PP Letter head

19.07.2021

தமிழக அரசே !
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே !
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !

பத்திரிகை செய்தி

கொரோனா நெருக்கடி அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, 15 உயிர்களை இழந்து மக்களால் போராடி மூடப்பட்ட நாசகார ஸ்டெர்லைட்டை மீண்டும் சதித்தனமாக திறப்பதற்கான முயற்சியை ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டது. இது தமிழக மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மக்கள் இத்தகவலை தெரிந்தவுடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என்பதை அதன் மூலம் அரசிடமும், நீதிமன்றத்திடமும் பதிவு செய்தனர். மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தின் வாயிலாக கடந்த ஏப்ரல் 27 ம் தேதி திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தின் மூலம் மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணி தான் என்பதை நிரூபித்தனர் .

ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதிபடி அளித்த 1050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவில்லை. ஒரு நாளைக்கு 30 டன் ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்தது. அதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததை பலரும் அம்பலப்படுத்தினர். இப்படிப் பொய்யான வாக்குறுதியை அளித்து, அராஜகமாக நடந்துக் கொண்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை உச்சநீதிமன்றமோ, தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளோ எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.

படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற எந்த ஒரு தனியார் நிறுவனமும் செய்யாத ஒரு வேலையை ஒன்றிய அரசு நிறுவனங்களின் உதவியோடு ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தது. அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று! “ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான மனநிலையை உருவாக்குவதற்கான வேலையை திட்டமிட்டு நடத்தின.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்களை சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டன. அதில் அந்நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அங்குள்ள அறிவிப்பு பலகையிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் தான்உதவிகள் செய்ததை விளம்பரப்படுத்திக் கொண்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் கேள்வி எழுப்பவில்லை. மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்த பின்பு, மாவட்ட நிர்வாகம் கட்டில்களில் உள்ள வேதாந்தா என்ற பெயரினை மட்டும் அழித்து “நடவடிக்கை” எடுத்தது. தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, ஸ்டெர்லைட் என்கிற ஓநாய்க்கு ஆக்சிஜன் தயாரிக்க ஆதரவு அளித்த ஆளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் யாரும் பொங்கி எழவில்லை.

தொடர்ந்து அந்த ஓநாய் கிராமப்புறங்களில் தனது ஆதரவாளர்களை தனக்கு ஆதரவாக பேச வைத்து சட்டவிரோதப் பணியை அதிகார வர்க்கத்தின் ஆசியோடு தடையின்றி தொடர்ந்தது.

இச்சூழ்நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஜூலை 31 க்குப் பிறகு ஸ்டெர்லைட்டை மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “தற்போதைக்கு என்ன அவசரம்? தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் வரட்டும், அதற்குபிறகு மூடுவது பற்றி யோசிக்கலாம்’’ என்று ஸ்டெர்லைட்டின் குரலாக பேசுகிறார் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். தற்போது அந்தர்பல்டி அடித்து மாற்றி பேசுகிறார்கள். மக்களை எவ்வளவு கிள்ளுக்கீரையாக நினைத்தால் இவர்கள் இப்படி பேசவார்கள்?

அன்று எதிர்கட்சிகளாக இருந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிலம்பம் சுற்றிய இதர கட்சிகள் தற்போது வாய்ப்பொத்தி அமைதிகாக்கின்றன. உதிரம் சிந்தி, உயிர் கொடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், ஓநாய்க்கு ஆதரவாக சுகாதாரத்துறை அமைச்சர் பேசியதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? நாங்களும் கார்ப்பரேட்டுகளின் ஆட்கள்தான் என்பதைத்தானே இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கெதுவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளின் / பல்வேறு அமைப்புகளின் கள்ளமவுனத்திற்கு காரணம் என்ன?

இன்னும் 6 மாதத்திற்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி தேவை என்று கடந்த ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஜூலை 22-ல் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மறுபடியும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை நீட்டிப்பதை அறிவிப்பதுதான் அடுத்தகட்ட திட்டமாக இருக்கும்.

தூத்துக்குடி மக்களை, உயிர்நீத்த தியாகிகளை இதைவிடவும் அவமானப்படுத்த முடியுமா?

அதிகார வர்க்கத்தின் துணையோடு நிறுவனத்தை திறப்பதற்கான வேலைகளை கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனம் வேகப்படுத்தி கீழறுப்பு வேலைகளையும் வெளிப்படையாக செய்து வருகிறது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த வழியும் இல்லை!

தமிழக அரசே!
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே!
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு!
தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் !
அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு !
ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்!

தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
91768 01656