வினய் ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவானது அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில்,  லக்னோவின் எந்த மருத்துவமனையும் தன்னுடைய தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை என ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி அளவில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழே சென்றால் ஆபத்து நிலை என கொள்ளப்படும். ஸ்ரீவத்சவா தன்னுடைய ஆக்சிஜன் அளவு 32 என சொன்னார்.

65 வயதான நிறுவனம் சாரா பத்திரிகையாளரான ஸ்ரீவத்சாவின் பதிவு ட்விட்டரில் வைரலான பின், உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், அடுத்த நாள் மதியம் மேலதிக தகவல் வேண்டும் எனக் கேட்டார். அப்போது ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவு 31-ஆக குறைந்தது.

படிக்க :
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

அதே நாளில் மாலை 4.20 அளவில் அவருடைய மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என ட்விட்டரில் பதிவு செய்து, ஆம்புலன்சுக்கு காத்திருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் எதையும் பெறவில்லை. நான் அனைத்து எண்களுக்கும் அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டேன். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லை” என்கிறார் அவர்.

அவர்களுடைய வீட்டிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையான சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனை ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைக்காக காத்திருக்கிறது. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக மருத்துவமனைகளிலேயே நிறுவப்பட 8 மாத கால கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 150 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை அமைக்க டெண்டர் கோரியிருந்தது. அதில் மேற்கண்ட மருத்துவமனையும் ஒன்று.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படவில்லை. சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால் லக்னோ வாசியான ஸ்ரீவத்சவா போன்றோர் கோவிட்-19னில் இருந்து பிழைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தில் தற்போது 44,485 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

“என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார் ஹர்சித். அவர் இன்னமும் தனது தந்தையின் கோவிட்-19 அறிக்கைக்காக காத்திருக்கிறார். “இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு” என்கிறார் அவர்.

1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத்தின் நவ்சாரியில் மற்றொரு மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் ஆலை நிறுவப்படாதக் காரணத்தால் ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளைக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சேர்க்க மறுத்து வருகிறது.

“இங்கு முழுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது” என்கிறார் 175 படுக்கைகள் கொண்ட மாவட்ட பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே.  அரசின் கணக்குப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஆக உள்ள நிலையில், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கோவிட் 19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் ஆலை மட்டும் சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால், குஜராத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூரத்திலிருந்தும் கூட நோயாளிகளை அனுமதித்திருக்கலாம். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகள் துபே-ஐ அழைத்தால் “இங்கே அனுப்ப வேண்டாம்” என சொல்வதாக தெரிவிக்கிறார்.

000

ரூ.200 கோடி மதிப்பிலான டெண்டரை கோர 8 மாதங்கள் !

2020, மார்ச் 20-ஆம் தேதி அன்று இந்தியா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை, பேரழிவு என அறிவித்தது.  பத்து நாட்கள் கழித்து, கோடிக்கணக்கான மக்கள் உலகின் மிக மோசமான பொது முடக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அரசாங்கம், நாட்டின் சுகாதாரத் திறனை விரிவாக்க நேரம் தேவை எனக் கூறிக் கொண்டது.

பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே, வைரசுக்கு எதிரானப் போரில் ஆக்சிஜன் என்பது மிக முக்கியமான பொருள் என தெளிவாகத் தெரிந்தது. ஆனபோதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் அமைப்பதற்கான ஏலத்துக்கு அழைக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது.

அக்டோபர் 21-ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் சொசைட்டி, நாடு முழுவதும் 150 மாவட்ட மருத்துவமனைகளில் பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (Pressure Swing Adsorption – PSA) ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுத்தது.

PSA தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள ஒரு கலவையிலிருந்து வாயுக்களைப் பிரித்து, குழாய் வழியாக செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை மருத்துவமனைப் படுக்கைகளுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மற்ற மூலங்களிலிருந்து அழுத்தப்பட்ட திரவ ஆக்சிஜனை மருத்துவமனைகள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த டெண்டர் செயல்முறைத் தொடங்கப்படாததற்கானக் காரணம் நிதிப் பற்றாக்குறை எனத் தெரிகிறது. 162 ஆலைகள் நிறுவ (12 ஆலைகள் பின்னர் சேர்க்கப்பட்டவை) வெறும் ரூ.201.58 கோடி போதுமானது. இந்த பணம் பி.எம்.கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. 2020, மார்ச் 27-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நான்கு நாட்களில் ரூ.3,000 கோடியை நன்கொடையாகப் பெற்றது.

