ந்தியாவின் மாடல் மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள் தங்களது அரசாங்கம் 25,000 ரெம்டெசிவர் வைரஸ் தடுப்பு மருந்து குப்பிகளை உ.பி-க்கு அனுப்பியது குறித்த செய்தியை கடந்த வியாழன் (15.04-2021) அன்று செய்தித்தாளில் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா நெருக்கடி அந்த அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் குறைத்துக் காட்டப்படுவதை, கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்  ரெம்டெசிவிர் மருந்தைப் பெற 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சுட்டிக் காட்டுகிறது.

உதாரணமாக, வியாழன் (15-04-2021) அன்று இரவு, குஜராத்தில் 8,112 பேருக்கு கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்டது. இது வரையிலான தினசரி அளவில் இது உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் குஜராத்தின் நடப்பு கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 44,298 ஆனது. அந்த 24 மணி நேரத்தில்  81 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

படிக்க :
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் குஜராத்தின் அண்டை மாநிலமான மராட்டியத்தில் புதிதாக 61,695 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 349 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தது.

புதன் (14-04-2021) அன்று அஹமதாபாத் மருத்துவக் கழகம், மருத்துவமனைகளைத் தவிர மற்ற துறைகளுக்கு ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த கடிதமானது கொரோனா நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் பார்க்க மருந்துகள், ஊசிகள், ஆக்சிஜன் உருளைகள் போன்றவை கிடைக்காமல் மருத்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், குஜராத் அரசு தொடந்து இந்த நெருக்கடியை குறைத்துக் காட்டுகிறது.   குஜராத் மக்கள், மருத்துவமனைகளில் போதுமானப் படுக்கைகள் இல்லாமல், போதிய ஆம்புலன்ஸ் இல்லாமல், எரியூட்டும் இடங்கள் நிரம்பி வழியும் நிலைமை இருக்கையில், இதனை புறக்கணித்துவிட்டு, மருத்துவமனைப் படுக்கைகள் முறையாகக் கிடைக்கின்றன என்ற தனது கூற்றுக்கு ஆதரவளிக்கும் விதமாக விவரங்களை மட்டும் குஜராத அரசு கொடுக்கிறது.

அனேக மக்களுக்கு, இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு குஜராத் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் குழப்பமானதாகவே தெரிகிறது. ஒரு புறம், முகக் கவச விதிமுறையை மீறிதாக ரூ.1000 அபராதம் விதிக்கிறது. மறுபுறம், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க எதிர் வரும் மோர்வா ஹடஃப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக கடந்த புதன்கிழமை நடந்தப் பிரமாண்டமான இரு சக்கர வாகன பேரணியில் யாரும் முகக் கவசம் அணியவில்லை.

“எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் பி.ஜே.பி-க்கு கொரோனா கிடையாது’’ என்று தி வயர் இணைய தளத்திடம் கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாரத் சோலங்கி.

குற்றமும் கொரோனா வைரசும் :

கடந்த 96 மணி நேரத்தில் (ஏப்ரல் 16-க்கு முன்) பெருந்தொற்றை மேற்கண்டவாறு கையாளுவதைச் சுற்றி நிகழும் இந்தக் குழப்பமானநிலை, மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 4 புகார்கள் இது தொடர்பாக போலீசுக்கு வந்துள்ளன.

அகமதாபாத்தில், ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிணவறைக்கு கொண்டுசென்ற நேரத்தில், இறந்தவரின் உடலிலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையலை திருடியதற்காக ஒப்பந்த ஊழியர் ஒருவரை போலீசு கைது செய்துள்ளது. குஜராத்தின் இருவேறு இடங்களில் நடந்த இருவேறு வழக்குகளில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றை ரூ.12,000-க்கு விற்றுக் கொண்டிருந்த இரு கள்ளச் சந்தைகாரர்களை போலீசு கைது செய்துள்ளது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றின் அரசு விலை ரூ.800 அல்லது ஆய்வகத்தில் இருந்து நேரடியாகப் பெற்றால் ரூ.690 மட்டுமே. அந்த கள்ளச் சந்தை  பேர்வழிகள் வெளிப்படையாக போலீசிடம்  இதுவரை தாங்கள் 50 குப்பிகளை விற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இன்னும் பல மருந்துக் குப்பிகளை விற்றிருக்கக் கூடும் என்று போலீசு நம்புகிறது.

