பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!

இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.

யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசின் வரைமுறையற்ற தாக்குதல்கள் மீண்டும் 1948 பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் நாக்பா படுகொலை கொடூரத்தை மனிதாபிமான சிந்தனையுள்ள அனைவருக்கும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டது. 1948-இல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் குடும்பம் குடும்பமாக யூத இனவெறி பயங்கரவாதிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இதுதான் நாக்பா படுகொலை எனப்பட்டது.

இன்றும் அதே திமிரோடும், ஈவிரக்கமின்றியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான உளவியல் தயாரிப்புகள் இஸ்ரேலில் மட்டும் உருவாக்கப்படவில்லை.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிக்கி ஹேலி, அக்டோபர் 10 அன்று பாக்ஸ் நியூஸ் ஊடகத்தில் பேசுகையில், “ஹமாஸ் தாக்குதல் என்பது இஸ்ரேலின் மீது மட்டுமல்ல; அது அமெரிக்காவின் மீதான தாக்குதலாகும்” அறிவித்தார். அப்போது “நெதன்யாகு, அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுங்கள், ஒட்டுமொத்தமாக அழித்து விடுங்கள்… ஒட்டுமொத்தமாக அழித்து விடுங்கள்” என்று வெறியோடு கூச்சலிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் அக்டோபர் 7 ம் தேதியை செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு ஒப்பிட்டனர். இது மதரீதியாக வெறுப்புணர்வை ஊட்டுவதன்றி வேறில்லை.


படிக்க: இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!


அமெரிக்காவின் செனட் உறுப்பினர் லிண்ட்சி கிரஹாம், அக்டோபர் 11-ஆம் தேதியன்று அதே பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில், “நாங்கள் இங்கு மதப்போரில் இருக்கிறோம். நாங்கள் உங்களின் வசிப்பிடங்களை தரைமட்டமாக்குவோம்” என்று வெறியூட்டினார்.

நெதன்யாகுவின் லிகுத் கட்சி உறுப்பினர் ஏரியல் கால்நெர் “தற்சமயம் ஒரே ஒரு இலக்குதான், அது நாக்பா. இந்த நாக்பா 1948 நாக்பாவை ஒன்றுமில்லாததாக்கிவிடும்” என்று கொலைவெறியோடு பேசியுள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யாவவ் காலண்ட் “நாங்கள் மனித மிருகங்களோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம், ஆகவே, அதற்கு தகுந்த முறையில் நாங்கள் செயல்படுவோம்” என்றார். மேலும் “அங்கு மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் இனி இருக்காது. அனைத்தும் மூடப்படும்” என்று அறிவித்தார்.

இவையெல்லாம் ஒரு சில சான்றுகளே. இது ஹமாஸின் மீதான தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் என்று அறிவித்துவிட்டுத்தான் ஒரு இன அழிப்புப்போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இனவெறியையும், மதவெறியையும் தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதுவும் ஒளிவுமறைவாக நடக்கவில்லை.


படிக்க: இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!


இந்தியாவின் பிரதமர் பாசிஸ்ட் நரேந்திர மோடியோ, இந்தியாவின் நீண்டகால வெளியுறவு கொள்கையை ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிட்டு இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் செய்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், உலகம் முழுக்க உள்ள வலதுசாரி பாசிச பயங்கரவாதிகளும் யூத இனவெறி இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம். அதற்கேற்ப  வலதுசாரி பாசிச பயங்கரவாத கூட்டிணைவை சாத்தியமாக்கியுள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நாளை இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான இனப்படுகொலையை நடத்துவதற்கு வலதுசாரி பயங்கரவாதிகள் உலகளவில் ஒன்றிணைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுரண்டலுக்கான கொடுங்கோன்மை நிலைநாட்டப்படும்.

விரைவாக நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போரை, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான போரை உலகளவில் கட்டியமைக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க