ட்ரா ஸெனகா (Astra Zeneca) தடுப்பு மருந்தானது வளரும் நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. (குறிப்பிட்ட அளவு இந்த தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறது). இத்தடுப்பு மருந்தானது முற்றிலும் பொது மக்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. துவக்கத்தில் அசலான விநியோக திட்டப்படி வெளிப்படையான அனுமதி அடிப்படையில், எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த மருந்தை தயாரிப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படும் என்றே இருந்தது.

இருப்பினும், பில் கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆக்ஸ் ஃபோர்டுக்கு 75 கோடி டாலர் நன்கொடை தந்தபின் இந்த அசல் திட்டம் முற்றிலுமாக மாறிப்போனது. தனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக் கழகத்தைப் பணிய வைத்து, ஒப்பந்தமும் போட்டுவிட்டது. இந்த ஒப்பந்தப்படி, ”அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனத்துடனான பிரத்யேக ஒப்பந்தப்படி, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே மருந்து தயாரிக்கும் முழுஉரிமை உள்ளது மற்றும் குறைந்த விலைக்கான எந்த உத்தரவாதமுமில்லை” என்பதை சேர்த்து புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (Jav Hancock 2020).

ஆக்ஸ்ஃபோர்டும் அஸ்ட்ராஸெனெகாவும் இணைந்து தடுப்பு மருந்து விற்பனையில் லாபம் பார்க்க மாட்டோம் என வாக்குறுதியளித்தாலும் அதன் ஒப்பந்த விவரங்கள் தெளிவாகவோ வெளிப்படையாகவோ இல்லை. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸ் ஃபோர்டு ராயல்டி எதையும் பெறாவிட்டாலும் காப்புரிமை காரணமாக தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆதாயம் அடைந்துள்ளது.

அதேநேரம், அஸ்ட்ராஸெனெகா வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பிய தடுப்பு மருந்துகளுக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயித்துள்ளது. சில ஏழை நாடுகள் அதிகப்படியான விலை கொடுத்துள்ளன. ஐரோப்பிய கூட்டமைப்பு ஒரு டோஸ் மருந்துக்கு 3.5 டாலர் விலை கொடுக்க, ஏழை நாடான பங்களாதேஷ் 4 டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவோ 5.25 டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. (Politico.2021). (விலை அதிகமுள்ள தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொடுத்துள்ளது).

இந்த விலையிலான வேறுபாடு அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் மட்டும்  நின்றுபோய்விடவில்லை. ஏனெனில் தடுப்பு மருந்துக்கான போட்டி, ஒப்பந்த பேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பு மருந்திற்கான விலை மார்ச் 1-ஆம் தேதிய விவரப்படி 2.19 டாலர் முதல் 44 டாலர் வரை வேறுபடுகிறது. (UNICEF, Covid Dashboard).

2020 அக்டோபரில் உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்தியாவும் தென்ஆப்ரிக்காவும் கொண்டு வந்த முன்மொழிவை ஏற்றிருந்தால் இவ்வாறு உற்பத்தியில் உள்ள கட்டுப்பாடு காரணமாக எழக்கூடிய தடுப்பு மருந்துப் பற்றாக்குறை, கொள்ளை, அதிக விலை, வேறுபட்ட விலை மற்றும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு போதுமான அளவில் கிடைக்காமை போன்றவற்றை சரி செய்திருக்கலாம். இம்முன்மொழிவானது கோவிட்-19 தொடர்பானப் பொருட்களுக்குக் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கு கோரியிருந்தது. (MSF, November 2020).

இதன் பொருள் என்னவென்றால், உலக வர்த்தகக் கழகத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையே இந்த பெருந்தொற்று காலம் முழுதும் கோவிட்-19 நோய்த் தொற்றோடு தொடர்புடைய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் உபகரணங்கள், மற்றும் பிற தொழில்நுட்பங்கள், மாஸ்க் மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்தின் மீதான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை வழங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். மேலும் இந்நாடுகளுக்கிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், உற்பத்தி, அதை அதிகரிப்பது, மற்றும் கோவிட்-19 கருவிகள் வழங்குவது  ஆகியவற்றில் எளிதாக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்கலாம்.