இன்னொரு கள்ளச் சந்தை சம்பவத்தில், 18 டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளுடன் இரண்டு நபர்களை வல்சாத் என்ற இடத்தில் குஜராத் சிறப்பு போலீசுக் குழு கைது செய்தது. அவர்கள் அம்மருந்துக் குப்பி ஒன்றை ரூ.25,000 வீதம் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையில் ராஜ்கோட்டில் ஒரு நோயாளிக்கு ரெம்டெசிவர் கொடுப்பதற்கு ரூ.45,000 வாங்கிக் கொண்டு அதன் பிறகும் கூட அம்மருந்தை அந்த நோயாளிக்குப் போடாமல் இருந்ததற்காக ஒரு மருத்துவமனை ஊழியரின் பெயரும் நகராட்சி வார்டு ஒன்றின் பா.ஜ.க தலைவர் ஒருவரின் பெயரும் போலீசிடம் உள்ள புகார் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. ராஜ்கோட் நகரம் முதலமைச்சர் விஜய் ரூபானியின் சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் இந்திரனில் ராஜ்யகுரு “இது எந்த விழுமியத்தையும் கடைபிடிக்காத மோசமானக் காலகட்டம்” என்கிறார். இவர் ராஜ்கோட் தொகுதியில் விஜய் ரூபானியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜ்யகுரு தொலைபேசியில் பேசுகையில், “குஜராத் பரோபகாரத்திற்கு பெயர் போன மாநிலம். இன்று அந்த பிம்பம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். உறவினர்கள் ரெம்டெசிவிரும், டோசிலிஜூனப்பையும் வெளியே வாங்கி வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். ஆனால், உறவினர்கள் உடனில்லாத அனேக நோயாளிகள் ராஜ்கோட் நோயாளியை போன்று அதே மாதிரியான வழியில், மோசடியான மருத்துமனைகளாலும் மருத்துவர்களாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மிக மிக கவலைக்குரிய விசயம்.’’ என்று கூறினார்.

ராஜ்யகுரு தி வயர் இணையதளத்திடம் பேசிய பின்னர், அவர் கோவிட்19 சிகிச்சைக்காக ராஜ்கோட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

வேறுசில வடிவங்களிலான கொரோனா ஊழல்களும் கூட நடைபெற்று வருகிறது. இந்த வாரம், 3,000-கும் மேற்பட்ட RT-PCR சோதனைகள் மேற்கொண்டிருந்த அகமதாபாத்தின் கொடசார் அருகில் உள்ள ஒரு சோதனையகம், அங்கே கொரோனாவுக்கு சோதனை எடுத்துக் கொண்டவர்களின் புகாரின் பேரில் அகமதாபாத் மாநகராட்சி கழகத்தால் சோதனையிடப்பட்டது.

அச்சோதனையின் மூலம் அந்த சோதனையகத்தில் ரேபிட் ஆன்டிஜன் சோதனை செய்வதற்கான எவ்வித கருவிகளோ கிட்டுகளோ இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், அந்த சோதனையகங்கள் மக்களை முட்டாளாக்கி பொய்யான அறிக்கைகளைக் கொடுத்து வந்துள்ளதுத் தெரிய வந்துள்ளது.

குஜராத்திலிருந்து வந்து சேர்ந்த ரெம்டெசிவிர் மருந்தை லக்னோ ஏர்போர்ட்டில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி

மக்கள் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்க தங்களது நகைகளையும் வீட்டையும் விற்றுக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், குஜராத் அரசு 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பியதாக வந்த செய்திப் பேரபாயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த செய்தி அறிக்கையை ஆதாரமற்றது, கற்பனையானது என்று குஜராத் அரசு மறுத்தாலும், லக்னோவில் செயல்படும் பாரத் சமாச்சர் என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர், பிரஜேஷ் மிஸ்ரா குஜராத்திலிருந்து 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் உ.பி அரசு கடந்த புதன்கிழமை அன்று தருவித்துள்ளதால் உ.பி மக்களுக்கு ரெம்டெசிவர் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறினார்.

எனினும், குஜராத் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி கம்பெனியின் செய்தி தொடர்பாளரும் தி வயர் இணையதளத்திடம் இது குறித்து பேச கிடைக்கவில்லை.

