வேதாந்தாவின் ஆக்சிஜன் கருணை, முதலாளித்துவப் பேரழிவே!

ருவேளை, வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தனது ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் வாக்குறுதியளித்தபடி நாளொன்றுக்கு 1,050 டன் மருத்துவ ஆக்சிஜனை வழங்கியிருந்தால், தமிழகத்தின் ஒருநாள் தேவையான 650 டன்னையும் அது பூர்த்தி செய்திருப்பதோடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்காக சிறிதளவு மிச்சப்படுத்தியிருக்க முடியும்.

எனினும், தி வயர் சயின்ஸ் (the wire science) பத்திரிக்கையாளார்கள் சந்தித்த வல்லுநர்கள், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திலிருந்து, மருத்துவ நோக்கங்களுக்காக நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஒரு வருடகாலம் ஆகவில்லையென்றாலும் சில மாதங்களேனும் ஆகும். அதுவரை, ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் இருக்கும் ஆலைகளை முறைப்படுத்தினால் படிப்படியாக 60 முதல் 100 டிபிடி (tonnes per day) வரை திரவ ஆக்சிஜனைத்தான் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !
புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

மேலும், வேதாந்தாவின் ஆக்சிஜன், மிகவும் செலவு செய்யக் கூடியதாகவும், வீணாகக் கூடியதாகவும் இருக்கும் என்றனர். அதே பணத்தைக் கொண்டு, குறைந்த விலை மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில், குழாய் வழியாக தொலைதூர இடங்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்கும் நீண்ட காலப் பயன்பாடுடைய உள்கட்டமைப்பை அமைக்க முடியும்போது எதற்காக இவ்வளவு செலவு செய்து (ஸ்டெர்லைட்டில்) ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும்?

மே 25 காலை வரை, தான் வாக்குறுதியளித்த 1,050 டன்னுக்கு மாறாக, நாளொன்றுக்கு 21 டன்னும், ஒரு வார இறுதியில் மொத்தம் 150 டன்னும் மட்டுமே வழங்கியுள்ளது அந்நிறுவனம். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டன் திரவ ஆக்சிஜனுக்கும் (Liquid Oxygen), வேதாந்தா 10 டன் வாயு ஆக்சிஜனை உற்பத்தி செய்து வீணடிக்கிறது. இந்த ஏழு நாட்களில், கிட்டத்தட்ட 1,500 டன் வாயு ஆக்சிஜனை (Gaseous Oxygen) வளிமண்டலத்தில் செலுத்தி வீணடித்துள்ளது.

வேதாந்தா தற்போது இயக்கி வரும் ஆக்சிஜன் ஆலையானது ஒரு பெரிய காப்பர் உருக்கும் வளாகத்தில் உள்ள பல ஆலைகளில் ஒன்றாகும். ஆக்சிஜன் ஆலையிலிருந்து வரும் முழு ஆக்சிஜனும் வாயு வடிவத்தில் தொடர்ச்சியாக ஸ்மெல்ட்டரின் உலைக்கு செல்லும். தற்போது அந்த ஸ்மெல்டர் ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளதால், அவை வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது.

மேலும், பொதுவாக ஒரு ஆக்சிஜன் ஆலை, தனது மொத்த உற்பத்தித் திறனில் 5% முதல் 10% வரை திரவ ஆக்சிஜனை (Liquid Oxygen) இருப்பு வைப்பது வழக்கம். ஒருவேளை ஆலை மூடப்பட்டால், திரவ நிலை ஆக்சிஜனை ஆவியாக்கி, உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக அது சேமித்து வைக்கப்படுகிறது.

“திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தி அளவு, ஆலையை வடிவமைக்கும் தொடக்க கட்டத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று” என்கிறார் ஐ.ஐ.டி கிரையோஜெனிக் பொறியியல் பேராசிரியரான காஞ்சன் சவுத்ரி.

