காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

0

கிட்டத்தட்ட 23 லட்சம் பாலஸ்தீன மக்களை உள்ளடக்கிய காசா பகுதியில் தோராயமாக 50,000 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 150 பிரசவங்கள் அங்கு நடைபெறுகின்றன.

இஸ்ரேல் மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டதால் செல்ஃபோன் ஒளியைப் பயன்படுத்தி பிரசவம் பார்க்க வேண்டிய நிலைக்கு காசாவில் உள்ள மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், தான் செல்ஃபோன் ஒளியைப் பயன்படுத்தி இரண்டு பெண்களுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்ததாகவும், தனது கைகளைக் கழுவக்கூட மருத்துவமனையில் போதுமான நீர் இல்லை என்றும் என்.பி.ஆர் (NPR) என்னும் அமெரிக்க சுதந்திர ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

மின்சாரம் மட்டுமல்ல, தண்ணீர், மருந்துகள், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

காசாவுக்குத் தேவையான நீரில் 30 விழுக்காட்டை இஸ்ரேல் வழங்கி வந்தது. மீதமுள்ள நீர் தேவை கடல் நீரை சுத்திகரிப்பதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இஸ்ரேல், தான் வழங்கி வந்த நீரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடல் நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளையும் நிறுத்திவிட்டது. தண்ணீரை மறுத்து நீர் என்பதை ஒரு பேரழிவு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


உலக சுகாதார நிறுவனம், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீர் கிணறுகள், கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை இயக்க போதுமான மின்சாரம் இல்லை என்றும், கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் தெருக்களில் குவிந்துள்ளதாகவும் அக்டோபர் 12-ஆம் தேதி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் ஆறு நீர் கிணறுகள், மூன்று நீர் உந்து நிலையங்கள், ஒரு நீர்த்தேக்கம் மற்றும் 11 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை ஆகியவை சேதமடைந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதி பாலஸ்தீன மக்கள் அதிக உப்புக் கலந்த நீரைக் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீரை பேரழிவு ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இஸ்ரேலின் இந்த கொடூரத்தை வாட்டர் ஜஸ்டிஸ் (Water Justice) என்ற அமைப்பு தொடர்ந்து ஆவணப்படுத்தியுள்ளது.

மேற்குக் கரையில் (West Bank) உள்ள குடியிருப்புகளில் வாழும் 6,50,000 சட்டவிரோத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு, அங்குள்ள 30 இலட்சம் பாலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கப்படுவதை விட ஆறு மடங்கு அதிக தண்ணீர் ஒதுக்கப்படுகிறது. மேற்குக் கரையில் வாழும் இஸ்ரேலிய குடியேறிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 700 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதே வேளையில், பாலஸ்தீன மக்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 10 – 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான குறைந்தபட்சம் 100 லிட்டர் / நபர் / நாள் என்ற பரிந்துரையைவிட இது மிகவும் குறைவானது.

கோடைக்காலத்தில் சட்டவிரோத யூத குடியேறிகளின் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாலஸ்தீனியர்களுக்கான நீர் விநியோகத்தை இஸ்ரேல் 50 விழுக்காடு வரை குறைக்கிறது. மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 2,00,000 பாலஸ்தீனியர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால், யூத குடியேறிகளுக்கு தனிப்பட்ட பயன்பாடு, நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், பண்ணைகள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு போதுமான நீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது.


படிக்க: இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!


நாஜிக்கள் போலந்தை ஆக்கிரமித்தபோது, கெட்டோ மயமாக்கப்பட்ட வார்சா பகுதிக்கு தண்ணீர், மருந்து, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கிடைக்காமல் செய்தனர். அதையேதான் இஸ்ரேல் தற்போது காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்குச் செய்து வருகிறது.

இஸ்ரேலின் வழிமுறைகள் மட்டும் நாஜிக்களை ஒத்திருக்கவில்லை; அவர்களின் சொல்லாட்சியும் கூட நாஜிக்களைப் போலத்தான் உள்ளது. நாஜிக்கள் யூதர்களை விலங்குகள் என்று கூறினார்கள். அதையேதான் இஸ்ரேலிய அரசும் கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் “நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும்” என்று கூறியுள்ளார்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க