இதற்கிடையில் புதன்கிழமை (14-03-2021) அன்று,  கிட்டத்தட்ட எல்லா உயர் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒன்று கூடி மாநில அரசு கொரோனா நெருக்கடிக்கு மாநில அரசு சார்பாக பதில் கொடுக்கும் முகமாக ஒரு அறிக்கையை கொடுத்தனர். வியாழன் அன்று அந்த அறிக்கை உயர்நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு, கொரோனாவை கையாள்வதில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு பதில் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்தது. உயர்நீதிமன்ற வாதத்தின் போது குஜராத் அரசு வழக்கறிஞர் கமல் திரிவேதி ஏப்ரல் 12, 2021 வரை 53 சதவீதப் படுக்கை வசதி மட்டுமே உள்ளது என்று அறிக்கை சமர்பித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு முக்கிய காரணி

ஆச்சரியப்பட வைக்கும் வகையில் குஜராத்தில் திடீர் கோவிட்-19 உயர்வுக்கு காரணமாக நம்பப் படுவது என்னவென்றால் கடந்த மாதம் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடந்த  இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிதான். கிட்டத்தட்ட 75,000  பேர் கலந்து கொண்டதில் அனேகமாகப் பெரும்பாலானோர் முகக்கவசமின்றிக் காணப்பட்டனர். அகமதாபாத் IIM–ல் மட்டுமே 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காந்தி நகரில் உள்ள IIT-யில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பாரத் சோலங்கி,  இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கொள்ளைக்காகவே குஜராத் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஜெய் ஷா, பார்வையாளர்களைக் கொண்டு விளையாட்டை நடத்த ஆர்வமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

“குஜராத் அரசு முதுகெலும்பு அற்றது. அது கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள் என்று ஜெய் ஷாவிடம் சொல்லாது” என்று சொலங்கி தி வயர் இணையதளத்திடம் கூறினார். “இரு விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு, பெரிய அளவிலான மக்களின் கூக்குரலுக்குப் பின்னர்தான் விளையாட்டு நிகழ்ச்சியை ஸ்டேடியத்திலிருந்து பார்க்கப் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டது நிகழ்ந்தது.”

பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் கூடவோ குறையவோ கோவிட்-19 குறித்து அரசின் கருத்துடன் ஒத்துபோகிறது. அதே நேரத்தில் குஜராத்தி மொழியில் வெளிவரும் பத்திரிகை குஜராத் அரசு கோவிட்-19 இரண்டாம் அலையை கையாளுவது குறித்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.

திவ்ய பாஸ்கர் என்ற தினசரி பத்திரிகையின் ஆசிரியர் தேவேந்திர பட்நகர், குஜராத் மாநில பாஜக செயலர் சி.ஆர் பாட்டில்-ன் தொலைப்பேசி எண்ணைப் பிரசுரித்து அவரிடம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் குறித்து தொடர்பு கொண்டு கேட்குமாறு கேட்டுக் கொண்ட போது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைப் பெற மக்கள் இரவு பகலாக கால்கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் சி.ஆர்.பாட்டில் 5000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை பெற்று அவற்றை நவ்சரியில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்திலிருந்து வினியோகம் செய்தார் என்ற செய்தி ஏப்ரல் 12 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஆனால், பி.ஜே.பி குஜராத்தில் பெருந்தொற்று பாதிப்பில் பாகுபாடுக் கட்டுகிறது, பெருந்தொற்றை வைத்து அரசியல் செய்கிறது என்று விமர்சனம் வந்த ஒருநாளுக்கு பிறகு பாட்டிலினுடைய ‘முன்முயற்சி’ கைவிடப்பட வேண்டியதாகிவிட்டது. அவை ரெம்டெசிவர் மருந்து தகுதியான மருந்தாளுனர்களால் மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது என்ற உண்மை நிலையிலிருந்து எடுத்தாளப்பட்டது.

அகமதாபாத்தின் சைடஸ் கடிலா நிறுவனம் என்பது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைத் தயாரிக்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் இந்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யக் கூடிய சிப்லா, சைடஸ் கடிலா, ஹெடெரோ, டாக்டர் ரெட்டி மற்றும் பல நிறுவனங்கள் என எல்லா உற்பத்தியாளர்களுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

படிக்க :
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

♦ கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

இந்திய, பார்மா கம்பெனிகளுக்கும் அமெரிக்காவின் கிலீட் அறிவியல் நிறுவனத்துக்கும் இடையிலான தன்னார்வ உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து டோஸ்கள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கக் கூற்றுப்படி, இந்தியா ஒரு மாதத்தில் 38.80 லட்சம் ரெம்டெசிவர் மருந்து யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பெருந்தொற்று தீவிரமாகிற இச்சூழலில் மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

குஜராத்தில் காங்கிரசும் பி.ஜே.பி-யும் கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவரும் நிலையில் அம்மாநிலத்தின் மக்கள் துயர நிலையில் உள்ளனர். வியாழன் அன்று, தினேஷ் பட்டேல் (அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தியாவிலே மிகப்பெரிய பொது மருத்துவமனையான அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட இருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு மருத்துவமனை வாயிலுக்கு முன்பு ஒன்றரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருந்த 35 ஆம்புலன்ஸ்களில் ஒரு ஆம்புலன்சில் பட்டேல் இருந்தார்.