பெரும்பாலான வளரும் நாடுகள் இதனை ஆதரித்தாலும், வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக கழகத்தின் ’டிரிப்ஸ்’ (TRIPS) கவுன்சிலில் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைப் போட்டன. (Prabhalaet al 2020). இது ஆச்சரியப்படத்தக்கது. ஏனெனில் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால் தடுப்பூசி மருந்துகள் அதிகப்படியாகவும் விரைவாகவும் கிடைத்து வளர்ச்சியடைந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாயிருந்திருக்கும். அதிகளவு தடுப்பூசி உற்பத்தியானது மருந்து உற்பத்திச் செலவைக் குறைத்து, உலக மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் குறைவான விலையில் மருந்து கிடைக்கச் செய்திருக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தின் டிரிப்ஸ் (TRIPS) கவுன்சிலில் ஐந்து முறையும் இந்த முன்மொழிவு தடுக்கப்பட்டதற்கு பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பேரம் பேசி, தில்லு முல்லு செய்கின்ற மோசடி செயலே (லாபி) காரணம். (குறிப்பாக பில்கேட்ஸ் இந்த முன்மொழிவை ஆதரிக்க மறுத்தார்). (Mail & Guardian 2021).

படம் 2

(ஆங்கில மூல கட்டுரையில் உலக வரைபடம்-2 வடக்கு, தெற்கு பிளவைக் காட்டுகிறது). படம் 2 உலக வர்த்தகக் கழகத்திலான இந்த முன்மொழிவுக்கு உலக நாடுகள் எப்படி வினையாற்றி வடக்கு – தெற்கு என இரண்டாக பிளவுண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மிகப்பெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தாயகமான செல்வந்த நாடுகள் இந்த முன்மொழிவைத் தடுத்தன. இந்த நாடுகள் ஏற்கனவே தமது தேவைக்கும் கூடுதலான கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைக் கொண்டுள்ளன. (இம்மருந்துகளை தமது நாட்டுக்குள்ளேயே விரைந்து விநியோகிப்பதில் வெற்றிப் பெறாதப் பெரும்பாலான இந்நாடுகள் இந்த தடுப்பூசிகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றன என்பது வேறு விசயம்).

சிலர் இந்த முன்மொழிவே தேவையில்லாதது என வாதாடுகின்றனர். ஏனெனில் உலக வர்த்தகக் கழகத்தின் ’டிரிப்ஸ்’ குறித்தான ஒப்பந்தத்தில் கட்டாய உரிமம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். ‘டிரிப்ஸ்’ மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய 2001 டோஹா பிரகடனத்திலேயே பொதுச் சுகாதார அவசரக் காலங்களில் காப்புரிமைப் பெற்றவரிடமிருந்து ஒப்புதல் பெறாமலேயே மூன்றாம் நபருக்குக் காப்புரிமைப் பெற்ற பொருளை உற்பத்தி செய்ய உரிமம் வழங்கும் அதிகாரம் அரசாங்கங்களுக்கு உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது (பார்க்க WTO FAQs) எனவும், இது காப்புரிமை பெற்றவரின் பிரத்யேக உரிமையை மீற அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது எனவும், இதனால் முற்றுரிமையைத் தடுத்து உற்பத்தியை செய்யவும் மற்றும் அதிக விலை நிர்ணயிப்பதை தடுக்கவும் வழிவகை செய்கிறது எனவும் கூறுகின்றனர்.

கட்டாய உரிமம் அளிப்பதற்கான நிபந்தனையான பொதுச் சுகாதார நெருக்கடியை இப்பெருந்தொற்றுக் கொண்டிருந்தது. சிலி, இஸ்ரேல் போன்ற நாடுகள் அத்தகையக் கட்டாய உரிமத்தை இப்பெருந்தொற்று உருவானப் போதே வழங்கி தீர்மானம் இயற்றின. இருப்பினும் தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பாளர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்க வேண்டியக் கட்டாயமில்லாததால் வளரும் நாடுகள் கட்டாய உரிமம் வழங்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது கடினமாகும்.

காப்புரிமை பெற்றவர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்கினால் மட்டுமே மேற்படி கட்டாய உரிமம் முறையை செயல்படுத்தப்பட முடியும். கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்தவரை, பெரிய மருந்து நிறுவனங்கள் செல்வந்த நாடுகளுக்கு, இந்த நாடுகள் குறந்த அளவு உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதில் போட்டி போடுகின்றன, விநியோகம் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகின்றன. மறுபுறம், குறைவான சந்தை அல்லது மானிய விலையில் தர வேண்டிய நாடுகளைப் பற்றி கவலைப்படவே இல்லை. உலக அளவிலான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமையை இரத்து செய்திருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கும்.

