க்சிஜன் தயாரிக்கும் அனுமதி ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருப்பதால், தங்களுக்கு மேலும் 6 மாத கால நீட்டுப்பு வழங்க வேண்டும் என்று ஜூலை 7, 2021 அன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா நிறுவனம்.

கொரோனா இரண்டாம் ஆலை தீவிரமாக இருந்தபோது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்தது. தமிழகத்திலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இந்தச் சூழலை பயன்படுத்தி, தமது ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்ற வாதத்தை முன் வைத்து வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். 

நாள் ஒன்றிற்கு 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குவதாகவும் கூறியது. நாடே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் சூழலை பயன்படுத்தி தனது நாசகர ஆலையை மீண்டும் துவங்குவதற்கான அனுமதியைக் கேட்டது.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்
♦ ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !

பின்வாசல் வழியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் வேதாந்தாவின் நரித்தனமான செயலுக்கு தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரித்தனர். அதனால் தூத்துக்குடியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றியது எடப்பாடி அரசு. அதிலும் தூத்துக்குடி மக்கள் பெரும்பான்மையாக “ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜன் எங்களுக்கு வேண்டாம். மூடியது மூடியதாவே இருக்கட்டும்” என்று உறுதியாக எதிர்த்தார்கள்.

மக்கள் எதிர்ப்பால் மண்ணைக் கவ்விய வேதாந்தாவும் எடப்பாடி அரசும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் தி.மு.க உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான முடிவை எடுத்து அம்மக்களுக்கு பெரும் அநீதியை இழைத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்ட பின்னர் தான் அந்த ஆலையில் அது குறிப்பிடும் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை தயாரிக்க முடியாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனிலும் பாதிக்கும் மேலாக வளிமண்டலத்தில் வீணாக்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது. இன்று வரையில் அந்நிறுவனம் உத்தரவாதமளித்த ஆக்சிஜனை தயாரிக்கவில்லை.

பொய் சொல்லி ஆலையைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், ஆக்சிஜன் தயாரிப்புக்குத் திறக்கப்பட்ட ஆலையை அப்படியே தொடர்ந்து தாமிர உற்பத்திக்கும் சேர்த்து திறக்கும் நோக்கத்தோடு, பல்வேறு வேலைகளைச் செய்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் சாதி ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சித்தது.

அதே போல பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரெடுக்கும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் தருவது, அதை செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து யோக்கியன் போல் காட்டிக் கொள்வது உள்ளிட்ட ‘ஸ்டண்ட்டுகளை’ செய்யத் துவங்கியது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த வசந்தி அம்மாள், சமீபத்தில் ரெட்பிக்ஸ் யூ-டியூப் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஸ்டெர்லைட் ஆலை மூடியிருக்கும் இந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறோம். ஆஸ்துமா இருக்கும் நபர்கள் கூட, தற்போது மூச்சுத் திணறல் ஏதும் தங்களுக்கு ஏற்படவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் தோலில் ஸ்டெர்லைட் மாசுபாட்டால் ஏற்படும் வடுக்கள் தற்போது இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31-க்கு பிறகு இயக்கவிடக் கூடாது. ஏனெனில், ‘ஸ்டெர்லைட்டை எப்படி மீண்டும் இயக்குவது’ என்பது குறித்து வேதாந்தா நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஒரு கிராமத்தில் பேசிய வீடியோவை நாங்கள் பார்த்து அதிர்ந்தோம்.

தூத்துக்குடியின் பல கிராமங்களில் புற்றுநோயாலும், ஆஸ்துமாவாலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் தினம் தினம் ஸ்டெர்லைட்டை மூடிவிடுவார்கள் தானே, அது மீண்டும் இயங்காது தானே என்று என்னிடம் வேதனையுடன் கேட்கிறார்கள். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றும் வரை உயிரை கொடுத்தேனும் போராடுவோம்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆலை முழுவதுமாக இயக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், சுற்றுச் சூழல் விதிகளை எல்லாம் குப்பையில் வீசிவிட்டு காற்றை மாசுபடுத்தி மக்களைப் படுகொலை செய்த கொலைகார ஸ்டெர்லைட் நிர்வாகம், மக்கள் மீது அக்கறைப்பட்டு ஆக்சிஜன் தயாரித்துக் கொடுக்கிறது என்றால் அது அப்பட்டமான பொய். ஏனெனில், முதலாவதாக தன்னால் எவ்வளவு ஆக்சிஜனைத் தயாரிக்க முடியும் என்பதையே மிகவும் மிகைப்படுத்திக் கூறிதான் அனுமதி வாங்கியது என்பது உறுதி.

இரண்டாவதாக, ஆலையில் அரைகுறையாக ஆக்சிஜன் தயாரிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தமது ஆலையை நடத்துவது தொடர்பாக மக்களிடம் பாகுபாட்டை உருவாக்கியிருக்கிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில், ஆலைத் திறப்பை நீட்டிக்க அனுமதி கேட்டு நேராக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது வேதாந்தா. நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணமாக முன் வைத்து ஸ்டெர்லைட் திறப்பை அன்று ஆதரித்த திமுக, சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் இன்று தாமாக முன் வந்து சட்டரீதியாகவும், களத்திலும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கப் போகிறார்களா ? அல்லது அமைதி காத்து வேதாந்தாவிற்கு விலைபோகப் போகிறார்களா ?


சந்துரு
செய்தி ஆதாரம் :
தினகரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க