“மக்கள் ஆம்புலன்சுகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்” என்கிறார், மருத்துவர் ஜே.வி மோடி. “ஆனால், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மக்களை எங்களால் அனுமதிக்க முடியாது” என்கிறார் அவர்.

இதற்கிடையில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் இடுகாடுகளும், எரியூட்டு மையங்களும்  24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அங்கும் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்கும் நிலை கண்கூடாக இருக்கையில், குஜராத் அரசோ கடந்த வியாழன் அன்று சூரத் மற்றும் அகமதாபாத்தில் 24 மரணங்கள் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

பிரபலமான குஜராத் பத்திரிகையான சித்திரலேகா என்ற சூரத் பதிப்பின் வாரப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஃபாய்சல் பகிலி, “சூரத் நிர்வாகம்  பெருகிவரும் கொரோனாப் பரவலைத் தடுக்க தயாராக இல்லை என்றும் மேலும் இதை எதிர்கொள்ள எவ்வித செயல்திட்டமும் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சுடுகாட்டில் கடுமையான வேலைப்பளுவில் பணியாற்றும் ஊழியர்கள் எரியூட்டுவதற்கு இதுவரை வழக்கமாக பயன்படுத்தி வந்த நெய்யிற்குப் பதிலாக பிணங்களை வேகமாக எரியூட்ட இப்போது மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

சுனித் கமி என்ற சூரத்வாசி, “தன் மாமா கோவிட்டால் இறந்தபோது, சுடுகாட்டில் 12 மணி நேரம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியிருந்தது” என்றார். “ஆகவே, நாங்கள் அருகாமை நகரமான பர்டோலிக்கு உடலை இறுதி சடங்கிற்காக கொண்டு வந்தோம்” என்றார் சுனித் கமி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போது வழக்கறிஞருமான ராகுல் ஷர்மா தி வயர் இணையதளத்திடம், “பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை பாதிப்புக் குறித்து குஜராத் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது” என்றார். “குஜராத் அரசு சோதனை செய்யும் வசதிகள், உயிர் காக்கும் கட்டுமானம் ஆகியவற்றில் தனது திறனைக் கட்டி வளர்ப்பது பற்றி கவலைக் கொள்ளவில்லை” என்றார். “பொன்னான நேரத்தை வீண்டித்து விட்டது” என்றார்.

அகமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் தி வயர் இணையதளத்திடம், திடீர் கொரோனா அதிகரிப்புக் குறித்து சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்குத் தான்  கொண்டு சென்றதாகவும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார். “குஜராத் உள்ளாட்சி தேர்தல் அந்த நேரத்தில் நடந்து வந்ததால் அதுவரை சுகாதாரத் துறையை அமைதி காக்குமாறு அரசு கூறியிருக்கலாம்” என்றார்.

மேலும் “எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தன்னை விளம்பரபடுத்துவதிலே அரசு கவனம் செலுத்தியது. இந்த நோய் அதிகரிப்பு என்பது தவறான நிர்வாகம், அராஜகம் ஆகியவற்றின் விளைவு என்றார். மேலும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை முழுமையாகத் தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

அகமதாபாத்வாசியான ஹரிதா தேவ், இது குறித்து தி வயரிடம் பேசுகையில், ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவே இல்லை என்று கூறினார். ஏப்ரல் 13 அன்று,  மிக மோசமான நிலையில் உள்ள 58 வயதுடைய பக்கத்து வீட்டு நோயாளிக்காக ஆம்புலன்சை அழைத்தார் அவர்.

“108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது, தற்போதைய சூழ்நிலை காரணமாக எந்த ஆம்புலன்சும் இல்லை. உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்கிறோம். கூடிய விரைவில் அழைக்கிறோம் என்று கூறினர். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், இன்னும் ஆம்புலன்ஸ் தேவையில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டு ஒரு அழைப்பு வந்தது” என்றார், தேவ்.