எனவே, அத்தியாவசியமான பொதுச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தற்காலிகமாக இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என உலகலாவிய ஓர் இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான தடுப்பு மருந்துகள் எவ்வளவு காலம் நோயைத் தடுக்கின்ற ஆற்றல் கொண்டிருக்கும் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை என்பதால் இந்த தற்காலிகத் தடைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை இருக்கலாம். இந்த தடைக் காலங்கள் தடுப்பூசிகளுக்கு மட்டும் என்றில்லாமல் பரிசோதனைகள், மருத்துவம், மற்றும் பெருந்தொற்று சம்பந்தமானப் பொருட்களுக்கும் சில ஆண்டுகளுக்கு தேவையாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் ஆதரவளிக்கப்பட்ட, கோஸ்டாரிகா நாட்டால் முன்மொழியப்பட்ட மற்றொரு வழிமுறை “தன்னார்வமாக பொதுப் பயன்பாட்டிற்கு ஒன்றிணைவது” (Voluntary pooling) ஆகும். இதன்படி கோவிட்-19 தொழில்நுட்பத்தைப் பெற ஒன்றிணைவது (Covid-19 Technology Acess pool(CTAP)) என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இது அனைத்து நாடுகளுக்கும் சோதனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான உரிமைகளின் தொகுப்பை உருவாக்குகிறது, நியாயமான மற்றும் எளிமையான விதிமுறைகளில் இலவசமாக அனுமதி பெறுவது அல்லது உரிமம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால், இதுவரை 40 வளரும் நாடுகள் மட்டுமே இதில் இணைந்துள்ளன. வளர்ந்த நாடுகள் எதுவும் இதில் இணையவில்லை. சர்வதேச ஆதரவு இல்லாததால், சி.டி.ஏ.பி உண்மையில் இதுவரை பயனுள்ளதாக இல்லை – ஆனால் அது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்கதாக மாறலாம், தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு அப்பால் எதிர்காலத்தில் சுகாதார அவசரநிலைகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

ஒழுங்குமுறை ஒப்புதலும் பொதுமக்களின் நம்பிக்கையும் !

மற்ற இடங்களில் உருவாக்கப்படும் மற்ற தடுப்பூசி மருந்துகளும் இப்பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் தற்போதைய தடுப்பூசிகள் பற்றாக்குறையைக் குறைக்கவும் சாத்தியம் உள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி மற்றும் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா, கியூபா மற்றும் பிற இடங்களில் மற்ற தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.

தேவையான சோதனைகள் மற்றும் பிற செயல்முறைகள் இல்லாமல் போதுமான சோதனை மற்றும் அவசர ஒழுங்குமுறை ஒப்புதல் பற்றி சிலருக்கு கவலைகள் உள்ளன. ஆனால், இந்த தடுப்பூசி மருந்துகள், மருத்துவ சோதனைகள் மூலம் பாதுகாப்பானதாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என சான்றளிக்கப்படும் போது கூட, அம்மருந்துகள் உலகலாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மேலும் தடைகள் உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் செயல்முறைப் பணக்கார நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஆதரவாக பெரிதும் சாய்ந்திருப்பதாக பெரும்பாலும் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரக் கட்டுப்பாட்டிற்காக நம்பும் “கடுமையான ஒழுங்குமுறை அதிகாரிகளின்” பட்டியலைக் கொண்டுள்ளது. அவை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் உள்ள வளர்ந்த நாடுகளில் இருந்து மட்டுமே உள்ளன.

உலகின் மற்ற பகுதிகளுக்கு, தடுப்பூசி (மற்றும் பிற மருந்து) தயாரிப்பு நிறுவனங்கள் ‘முன்தகுதி’ மூலம் செல்ல வேண்டும் – மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட செயல்முறை. இது மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கும் நேரத்தைப் பெரிதும் நீண்டதாக ஆக்குகிறது.