கோப்புப்படம்

பெரும்பாலும் திரவ நிலை ஆக்சிஜனின் நிலையான அளவு ஆலையின் தொடக்க நிலை வடிவமைப்பின்போதே தீர்மானிக்கப்படும் என்பதால், தற்போதுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் வடிவமைப்பை மாற்றியமைத்தாலும், அதன் உற்பத்தியை சிறிதளவே அதிகரிக்க முடியும். தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள 10:90 விகிதத்திலிருந்து திரவ-வாயு ஆக்சிஜனின் விகிதத்தை கணிசமாக மாற்ற, ஆலை முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் – காற்றழுத்திகள் (Compressors) மற்றும் விசையாழிகள் (Turbines) போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவ வேண்டியிருக்கும். புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கு அதிக காலமும் பணமும் தேவைப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையின் கட்டமைப்போ, வாயுவாக 90 சதவீதமும், திரவ நிலையில் வெறும் 10 சதவீதமும் மட்டுமே ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரவ ஆக்சிஜனை மட்டும் தான் மொத்தமாக கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியும். வாயு ஆக்சிஜனும் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தேவைதான் என்றாலும், அதை கண்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்ல முடியாது. ஒருவேளை குறைந்த தூரமாக இருந்தால், வாயு ஆக்சிஜனை தயாரிக்கும் இடத்திலிருந்து பயன்படுத்தும் இடத்திற்கு குழாய்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதை டி-வகை (7மீ³ கொள்ளளவு கொண்ட சிலிண்டர்) சிலிண்டர்களில் நிரப்ப முடிந்தாலும் ஒரு மாவட்டத்திற்குள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். அதற்கும் அதிக செலவும், நேரமும் ஆகும்.

மே 23 அன்று, 29.06 டன் திரவ ஆக்சிஜனையும், 299 டன் வாயு ஆக்சிஜனையும் ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. முழு வாயு ஆக்சிஜனும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்டு வீணடிக்கப்பட்டது. இப்படி வீணடிக்கப்பட்ட 299 டன் வாயு ஆக்சிஜனையும் சிலிண்டர்களில் நிரப்ப வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள் தேவைப்படும். இது தற்போது உள்ள புள்ளிவிவரப்படி, மொத்த சென்னையின் தினசரி சிலிண்டர் தேவையை விட இரு மடங்கு அதிகம் ஆகும். சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் டி.சுவாமிநாதன் மற்றும் காஞ்சன் சவுத்ரி ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலையில் நடந்து வரும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பற்றி கருத்து தெரிவித்த போது, இந்தச் செயல்முறைக்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் என்பதால், நடைமுறையில் இது சாத்தியமற்றது என்றனர்.

வேதாந்தாவிடம் பெரும் பணம் இருந்தாலும், அது எப்போதும் அதனை செலவிடுவதில்லை.  பொது நலனுக்கென்று அது செலவு செய்வது இருக்கட்டும், சட்டப்பூர்வமாக அந்நிறுவனம் செய்ய வேண்டியதைக் கூட கடந்த காலங்களில் செய்ததில்லை.

கோப்புப்படம்

உதாரணமாக, மார்ச் 21, 2017 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த 31 வயதான கார்த்தீபன், கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தன் இடது கையை இழந்தார். தனது ஒரு வயது குழந்தையை பராமரிக்கவும் தன்னுடைய வாழ்க்கையை நடத்துவும் முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். வேதாந்தா நினைத்திருந்தால் அப்போதே அத்தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கியிருக்கலாம் – ஆனால் அதற்குக் கூட 18 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, அவர் வாழ்வதற்கான பணத்தைப் பெற ஆலை வாயிலுக்கு வெளியே போராட வேண்டியிருந்தது.

பொது சுகாதாரத்தில் இந்நிறுவனத்தின் விருப்பமின்மையை அம்பலப்படுத்தும் மற்றொரு உதாரணமும் உள்ளது. 2005-ம் ஆண்டில், உள்நோயாளிகள், புறநோயாளிகள் வசதியுடன் கூடிய ஒரு இலவச மருத்துவமனையை அமைக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கூறியது. இதைச் சட்டப்படி கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை மருத்துவமனை கட்டப்படவில்லை.

அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு

ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரிப்பது அதிக மின்சாரம் செலவாகும் ஒரு செயல்முறையாகும். அதை திரவமாக மாற்றுவும் அதிக மின்சாரம் தேவைப்படும். 1 மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு குறைந்தபட்சம் 0.9-1.0 கிலோவாட் (யூனிட்) மின்சாரம் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார் சவுத்ரி. இப்படி தயாரிக்கப்படுவதில் 10 சதவீதம் திரவ ஆக்சிஜனாகவும் 90 சதவீதம் வாயு ஆக்சிஜனாகவும் இருக்கும். ஸ்மெல்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட்டுக்கு வாயு ஆக்சிஜனுக்கான தேவை இல்லை – எனவே ஆலை 10 யூனிட் மின்சாரத்தை கொண்டு 1மீ³ திரவ ஆக்சிஜனை பெற 10மீ³ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 9 மீ³ வாயு ஆக்சிஜனை வீணாக்க வேண்டும். ஒரு டி-வகை சிலிண்டரை நிரப்ப, ஆலை குறைந்தபட்சம் 70 யூனிட் மின்சாரத்தை நுகரும்.

ஒரு டன் வாயுவை உற்பத்தி செய்ய (100 கிலோ திரவத்துடன் உற்பத்தி செய்ய) குறைந்தபட்சம் 700 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இது ஒரு குறைந்தளவிலான மதிப்பீடே.

மே 25, 2021 அன்று காலை 6 மணி நிலவரப்படி, வேதாந்தா 1,653.64 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ததாகக் கூறியது. இதில் 1,491 டன் வாயு ஆக்சிஜன் வீணாடிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கொள்கலனில் மருத்துவப் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்ட அளவு 150.58 டன் மட்டுமே, இது வீணான அளவில் பத்தில் ஒரு பங்கு ஆகும். ஸ்டெர்லைட் ஆலையின் இந்த உற்பத்தி நடவடிக்கை, ஒரு அறையை குளிர்விக்க ஒரு முழு கட்டிடத்திற்கும் குளிரூட்டுவதைப் போன்றதாகும்.

கோப்புப்படம்

150.58 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கான மின்சார செலவு சுமார் ரூபாய் 80 லட்சம் ஆகும். திரவ நிலை ஆக்சிஜனின் உற்பத்தியை மேம்படுத்த இரண்டாவதாக ஒரு ஆலையை இயக்கப்போவதாக வேதாந்தா தெரிவித்துள்ளது. இரண்டு ஆலைகளும் முழு கொள்ளளவோடு இயங்கினால், ஆக்சிஜனைப் பிரிப்பதற்கான மின்சார செலவு, 100 டன் உற்பத்திக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50 லட்சம் வரை ஆகும்.

இது ஒருபுறமிருக்க, ஆலையில் இருந்து ஆக்சிஜனை இலவசமாக வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செலவுகளோ அதிகமாக உள்ளன. மேலும் மருத்துவமனைக்கு நெருக்கமாக அமைந்துள்ள வேறு சில சிறிய ஆலைகளின் மூலம் இதைவிட இன்னும் சிறப்பாகவும் விலைகுறைவாகவும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பதே உண்மை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை கிட்டத்தட்ட குற்றத்திற்கு நிகரானதாகும்.

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது : வேதாந்தா ஏன் விருப்பத்துடன் இவ்வளவு பெரிய செலவைச் செய்கின்றது?

காற்றை நச்சுப்படுத்தியதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்களை மூச்சுத் திணறச் செய்ததற்காகவும் நிறுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தை அழைப்பதிலும், ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முனைவதிலும் உள்ள முரணைக் கண்டு வேதாந்தாவின் தாராள நன்கொடையின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெருந்தொற்று நோய் காலகட்டத்தின் போது ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வந்த ஒரு நிறுவனத்தை கேள்வி கேட்பது அற்பமானதோ அல்லது இழிந்தததோ அல்ல:

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்டுகள் !

வேதாந்தாவின் சலுகை (1050 tonne per day) ஒரு வெற்று வாக்குறுதியாக உள்ளது. இதனை ஆலையை மீண்டும் இயக்குவது என்ற அதன் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. ஒரு பெருந்தொற்றுச் சூழலில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் ஆலையின் மீது கேள்வி எழுப்ப வேண்டாம் என நாம் நினைத்தால் நம்முடைய உணர்ச்சி, அறிவை மறைக்கிறது என்று பொருள்.


அதியன்
மூலக் கட்டுரை : The Wire
கட்டுரையாளர் : நித்தியானந்த் ஜெயராமன்