மோடியின் தடுப்பூசி ஜூம்லா :

கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 30.06.2021 அன்று தமிழக சுகாதாரத் துறையின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தமது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை தோழர் மாவோ சீனாவில் ஏற்படுத்தியிருந்த சோசலிசக் கட்டமைப்பே ஆகும். மேலும் இன்று ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனாவில், தடுப்பூசி உற்பத்தி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கான உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருக்கிறது சீனா.

இத்தகைய உட்கட்டமைப்பைக் கொண்டுள்ள சீனா, கடந்த மாதத்தில் இருந்து தினமும் சராசரியாக 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய உட்கட்டமைப்போ, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடோ, அதனை அதிகமாக உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்போ எதையும் உருவாக்க வக்கற்ற மோடி அரசு, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதியன்று ஒரே நாளில் அதிகமான தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்ததாக மோடி அரசு பெருமை கூறிக் கொண்டது.

அதற்கு முந்தைய இருநாட்களுக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்காமல் தேக்கி வைத்து குறிப்பான நாளில் அந்த தடுப்பூசிகளை எல்லாம் போட்டு சாதனை செய்ததாக பீற்றிக் கொண்டது அடுத்த சில நாட்களில் அம்பலமானது.

பிரதமர் மோடி, தனது மான்கிபாத் உரையில், 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 130 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். ஆனால் தடுப்பூசியை கூடுதலாக தயாரிப்பதற்கான திட்டமோ, தயாரிப்போ எதுவும் இல்லாமல் இப்படி வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி என்பதுதான் இன்று தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலைமை எடுத்துக் காட்டுகிறது.

0-0–0-0-0

உலகச் சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் கோரும் ‘வேத புத்திஜீவி’ ஹர்ஷ்வர்தன்!

கடந்த ஜூன் 30-ம் தேதியன்று ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் இணையக் கூட்டம் ஒன்றில் இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், உலக சுகாதார அமைப்பில் (WHO) ஒரு மிகப்பெரிய அவசர சீர்திருத்தம் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சீனா, ரசியா, இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில்தான் இதனை ஹர்ஷ்வர்தன் பேசியுள்ளார்.

மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் கொரோனாவுக்கு மருந்தாகவும், “கோ..கோ.. கொரோனா” என்று கூவிக் கொண்டே தட்டையும் கரண்டியையும் தட்டுவதை கொரோனாவுக்கு எதிரான போராகவும் வெளிப்படையாகக் கூறிய மாபெரும் அறிவுஜீவிகளைக் கொண்ட கட்சி பாஜக.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன்

இத்தகைய அறிவார்ந்த ஒரு கட்சி ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஹர்ஷ் வர்தன். அவரது அறிவியல் அறிவும் மேற்கூறிய அறிவுஜூவிகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல.

உலகப் புகழபெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் இறந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷ்வர்தன், பிரதமர் மோடியின் முன்னிலையில், “ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என ஆதாரத்துடன் ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் பதிவு செய்துள்ளார்” என்று கூறினார். பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பியபோது, இப்போதாவது ஆதாரத்தை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள், கிடைக்கவில்லை எனில் நான் தருகிறேன் என்று கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு கூட்டத்தில், அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

சொந்த வகையிலும், கட்சிரீதியாகவும் இத்தகைய ‘அறிவியல்’ பின்புலம் கொண்ட ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பில் அவசரமான சீர்திருத்தத்தை கோரியிருக்கிறார். எவ்வகையிலான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஹர்ஷ்வர்தன் சிந்தித்திருப்பார் ?

ஒருவேளை பிரக்யா சிங் உட்பட பாஜகவின் பல பிரமுகர்களும் கொரோனாவை ஒழிக்கும் மருந்தாக அறிவித்துள்ள மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச கொரோனா நிவாரணியாக அறிவிப்பதைத் தான் சீர்திருத்தம் என்று கூறியிருப்பாரோ ?

0-0-0-0-0

மோடி : ஜி.எஸ்.டி ஒரு மைல் கல் !

இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி, ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது வெளிப்படைத்தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும். அதே வேளையில், சாதாரண மனிதர்கள் மீதான வரிகள், இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மோடி.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சிறு வணிகத்தை உயிரோடு புதைத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது. இந்த மாபெரும் அவலத்தின் 4-ம் ஆண்டு நிறைவு ‘நினைவு நாளை’ ஒட்டியே டிவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் மோடி.

உண்மையில் ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதார அமைப்பின் ஒரு மைல்கல் தான். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒரே ஒரு விசயம்தான். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் பாயத் துவங்கிய புள்ளியின் மைல்கல் தான் அது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பழிப்பு திட்டத்தை அறிவித்து இந்தியப் பொருளாதாரத்திற்கு மோடி தீவைத்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

அன்று வீழத் துவங்கிய சிறு வணிகர்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோரின் வாழ்க்கையை, மொத்தமாகக் கவிழ்த்துப் போட்டதில் முக்கியப் பங்கு ஜி.எஸ்.டியினுடையது.

பெரும் மூலதனத்துடன், பெருவித உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் தயாரிக்கும் பொருளுக்கும் ஒரே வரி, சிறுவித அளவில் உற்பத்தி செய்யும் சிறு தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருளுக்கும் ஒரே வரி என ஜி.எஸ்.டியைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்க்கையை வீழ்ச்சிக்குத் தள்ளியவர் மோடி.

சிறு, குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் மற்றும் இத்தொழிலைச் சார்ந்து வாழும் தொழிலாளர்கள் என பலரது வாழ்வாதாரத்தைப் பறித்ததன் மூலம், மக்களின் ‘வாங்கும் திறனில்’ பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேக்கம் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு நினைவுநாளாக இன்றைய தினத்தை மோடி ‘கொண்டாடுகிறார்’.

0-0-0-0-0

சரண்
செய்தி ஆதாரம் : தினமணி

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க