ந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்புகளால் முடங்கிப் போயிருக்கிறது. மாநில அரசுகள் கடுமையான நிதிச் சுமையில் சிக்கியுள்ளன. மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறுவதற்கு நிபந்தனையாக 4 முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்துள்ளது மோடி அரசு.
பொதுவாக மாநில அரசுகள் தங்களது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.5% அளவிற்கான தொகையை மத்திய அரசிடமிருந்து கடனாகப் பெறலாம்.

கொரோனா பிரச்சினையால் அனைத்து மாநிலங்களும் நெருக்கடியில் உள்ளநிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் கடன் தொகையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5% என்ற அளவில் இருந்து 5% வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் கூடுதலாக கொடுக்க இருக்கும் 1.5% தொகைக்கு 4 முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது மத்திய அரசு.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம், தொழில் செய்வதற்கான நிலைமையை மேம்படுத்துதல், மாநில மின் விநியோக நிறுவனங்களை இலாபமாக இயக்கும் வகையில் சீர்திருத்தங்கள், நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரித்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனையிட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 1.5% கூடுதல் தொகையில் ஒவ்வொரு நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கும் 0.25% அதிகரிக்கும். ஆக நான்கு நிபந்தனைகளுக்கு மொத்தமாகச் சேர்த்து 1% வரை அதிகரிக்கப்படும். மீதமுள்ள 0.5% கூடுதல் தொகை, மூன்று நிபந்தனைகளோ அதற்கு மேலோ நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை இரண்டு நிபந்தனைகளை மட்டும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 0.5% மட்டுமே கூடுதல் கடன் வழங்கப்படும். மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 1.25%-மும், நான்கையும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே 1.5% மூம் கூடுதல் கடனாக வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த நிபந்தனைகளுடன் கூடிய கடனை, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதில் மற்ற மாநிலங்கள், தங்களுக்கு மத்திய அரசு வரி வருவாயில் தர வேண்டிய பணத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடி வருகின்றன. ஆனால் தமிழக அரசோ பாஜக அரசின் கொத்தடிமையாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடியில், கொரோனா கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார வீழ்ச்சியின் பழிபாவத்தைத் தன் மீது ஏற்றுக் கொண்டுள்ளது கொரோனா. “எரியும் வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்” என்ற வகையில்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பில் சிக்கிக் கிடக்கும் மக்களை இன்னும் வக்கிரமாகச் சுரண்டும் வகையிலேயே மாநில அரசுகளுக்கான இந்த நிபந்தனைகளை விதித்துள்ளது. முதல் நிபந்தனையான, ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு போன்ற திட்டங்கள் அனைத்தும், மாநில சுயாட்சியை ஏட்டுச் சுரைக்காயாக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவின் ஒரு பகுதியாகவும், கார்ப்பரேட்டுகளின் திறந்தவெளிக் கொள்ளைக்கு ஏற்றவகையிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் மலிவான மனித உழைப்புச் சக்தி தட்டுப்பாடில்ல்லாமல் கிடைக்கவும் ஏற்றவகையில்தான் “ஒரே நாடு ஒரே ரேசன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிறது மோடி அரசு.

இரண்டாவது நிபந்தனை, தொழில் தொடங்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல். இந்தியா முழுவதும் தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு விதிமுறைகளை சட்டத்துக்குப் புறம்பாக மீறி சுற்றுச் சூழல் சீர்கேடுகள், தொழிலாளர்களை சுரண்டுதல், வரி ஏய்ப்பு, மின்சாரத் திருட்டு ஆகியவற்றை செய்து வருகின்றன. அதனை சட்டப்படி அவர்களுக்கு செய்து கொடுப்பதற்கான உபாயத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறது மத்திய அரசு. யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு முடக்கி வைத்திருப்பது ஒரு உதாரணம்.

அடுத்ததாக மின் விநியோகம் தனியார்மயமாக்கும் மசோதாவை இரண்டு மாதங்களுக்கு முன்பே கருத்துக் கேட்புக்கு விட்டிருந்தது மத்திய அரசு. அதன் சாராம்சமே மின் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியார்மயப்படுத்துவதும், மின் தட பராமரிப்பை மட்டும் அரசின் தலையில் கட்டுவதும் தான். அதன் ஒரு அம்சமாக மாநில மின்சார வாரியங்கள் மானியங்களைக் குறைத்து இலாபமீட்டலில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது மோடி அரசு.

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

மாநில அரசுகளுக்கு விவசாயிகள் நலனில் அக்கறையில்லை என்றாலும்கூட தங்களது ஓட்டு வங்கியில் அக்கறையுண்டு. அதற்காகவாவது, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தின் மீது கைவைக்கத் தயங்குவார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியாத ரகசியமல்ல. இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கப்படும் மானியத் தொகையை ரத்து செய்வது, அதன் மூலம் மின்சார விநியோகத்தை முழுக்க தனியார் கையில் எவ்விதப் பிரச்சினையுமின்றி தாரைவார்க்கவே இந்த நிபந்தனையையும் மோடி அரசு வைத்திருக்கிறது.

நான்காவதாக, நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க வேண்டுமென்கிறது. சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர்வரி உள்ளிட்டவற்றை அதிகரிப்பதுதான் அத பொருள். மக்களிடமிருந்து வரி மூலம் கூடுதல் பணத்தைக் கறக்க மாநில அரசுகளை நெட்டித் தள்ளவே இந்த நயவஞ்சக கடனளிப்பு ‘சலுகையை’ வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்ட ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய சேவை நிறுவனங்கள் கையாளும் மிகக் கீழ்த் தரமான நடைமுறைதான் கடன் கொடுத்து அடிமைத் தனமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்வது. இதனையே தனது சொந்த மாநிலங்களுக்கு நடைமுறைப்படுத்துகிறது மத்திய அரசு
மாநிலங்களின் வரி உரிமையை ஜி.எஸ்.டி மூலம் பறித்ததோடு, மாநிலங்களுக்கான பங்கையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. ஏழைகளின் இக்கட்டான தருணங்களில், “பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டி அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சொத்தையும் கொள்ளையடிக்கும் கந்துவட்டிக் கும்பல் போல, கொரோனா நெருக்கடியும், தொழில் முடக்கமும் மக்களை முடக்கியிருக்கும் சூழலில், மாநில அரசுகளுக்கு பணத்தைக் கடனாகக் கொடுக்கக் கூட அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டு வாங்குகிறது மோடி அரசு.


நந்தன்
நன்றி : த பிரிண்ட். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க