உதாரணமாக, உலக சுகாதார நிறுவனம் 2020 இறுதியில் ஃபைசர்-பியோஎன்டெக் தடுப்பூசியை அங்கீகரித்தது. இவற்றின் பயன்பாடு இரண்டு மாதங்களுக்கும் குறைவானது. ஏனென்றால், உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய மருந்துகள் முகமையுடன் (EMA) ஒத்துழைக்கிறது. இருப்பினும், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு முன்பே, ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்த ரஷ்ய (ஸ்புட்னிக்) மற்றும் சீன (சினோவாக் மற்றும் சினோபார்ம்) தடுப்பூசிகள் இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. (பிரபாலா மற்றும் லிங், 2021). இந்த மூன்று நிறுவனங்களும் ஒவ்வொன்றும் 2021-ல் நூறு கோடி தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும் வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதற்கும் இந்நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்த பெருந்தொற்று காலத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் வழக்கமான ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்த்தப்பட்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி மருந்து எதுவும் வெளிப்படைத் தன்மையுடன் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் கடுமை குறைவானதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கருதினாலும், அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் சமமான நிலையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் அது இன்னும் வேலை செய்ய முடியும்.

ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை மறுக்கும் உலகளாவிய பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் அத்தகைய தடுப்பூசிகள் சில இணக்கமான தரங்களைப் பூர்த்தி செய்யும்போது உலகளாவிய விநியோகத்தை செயல்படுத்த ஒரு செயலூக்கமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

இது செய்யப்பட்டால், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரிய மருந்து நிறுவனங்களின் கொடூரப்பிடியை மீறுவது சாத்தியமாகலாம். இப்பெரிய தனியார் மருந்து நிறுவனங்கள் ஒரு சுகாதார நெருக்கடி மற்றும் பரந்தப் பொருளாதாரத் துயரத்தின் மத்தியில் இலாப வெறியுடன் செயல்படுகின்றன. சில நாடுகள் ஏற்கனவே மற்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளன மற்றும் இந்த அணுகல் மூலம் பயனடைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 2021-இன் பிற்பகுதியில் சிலி, சீனாவின் சினோவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்து, அதன் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட முடிந்தது. இந்த தடுப்பூசியே பொலிவியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கியிலும் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், ஈராக், செர்பியா, மொராக்கோ, ஹங்கேரி மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து விநியோகித்ததற்கான முக்கிய எடுத்துக்காட்டாக இந்தியா இருந்திருக்க வேண்டும். இது பல முக்கிய தடுப்பூசி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, பல்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்திய நீண்ட மற்றும் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளது, சமீபகாலம் வரை, தடுப்பூசிகள் மீது அதிக அளவிலான பொது நம்பிக்கை இருந்தது.

துரதிருஷ்டவசமாக, தேவையான மருத்துவ சோதனைகள் முடிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை (பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின்) முதலில் ஊக்குவிக்கவும் பின்னர் தள்ளவும் அரசாங்கம் மேற்கொண்ட உற்சாகமான முயற்சிகள் எதிர்மறையாகப் போனது. இது இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொது மக்களின் நம்பிக்கையைக் குறைத்துவிட்டது. இந்தியாவில் மக்கள் – சுகாதார ஊழியர்கள் உட்பட – கொவாக்சின் தடுப்பூசி போட மறுப்பதாக பல அறிக்கைகள் வந்துள்ளன.

இது துரதிருஷ்டவசமானது, ஒருமுறை நம்பிக்கை இழந்தவுடன், அதை சரிசெய்யவும், மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் நீண்டகாலம் ஆகும். இப்போதும் எதிர்காலத்திலும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஆற்றலில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 17 வளர்ந்த நாடுகளில் 19,000 பேரிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட யூகோவ் கருத்துக் கணிப்பில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள்,  மிகக் கீழான இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா அதன் முந்தைய தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் பின்தங்கியுள்ளது முக்கிய பிரச்சினையாகும்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

நியாயமாகச் சொல்வதானால், வளர்ந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி விநியோகத்தில் மோசமான செயல்திறனைக் காட்டியுள்ளன. செல்வந்த நாடுகள் உலகளாவிய விநியோகத்தின் தேவையான பங்குகளில் பலமடங்குகளைப் பெற முயன்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, தடுப்பூசிகளின் உள்நாட்டு விநியோகம் பெரும்பாலும் உலகளாவிய விநியோகத்தைப் பிரதிபலிக்கிறது: சமமற்றது, அநீதியானது மற்றும் திறமையற்றது.

இந்த அணுகுமுறையானது இப்பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் காலதாமதத்தையும் மற்றும் வரவிருக்கும் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்வதில் மனித குலத்தின் திறன் பற்றியும் உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதில் உள்ள அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.


கட்டுரையாளர் : ஜயதி கோஷ்
(ஜே.என்.யூ.-வில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர்)
தமிழாக்கம் : கணியன்
நன்றி : The India Forum

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க