மெஹல் நரேந்திரபாய் என்ற மற்றொரு அகமதாபாத் வாசி ஒரு ஆம்புலன்சிற்காக ஏப்ரல் 14 அன்று காத்திருந்தார். “நாங்கள் மாலை 3.30-க்கு ஆம்புலன்சை அழைத்தோம். ஆனால் மறுநாள் அதிகாலை 1.00 மணிக்குதான் எங்களை அழைத்தனர். இதற்கு இடைபட்ட நேரத்தில் நாங்கள் நகரத்தில் உள்ள 50 முதல் 60 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு ஒரு எமர்ஜென்சி கேஸை எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டோம்.  ஆனால், படுக்கைகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர்’’ என்றார்.

ஏப்ரல் 13 அன்று, ஆல்ட் நீயூசின் இணை நிறுவனர் பிராத்னிக் சின்கா, “ஆம்புலன்சுகள் ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டை மிக வேகமாகக் கடந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இரண்டு சைரன் சத்தங்களுக்கு இடையிலான காலகட்டம் 5 நிமிடத்திற்கும் குறைவாக இருக்கிறது. இவை அகமதாபாத்தின் நிலை எவ்வாறு மோசமாக இருக்கிறது என்று அச்சுறுத்துகிறது’’ என்று தனது ட்விட்டில் தெரிவித்தார்.

சந்தேஷ் என்ற பிரபலமான குஜராத் தினசரியை சேர்ந்த இம்தியாஸ் உச்சைன்வாலா, ரோனக் ஷா ஆகிய இரு செய்தியாளர்களும் கோவிட்-19 நெருக்கடி குறித்து ஆய்வு செய்யும் முகமாக ஏப்ரல் 11 அன்று இரவு அகமதாபாத்தில் உள்ள ஒரு அரசு மருத்தவமனைக்கு சென்றிருந்தபோது அங்கு 63 பிணங்கள் பிணவறையிலிருந்து எடுத்து சென்றதை பார்த்தனர்.

“நாங்கள் பிணங்களை எண்ணினோம். அந்த ஒரு மருத்துவனையிலிருந்து மட்டுமே மொத்தம் 63 பிணங்கள்’’ என்று அந்த இரு நிருபர்களும் தி வயர் இணையதளத்திடம் கூறினர். “எரியூட்டும் இடம் குறித்து இரவு ஆய்வுக்கு சென்றிருந்த எங்கள் மற்ற நிருபர்கள்  அந்த மருத்துவமனையிலிருந்து வந்த அந்த 63 பிணங்களும் அரசின் கோவிட் வழிமுறைப்படி எரியூட்டப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர்.

இதைபோல் மற்ற மருத்துவமனையிலிருந்தும் கொண்டுவந்து பிணங்களை எரித்தனர். ஆனால், அகமதாபாத்தில் கோவிட் மரணங்கள் பற்றி ஏப்ரல் 12 அன்று அறிவிக்கப்பட்டபோது, 20 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கபட்டது. அரசின் இந்தக் கணக்கு அபத்தமானது.’’

காங்கிரஸ் தலைவர் சோலங்கி, குஜராத் அரசு கொரோனா குறித்த அனைத்து  விவரங்களைக் குறைத்துக்காட்டி கொடுக்கப்படும் அறிக்கைகள் இப்போது அம்பலபட்டுவிட்டது என்று தி வயரிடம் கூறினார்.

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பாதித்து அகமதாபாத் ஷ்ரேய் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருந்தார் வழக்கறிஞர் சுஹல் திர்மிஜி.  அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட  துயர தீ விபத்தில் தன் மனைவியைப் பறிகொடுத்த அந்த வழக்கறிஞர்  குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கடுஞ்சீற்றத்தில் உள்ளார்.

“புதிய விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக அல்லது தமது பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கான ஆலோசகர்களை அமர்த்திக் கொள்வதற்குப் பதிலாக தேவையான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்கள், ஊசிகள், பிராணவாயு உருளைகள் வாங்க கவனம் செலுத்த வேண்டும்’’ என்று அவர் தி வயர் இணையதளத்திடம் கூறினார். “மேலும் அவர்கள் மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டர்களின் ஆற்றல் பயன்பாட்டை சோதிக்க மின் பொறியாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வெண்டிலேட்டரில் ஏற்பட்ட தீ தான் என் மனைவியின் உயிரைப் பறித்தது” என்று கூறினார்.