இப்போது, கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பிஎம்-கேர் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என மோடி அரசு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் கூறியது. 2020-ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து, அவை அனைத்தும் “100 சதவீதம் முழுமையடைந்த ஆலைகளாக விரைவாக முடிப்பதற்காக உன்னிப்பாகப் பரிசீலிக்கப் படுகின்றன” எனக் கூறியது அந்த அறிக்கை.

ஸ்காரல் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில், ஏன் தாமதமாகிறது என்பதற்கான விடையாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 60 மருத்துவமனைகளை அவர்கள் அழைத்துப் பேசிய நிலையில், ஆக்சிஜன் ஆலைகள் வரும் என எதிர் பார்ப்பது தெரிந்தது. நிறுவப்பட்ட 11 யூனிட்டுகளில் 5 மட்டும் செயல்படும் நிலையில் உள்ளன.

162 ஆக்சிஜன் ஆலைகளில் 33 நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல், 2021 இறுதிக்குள் 59 நிறுவப்படும் எனவும் மே மாதத்துக்குள் 80 நிறுவப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி பார்த்தால் 172 ஆலைகள் வருகிறது. இந்தக் கணக்கையும் கூட அமைச்சகம் சரியாக தெரிவிக்கவில்லை என்கிறது ஸ்க்ரால் இணையதளம்.

இந்தியாவில் தற்போது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் அனைத்து தொழில்துறை ஆக்சிஜன் உற்பத்தியையும் மருத்துவ நோக்கங்களுக்காகத் திருப்பி விடுகின்றன. 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஆக்சிஜன் ஆலைகள் மாதத்திற்கு 4,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.  தற்போது இரண்டாவது அலையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு கூடுதல் திறனும் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“கோவிட்-19  இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் ஆலைகள் அங்கு இருக்க வேண்டும்”  என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனர் டி.சுந்தரராமன் கூறுகிறார்.

அவரைப் போன்ற பொது சுகாதார வல்லுநர்கள், பெருந்தொற்று இந்தியா தனது சுகாதார அமைப்புகளில் வெளிப்படையான இடைவெளிகளை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பு என வாதிட்டனர். அவற்றில் ஒன்று லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் மாவட்ட மருத்துவமனைகளில் குழாய் பதிக்கப்பட்ட ஆக்சிஜன் இல்லாதது.

“ஆக்சிஜன் இல்லாததால் துன்பத்துக்கு பின் துன்பம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுந்தரராமன். ஆக்சிஜன் இல்லாததால் பாம்பு கடித்தல், மூளையழற்சி (encephalitis), சாலை விபத்துக்கள் போன்ற இறப்புகளும் இதில் அடங்கும்.

மருத்துவமனையிலேயே நிறுவப்பட்ட ஆலைகள் மூலம் குழாய் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் இதுபோன்ற லட்சக்கணக்கான இறப்புகளைத் தவிர்க்க முடியும், இது சமீபத்திய ஏலங்களில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு சிறிய செலவில் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெறும் ரூ.200 கோடி மட்டுமே செலவு பிடிக்கும்!

ஆனால், இப்போது கோவிட்-19னும் இந்த மரண பட்டியலில் சேர்க்கிறது.

000

மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தகக் கட்டணங்களால் அதிகரிக்கும் தாமதங்கள்

ஒரு பெருந்தொற்றின் போது உள்கட்டமைப்பு போர்க்காலத்தில் அதிகரிக்கப்படும்போது ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்படும் தாமதம் சொல்ல வருவது என்ன ?

அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியபோது, தாமதங்களுக்கு ஒப்பந்தங்களை வென்ற நிறுவனங்களே காரணம் என பெரும்பாலான அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான டெண்டர் ஆவணத்தில், மருத்துவமனையில் உள்ள மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆலையின் திறன் ஆகியவற்றுடன் மாவட்ட மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில், 14 மாவட்டங்களில் மாறுபட்ட திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஆலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் மராட்டியத்துக்கு ஆலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு நிமிடத்திற்கு 7,700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எட்டு ஆலைகள் ஒதுக்கப்பட்டன.

உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில், 14 மருத்துவமனைகளில் ஒன்று கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாக தெரிவிக்கவில்லை.

ஒப்பந்த நிறுவனங்கள், பல காரணங்களைக் காட்டி ஆலைகள் நிறுவதை தாமதித்து வருகின்றன. நிறுவனங்களை கண்காணித்துப் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க அரசாங்க தரப்பில் எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை என்பது ஸ்க்ரால் இணையதளத்தில் விசாரணையில் தெரிய வருகிறது. வெறுமனே கண் துடைப்புக்காக ஏலம் விட்டு, ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.

000

பற்றாக்குறை மரண சுழலுக்கு வழி வகுக்கிறது

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என கூறுகிறார்கள். ஏனெனில், வைரஸின் புதிய வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தியதால் அல்ல (இது குறித்து இன்னும் தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை) ஆனால், அதிக அளவு நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் நோயாளிகளுக்கு கடினமாக இருக்கும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாமல் செல்ல வேண்டியிருக்கும்.

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அதாவது எந்த நோயாளிக்கு ஆக்சிஜன் தருவது என முடிவெடுக்க வேண்டிய நிலையை அவர்கள் கூறுகிறார்கள்.  அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள CU ஷா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் ரூபம் குப்தா கூறுகையில், “கடந்த ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால், இந்த ஆண்டு அலை திடீரென உயர்ந்துள்ளது, எனவே இந்த நேரத்தில் அப்போதைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது” என்கிறார்.

இந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 200 கோவிட்-19 நோயாளிகள் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை என குப்தா கூறினார். 100 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட இரண்டு டிராலிகள்தான் இந்த மருத்துவமனையை காத்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதாமை ஏற்படும். இவற்றை ஈடுகட்டித்தான் நோயாளிகளை காக்க வேண்டியுள்ளது என்கிறார் மருத்துவர்.

000

வெற்று சிலிண்டர்களில் இயங்கும் மருத்துவமனைகள்

அதிக எண்ணிக்கையிலான சிக்கலான நோயாளிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் போதுமானதாக இல்லை என்றாலும், அதிக தேவை உள்ள காலங்களில் அவை ஒரு பயனுள்ள கருவியாக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் வணிக ஆக்சிஜனின் கடுமையானப் பற்றாக்குறை இருக்கும் போது ஆக்சிஜன் ஆலைகளின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிப்பாளர்களிடம் பேசிய போது, கடந்த ஆண்டு கோவிட்-19 முதல் அலைகளின் போது இருந்ததை விட இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

பலர் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போதும், தட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது. அதிக அளவு தேவையும் உள்ளதாக தனியார் ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 15 நாட்களில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் ஆக்சிஜன் நொடிப் பொழுதில் விற்று தீர்ந்து விடுவதாக ஒரு உற்பத்தியாளர் கூறுகிறார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி இருந்தால், நிலைமை எப்படி இருக்கும்? தேவை அந்த அளவுக்கு உள்ளது” என்கிறார் அவர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

எந்தவித தணிக்கைக்கும் உட்படாமல் தனிப்பட்ட வகையில் பெருந்தொற்றின் போது உருவாக்கப்பட்டு இயக்கப்படும் பி.எம்.கேர் நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. அதில் ரூ.200 கோடி என்பது வெறும் துளி மட்டுமே. ஓராண்டு காலத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்திருந்தால், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவி மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்டுவதில் காட்டியிருந்த ஆர்வத்தில் ஒரு பகுதியைக் காட்டியிருந்தால் கூட குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசத்தில் மரண ஓலங்களின் எண்ணிக்கை குறைத்திருக்க முடியும். ஆனால், மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் இந்துத்துவ பாசிச அரசு பிணங்கள் எரிவதைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருக்கிறது.


கட்டுரை : விஜய்தா லால்வானி & அருணாப் சாய்கா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா
நன்றி : Scroll.in

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க