வைரலாக சென்ற அரசியல்

இந்த சூழ்நிலையில் கூட, குஜராத் மக்கள் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டுவதில்லை. அவர் பிறந்த நகரம் அகமதாபாத். அவர் இந்தியப் பிரதமராகுவதற்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

உண்மையிலேயே,  மோடி இப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதுதான் இப்போது பாடப்படும் பல்லவி.

ஒரு டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிக்காக 9 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரனய் தாக்கர், “மோடி இருந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும். இப்பிரச்சினைகள் எல்லாம் 48 மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்கும். நான் கடவுள் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்திருப்பது போல் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள பிரிதிபென் பட் என்ற பெண்மணி இந்த சூழ்நிலை ஏற்பட்டதற்கு மோடியின் தவறு காரணமல்ல என்கிறார். “உண்மையிலேயே, மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் கொரோனா குஜராத்தை நெருங்கியிருக்காது’’ என்கிறார்.

ஆனால், சில மக்கள் இந்த நம்பிக்கையுடன் ஒத்துப் போகவில்லை. காந்தியை பற்றி படிக்கும் மாணவரான பிரவின் மக்வானாவை பொறுத்தவரை, குஜராத் அரசு இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையை,  குஜராத் மாடலில் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது. (பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முன்னுதாரணமிக்க மாநிலம். இந்த குஜராத் மாடலை மற்ற எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்) “குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது” என்றார், மக்வானா.

குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் வியாழன் (15.04.2021) பதில் அளிப்பதற்குத் தயாராக,    புதன்கிழமை அன்றே நடமாடும் ஆர்.டி-பி.சி.ஆர் (Drive in RT-PCR) சோதனை மையம், 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவனை கோவிட் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு, கூடுதலான பிராண வாயு சப்ளை, மேலும் கள்ளச் சந்தையை கண்காணிக்க ஒரு அவசர சிறப்புக் குழு என மற்ற சில திட்டங்களுடன் ரெம்டெசிவர் மருந்து குறித்த நிலைப்பாட்டையும் திட்டமிட்டது.

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம், குஜராத் போலீசு, பல்வேறு நகராட்சி அலுவலகத்தின் ஊழல் தடுப்பு துறைகள் ஆகியவை இந்த கண்காணிப்பை நல்ல முறையில் செயல்படுத்தப் பொறுப்பேற்கும்.

பிரபல அகமதாபாத் மருத்துவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான மருத்தவர் ஜிடுபாய் பட்டேல், அரசாங்கத்தின் இத்திட்டங்கள் குறித்து கிண்டலடித்துள்ளார். “இன்னும் படுக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, குஜராத் சூழல் கட்டுக்குள் உள்ளது. ஊடகங்களால் சூழல் கைமீறியதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று அரசாங்கம் சொல்கிறது, அப்படி என்றால் 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவமனையை இரண்டு வாரத்தில் அகமதாபாத்தில்  அமைக்க மத்திய அரசிடம் ஏன் விஜய் ரூபானி கேட்டிருக்கிறார்?” என்று கேட்கிறார் மருத்துவர் பட்டேல்.

படிக்க :
♦ வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்

♦ கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

இது ஒரு அரசியல் கேள்வி, ஆனால் சரியான கேள்வி. குஜராத்தில் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அரசியல் ஆளுமை செய்வதாகத் தெரிகிறது. இவற்றை அரசின் மிக மோசமான நிர்வாகக் கோளாறு என்று விமர்சிக்கும் காங்கிஸ் கட்சி, குஜராத் அரசின் திட்டங்கள் எல்லாம் மேலோட்டமானவைதான் என்று சொல்கிறது.

பி.ஜே.பி-யின் எதிர் கட்சிகள் குஜராத் மாடல் என்பதே மோசடியானது என்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கூற்றை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 11 அன்று, சுயட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி, கொரோனா சூழ்நிலையை குறைத்துக்காட்டி நிர்வாக கோளாறு செய்து அனேக மக்களை மரணத்திற்கு தள்ளும் உங்களை குஜராத் ஒருபோதும் மன்னிக்காது என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், அப்பட்டமான மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் குஜராத் தொடர்ந்து துன்புறுகிறது.

தி வயர் இணையதளம், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரையும், செயலரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், அவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.


கட்டுரையாளர் : தீபல் திரிவேதி
தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க